ஒரு கூட்டம் இனவாதம் பேசிப் பேசி ஜனாதிபதி தேர்தலை ஒன்றையே வென்றிருக்கிறார்கள். அதை நாமனைவரும் கண்கூடாக கண்டிருக்கிறோம். அதன் மூலம் இந்நாட்டில் இனவாதத்தை மூலதனமாக கொண்டு அரசியல் செய்து, தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் சிறுபான்மையினரின் தயவின்றி ஆட்சியமைக்கவோ ஜனாதிபதியாகவோ முடியாமலிருந்த நிலைமை இம்முறையுடன் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு நம்மவர்கள் சிலரும் துணை போயிருந்தோம். அது பற்றி நிறையவே பேசியிருக்கிறோம்.
இப்போது இந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பெரும்பான்மை கட்சிகள் எல்லாம் பாடம் கற்றுள்ளார்கள். இனவாதத்தை பேசினால் எப்படியும் வாக்களிப்பதற்கு அவர்களது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களது தைரியம்.
நாட்டில் தற்போது 10% ஆகவுள்ள ஒரு இனம் இன்னும் முப்பது வருடங்களில் இந்நாட்டின் பெரும்பான்மை இனமாக வளர்ந்து விடுவார்களென ஒருவன் கூறியதை நம்புமளவு அவர்கள் கணித அறிவை கொண்டுள்ளார்கள். கொத்து ரொட்டியில் மருந்தை கலந்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று ரீவியில் யாராவது ஒருவர் கூறினால் அதை உண்மையென நம்புமளவு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அவர்களில் உள்ளார்கள். அவர்களுக்கு பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றிய கவலை கிடையாது. அமெரிக்கா, சீனா விடம் நாட்டை விற்றுவிட நடக்கும் முயற்சி அவர்களை சென்றடைய வாய்ப்பில்லை. நாட்டின் பௌதீக அபிவிருத்தி, பொருளாதாரம், சர்வதேச உறவுகள் இவையேதும் பற்றி துளியளவும் அக்கறை கிடையாது. இனவாதத்தை கதைத்தால் மட்டும் போதும் அதை நம்பி வாக்களிப்பார்கள். அவ்வளவும் தான் அரசாங்கங்களிடமிருந்தான அவர்களது எதிர்பார்ப்பு.
இப்போது ஐ.தே.க வும் அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மை வாக்குளை காப்பாற்றிக் கொள்வதற்கு இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று இனவாதத்தைக் கையிலெடுத்துள்ளார்கள். அதிலும் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மையப்படுத்தியதான இனவாத கருத்துக்கள் பெரும்பான்மையின மக்களிடம் அதிகம் எடுபடும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிக்கு அரசாங்கம் செய்கின்றவற்றை எதிர்க்க வேண்டும் அதற்குள் இனவாதத்தையும் கலந்து அதிலும் தேசிய பாதுகாப்பையும் சேர்த்து மொத்த அடி அடித்திருக்கிறார்கள். தற்போதுள்ள சிறுபான்மை வாக்குகளை இழந்தாலும் பரவாயில்லை பெரும்பான்மையான மக்களின் வாக்குகளே முக்கியம் என்ற ஐ.தே.க. வின் நிலைப்பாட்டின் வெளிப்பாடே இது.
அதிலும் விசேடமாக பெரும்பான்மையின வாக்குகளில் தங்கியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட அதே இனவாதத்தை பேசுகிறார்கள் (மரைக்கார்). எதிர்காலத்தில் ஜேவிபீயும் தாராளமாக இனவாதம் பேசும். இல்லாவிட்டால் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது போய் விடும்.
இனிவரும் காலங்களில் இனவாதம் பேசும் கட்சிகள் மட்டும் நிலைத்திருக்க மற்றைய எல்லாம் காணாமல் போய்விடும். எந்த கட்சி அதிக இனவாதத்தை கையிலெடுக்கிறார்களோ அவர்களே ஆட்சியமைப்பார்கள்.
இனி இதுதான் நம் தலையெழுத்து!
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, கிடைக்கப்பெற்ற சபைக்கெதிராக வரும் இனவாத கருத்துக்கள் பிழையென போராடும் ஊரில் மஹிந்தவும் கோதாவும் பெனரில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-ஹிஷாம்-
Hirunika Speech - https://m.facebook.com/story.php?story_fbid=2608549885923752&id=100003062982554
Marikkar Speech -


