றிப்தி அலி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஊடக மையத்தின் நிர்மாணத்திற்கு 75 இலட்சம் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக வெளியாகியுள்ளது.

இந்த ஊடக மையம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கமைவாகவே இந்த விபரம் தெரியவந்துள்ளது.

தற்போது செயலிழந்துள்ள இந்த ஊடக மையத்தில் 2021.07.29ஆம் திகதி முதல் 2022.04.08ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் 24 ஊடகவியலாளர் மாநாடுகள் மாத்திரம் நடத்தப்பட்டப்பட்டுள்ளன. இதற்காக 75 இலட்சத்து 82 ஆயிரத்து 837 ரூபாவும், 46 சதமும் செலவலிக்கப்பட்டு குறித்த ஊடக மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

"இதில், சிவில் மற்றும் கட்டுமானப் பொறியியல் நிர்மாணத்திற்காக 47 இலட்சத்தது 43 ஆயிரத்து 656 ரூபாவும் 64 சதமும், மின் பொறியியல் நிர்மாணத்திற்கு 9 இலட்சத்து 42 ஆயிரத்து 199 ரூபாவும் 52 சதமும், வெளிநபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கார்ப்பட் மற்றும் கேட்ர்னுக்கு 18 இலட்சத்து 96 ஆயிரத்து 981 ரூபாவும் 30 சதம் செலவிக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியான ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனாதிர தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு தேவையான ஊடக விளம்பர நடவடிக்கையினை கடந்த பல தசாப்தங்களாக அரசாங்க தகவல் திணைக்களம் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே குறித்த ஊடக மையம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இங்கு வாராந்தம் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்புகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் பேச்சாளரிடமோ, அரச அதிகாரிகளிடமோ, நேரடியாகவோ அல்லது இணைய வழி ஊடாகவோ கேள்விகளை எழுப்புவதற்கு, ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த மையத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 40 ஊடகவியலாளர்கள் ஒரே தடவையில் அமரும் வகையிலும், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து அம்சங்களுடனும் அமையப்பெற்ற இந்த ஊடக மையத்தில் நடைபெற்ற அனைத்து ஊடக மாநாடுகளும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட கிங்ஸ்லி ரத்நாயக்கவினாலேயே நெறிப்படுத்தப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமும், வேலைத்தளமுமான வெள்ளை மாளிகையில் நடைபெறும் வாராந்த ஊடக மாநாடுகளைப் போன்ற மாநாடுகளே இங்கு நடைபெறும் என கிங்ஸ்லி ரத்னநாயக்க அப்போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமாச் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னரே, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பதவியினை கிங்ஸ்லி ரத்நாயக்க இராஜினாமச் செய்துவிட்டு அவுஸ்திரேலியா பறந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், இந்த ஊடக மையத்தில் அரசாங்க நிறுவனங்களின் ஊடக மாநாடுகளை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த செப்டம்பரில் இரண்டு ஊடக மாநாடுகள் இங்கு இடம்பெற்றதாகவும் தகலவறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.