நான் சுட்டு வைத்த ரொட்டியொன்று
வானத்தில் மிதக்கக் கண்டேன்..
சந்தேகம் தீர்க்கவென்று
பலமுறை பார்த்துக் கொண்டேன்..
இது அதே தான்..
நான் சுட்டு இறக்கும் போதிருந்த
ரொட்டிச் சட்டியின் கறைகள் அப்படியே
அடையாளமாய்..
அது எப்படி?
வானத்தில் போய் மிதந்து கொண்டு
மேகங்களை ஔிரச் செய்து
மறைந்து விளையாடி
வேடிக்கை காட்டுகிறது..
யார் கொண்டு போனார்கள்
அங்கே?
நான் சுட்டு வைத்த ரொட்டியொன்று
குறைகிறதென்று
தேடும் போது தான் கண்டு கொண்டேன்..
வான் வெளியில் மிதக்கும்
தன் அழகை
நதி நீரில் ரசித்துக் கொண்டு
என்னைப் பார்த்து
கேலி செய்வதை
நான் சுட்டு வைத்த ரொட்டியொன்று
சிறகு முளைத்துப் பறந்ததுவோ?
அது எப்படி
வான் வெளியில் சென்று
பஞ்சு மேகங்களுக்கிடையில்
மிதக்க முடியும்?
நான் சுட்டு வைத்த ரொட்டியொன்று
எப்படியோ
தொலைந்து போய் விட்டது
இது அது தான்..
யாரோ நிலவென்று அதைச் சொல்லி
என்னை ஏமாற்றப்
பார்க்கிறார்கள்..
- ஹுமைரா அல் அமீன் -