Siyane Live Radio Program

நேரலை 24/7 Air Streaming


Sponsored by: Kahatowita.live

இலங்கையில் புனிதமாகத் தெரிந்த விடயங்கள் அங்கு வந்ததும் அவர்களுக்கு முட்டாள்தனமாகப் புலப்படுகிறதாம்


பாரிஸின் லாச்சப்பல் ஏரியாவுக்குப் போகும் போது இனம் புரியாத ஒரு கூதுகலம் பற்றிக் கொள்ளும்.கொழும்பு வெள்ளவத்தைக்குப் போவதைப் போன்ற உணர்வுபூர்வமான அனுபவம் அது.பகலில் பேரே தெரியாத ப்ரெஞ்ச் ஐட்டங்களை உள்ளே தள்ளும் நமக்கு லாச்சப்பல் போனால் இரவுகளில் சுடச்சுட பிரியாணியோ கொத்துரொட்டியோ துணை நிற்க பேக்ரவுண்டில் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' போன்ற 80ஸ் பாடல்கள் இரவை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும்.அல்லது ஹரிஹரன் " வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா " என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பார்.நல்ல கூட்டணி.

தமிழர் சாம்ராஜ்யமாய் திகழும் லாச்சப்பலில் சிரஸ என்ற ஒரே ஒரு சிங்களக் கடையைக் கண்டேன்.சிங்களவர்கள் யாரும் பெரும் குழுக்களாய் ஒரு ஏரியாவில் அடர்த்தியாய் இருப்பதில்லை என்றார்கள்.இலங்கை முஸ்லிம்களின் வியாபாரஸ்தலங்கள் சில இருப்பதாய் சொன்னார்கள்.ஆனால் நெய்னா கடை எனப்படும் ஹோட்டல் ஒன்றுக்கு மட்டுமே போகச் சந்தர்ப்பம் அமைந்தது.கல்முனையைச் சேர்ந்தவர்களால் நடாத்தப்படும் ஹோட்டல் அது.

நெய்னா கடையில் நண்பர் கோபியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நமது அடுத்த டேபிளில்  " அடோ,யகோ,மொகோ" என்று சிங்களம் நிரம்பி இருந்தது. ஆறேழு பேர் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.பைட்ஸுக்கு கொரித்துக் கொள்ள இலங்கை கிடைத்து இருந்தது.கண்டபடி வார்த்து எடுத்துக் கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் அறிமுகமாகிக் கொண்டோம்..பேச்சு சூடு பிடித்தது.பதினான்கு வருடங்களாய்ப் பாரிஸில் இருக்கும் வசந்த என்பவர் சொன்னார்." நான் இலங்கையில் இருக்கும் போது இதுதான் உலகத்தில் அதி உத்தமமான நாடு என்றும் என் மதம் தான் உலகத்தில் தோன்றிய மிகப் புராதன மதம் என்றும் நம்பி இருந்தேன்.எங்களுக்குத்தான் அதிகாரமும் இன்ன பிறவும் கிடைக்க வேண்டும்.நாங்கள் தான் ஆள வேண்டும்.மற்றவர்கள் அடங்கி ஒடுங்கி இருக்கலாம். என்பதே எனக்குத் தெரிந்த ஒரே ஒரு வாழ்வியல் தத்துவமாக இருந்தது.ஆனால் அப்படி எல்லாம்  கிடையவே கிடையாது.பெரும்பான்மையாய் ஓரிடத்தில் ஓரினம் வாழ்ந்தால் அப்படி என்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது..அதே போலத்தான் இந்த மதமும்.மத நம்பிக்கைகளும் அனுஷ்டாணங்களும் தனி நபர் சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்டவை.வாழும் உரிமையும் சுதந்திரமும் அத்தனை இனங்களுக்கும் பொதுவானது.சட்டங்கள் சகலருக்கும் சமமாய்ப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதை இங்கே வந்த பின்பு தான் புரிந்து கொண்டேன்". என்றார்.அவரைச் சுற்றி இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

இலங்கையில் எதை எதை எல்லாம் பெருமையினதும் புனிதத்தினதும் அடையாளங்களாய்ப் பூஜிக்கிறோமோஅதெல்லாம் இங்கே வந்து இந்தச் சூழலுக்குள் கரைந்த பின்னர் முட்டாள்தனத்தின் சின்னங்களாகிவிட்டன. என்றார் அவர்களுடன் இருந்த இன்னொருவர்.

தினமும் நாலு மணி நேரத்திற்கு மேல் பவர் கட்.மனித மணித்தியாலங்களை கபளீகரம் செய்யும் வீணாய்ப் போன போக்குவரத்துத் துறை.சீழ் படிந்த சொறி சிரங்கு சட்டங்கள்.எந்தக் கிரிமினல் அரசியல்வாதியினதும் கடைசிப் புகலிடமாக மதம்.கண்ட இடமெங்கும் வெறுப்புப் பேச்சுக்கள்.மாறி மாறி குடும்ப ஆட்சி அல்லது கோமாளித்தன ஆட்சி.சூட்சுமமாய் இனவாதம் பரப்பும் ஊடகங்கள்.திரும்ப திரும்ப தமது புனிதத்தை சத்தமாய் நிரூபித்துக் காட்சிப்படுத்த வேண்டிய நிலையில் சிறுபான்மை வர்க்கம்.கொழும்பு பிச்சைக்காரர்களை விடக் குறைவாக சம்பளம் பெறுபவர்களாக அதிகாரங்களால் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் கடை நிலை அரச தனியார் ஊழியர்கள் ,தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல எங்கும் ஊழல் என்று ஒரு நாடு எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருக்கும் இலங்கை என்ற மூன்றாம் உலக நாட்டின் சாமானியர்களுக்கும் ஆள்பவர்களுக்கும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களிடம் படிக்க ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன.

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ளக் கூடாது சமத்துவம் கடைசி வரை வரக் கூடவே கூடாது என்ற அவசரத்தில் கலாச்சார வேலிகளைப் போட்டுக் கொண்டு மேற்கின் அப்பட்டமான வாழ்க்கையை மட்டும் குறை சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள் அதிகாரமும் அவர்களுக்கு
சாமரம் வீசும் பூசாரிகளும்...மக்களை எய்த்துப் பிழைக்கும் ஆள்பவர்களுக்கு முதலீடு செய்யவும் ஓய்வு எடுக்கவும் மட்டுமே இந்த ஐரோப்பிய தேசங்கள் தேவைப்படுகின்றன.

ஆட்சியாளர்களால் இனக்குரோத பவுண்டேஷன் மேல் கட்டப்பட்ட தேசபிமானம் என்ற கட்டடத்தின் மொட்டை மாடியில் ஏறிப் பழம் பெருமை பேசி சமத்துவத்தையும் ,நீதிக் கட்டமைப்பையும் சிதறடித்துக் கொண்டு இருக்க்கும் அடிப் பொடிகள் எடுபிடிகளின் கறையான் புற்றுக்கள் போல இருக்கும் மூளை பளிச் என்று ஆக இப்படியான தேசங்களில் குடியேறித்தான் பார்க்க வேண்டும்.மற்றும்படி வேறு வழி இல்லை.இன்னும் ஐம்பது வருடம் போனாலும் உருப்படாத இலங்கை இப்படித்தான் இருக்கப் போகிறது.ஒரு வேளை 'கொழும்பு - கதிர்காமம் 'புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஹம்பாந்தோட்டை வரை பூர்த்தி என்று செய்தி வரலாம்.வேறு அடைவுகள் எதையும் இது காணப் போவதில்லை.

(ஸபர் அஹ்மத்)
Share on Whatsapp

About Rihmy Hakeem

0 கருத்துகள்:

கருத்துரையிடுக