20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
 கொரோனா பாதிப்பு காரணமாக ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குளியாபிடிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் நியூமோனியா மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் மூலம் இதுவரை கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

  திவுலபிடிய கொத்தணியில் இன்றைய தினம் (22) இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள இரு ஆடை தொழிற்சாலைகளின் ஊழியர்கள் எனவும், 06 பேர் பேலியகொடை மீன் சந்தை ஊழியர்கள் எனவும் 22 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2558 ஆகவும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6038 ஆகவும் உயர்வடைந்துள்ளது. 20 இல் முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபடுமா?எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

இன்றைய பேசு பொருளாக கொரோனா இருந்தாலும், அதனையும் தாண்டி முக்கியத்துவமிக்க ஒரு விடயமாக அரசியலமைப்பின் 20வது திருத்தம் காணப்படுகிறது. அத்துடன், பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறும் வகையில் இருபது மீதான வாக்களிப்பும் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது.

1994 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்படவில்லை என்பதோடு,  இம்முறையை நீக்குவதில் ஐக்கிய தேசியக்கட்சி மாத்திரமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியும் ஜனாதிபதி தேர்தல்களின் போது பிரதான விடயமாக நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாக பரப்புரை செய்து வந்ததையும் பார்க்கலாம்.

2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தை இஸ்தாபித்த பிரதான கட்சிகளால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதனூடாக ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றாலும், 19 இல் சில குறைகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஸவின் வெற்றியும் அதன் பின்னரான பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையையும் பெற்று ஆட்சியமைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் 20வது திருத்தம் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த 20வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள், வாதப்பிரதிவாதங்கள், முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன் ஏன் 20வது திருத்தம் அவசரமாக கொண்டு வரப்பட வேண்டுமென்ற கேள்வியும், இதன் சாதக, பாதகங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் உட்பட பங்காளிக் கட்சிகள் மற்றும் இவ்வரசாங்கத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட பௌத்தகுருமார்களும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

ஆனாலும், அரசாங்கம் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் இணைத்துக் கொண்டு நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் ஒரங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் தொடரிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் மீதான குற்றச்சாட்டும், கைது நடவடிக்கைகளும் பார்க்கப்படுகிறது.


இது இவ்வாறிருக்க, ஸ்ரீரங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவையும் 20வது திருத்தத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. பாராளுமன்றத்தேர்தல் காலங்களில் இவ்விரு கட்சியையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிக மோசமாகச் சித்தரித்து, தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் போது, தங்களது ஆட்சியில் இவர்களை இணைத்துக் கொள்ளமாட்டோம் என்ற பிரசாரங்களை முன்னெடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், முஸ்லிம் காங்கிரஸும் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாகவே தென்படுகிறது. 

இவ்வாறான சூழ்நிலை அன்று 18வது அரசியல் திருத்தம் மஹிந்த ராஜபக்ஸவினால் கொண்டு வரப்பட்ட போது  ஏற்படுத்தப்பட்டது. கண்ணைத் திறந்து கொண்டு குழியில் இறங்கியதாக அந்தச்சூழ்நிலையை ரவூப் ஹக்கீம் கூறியதும், அவ்வாறான முடிவுக்கு தான் வந்தது கட்சியை உடைவிலிருந்து பாதுகாப்பதற்காக என்ற விடயமும், அதற்கு பிராயச்சித்தமாக 19வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைத்ததும் நினைவுகூறத்தக்கது.

ஆனால், மீண்டும் 20வது திருத்தம் 19வது திருத்தத்தில் கொண்டு வரப்பட்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் விடயங்கள் நீக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியின் கைவசம் கொண்டு வரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவு வழங்குவதா? என்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இத்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கவிருப்பதாக சமூகவலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. எனவே, இவ்வாறான தகவல்கள்  முஸ்லிம் காங்கிரஸுக்குள் இரண்டு கருத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை உணர்த்துகிறது. 

எனவே, இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் மீண்டுமொரு உடைவைச் சந்தித்து பலமிழக்குமா? என்ற கேள்வியும், கட்சியை உடைவிலிருந்து பாதுகாக்க 18வது திருத்தத்துக்கு கையுயர்த்தியது போல், 20வது திருத்தத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் கையுயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

20வது திருத்தத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் விடயங்கள் இல்லை என்பதால், அதனை ஆதரிக்கலாம் என்ற கருத்து ஒரு சிலரிடம் நிலவுகின்றது. உண்மையாதனில், சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட 19வது திருத்தத்தில் கொண்டு வரப்பட்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் நீக்கப்பட்டு ஒரு தனி மனிதனின் கையில் அவ்வதிகாரங்கள் குவிக்கப்படும் போது, அங்கு சர்வதிகாரம் தலைதூக்கும்.  அதன் காரணமாக, நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகும்.  இவ்வாறான சூழ்நிலையில் நாடு மாத்திரமின்றி நாட்டு மக்களாகிய நாமும் பாதிக்கப்படுவோம்.

எனவே, தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டிய கடப்பாடு முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கிறது. கட்சி பிளவுபடும் என்பதற்காக அன்று செய்த தவறை மீண்டும் செய்வதா? அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்களாலேயே கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச்சட்ட ஏற்பாடுகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவதா? என்ற முடிவை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு முடிவு செய்ய வேண்டும்.

மக்கள் அவதானத்தோடு இருக்கிறார்கள். கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்படாதவர்களைத் தொடர்ந்தும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் பயனேதுமில்லை. ஒரு சிலரின் நலனுக்காக நாட்டின் நலனில் அக்கறையின்றிச் செயற்படவும் முடியாது. 

கடந்த காலங்களில் தனிப்பட்டவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களால் சமூகம் பாதிப்புக்குள்ளானதுடன், அவர்களே கடைசியில் கட்சிக்கும் தலைமைக்கும் தலையிடியாக மாறிப்போயினர். 

கடந்த 52 நாள் ஜனநாயகப் போராட்டத்தில் வெளிப்பட்ட கட்சியின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் தலைமைத்துவ வழிகாட்டலுக்கான கட்டுப்பாடும் தொடர வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடி பணியாது, தனி ஒருவனாக இருந்தேனும், நீதியை நிலைநாட்டப் போராடுங்கள். உங்களோடு சமூகம் பின்தொடரும்.

Blogger இயக்குவது.