பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றும் நாளையும் இரு தினங்களிலும் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த ஒத்திவைப்பு விவாதத்திற்கான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை 367 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், கணக்கு வாக்கெடுப்புக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று ஆராயவுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவினால் இந்த யோசனை அனுமதிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அன்றையதினம் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை இது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனை விடவும் நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தம்) சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்) சட்டமூலம் என்பனவும் இன்றைய தினம் இக்குழுவில் ஆராய்ந்து அனுமதிக்கப்பட்டு 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

