கஹடோவிட பிரதேசத்தில் அண்மைக்காலமாக தொற்றா நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கஹடோவிட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை நடத்தியது.
முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் அஸ்லம் ஹலீம் அவர்களது தலைமையில் ஜூன் 29 ஆம் தேதி கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பிரதேசத்தின் முன்னணி மருத்துவ ஆய்வு நிலையமான MEDITECHNO வின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து பயன்பெற்றனர்.
தொற்றா நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் MEDITECHNO ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் ஸில்மி அன்ஸார் (MLT) அவர்கள் வருகை தந்திருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் விசேட வளவாளராக கலந்து கொண்டு நிகழ்வை சிறந்த முறையில் நடத்திய புற்று நோய் பராமரிப்பு பயிற்சியாளரும் இயற்கை உணவுகள் ஆலோசகருமான கண்டி உடபலாத சமூக மருத்துவ உத்தியோகத்தர் Dr. M. S. M. Faique, (BUMS (SL), Diploma in Phrm ,Diploma in Psyco counselling ) அவர்கள் தொற்றா நோய்களின் பரவல், தடுப்பு, பாதுகாப்பு முறைகள், உணவியல் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மக்களுக்கு எளிய முறையில் எத்திவைத்தார். தாம் நோய் வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதற்கான சுய சோதனைகளும் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.
அதைத்தொடர்ந்து பெண்களுக்கான குறிப்பான நோய்கள் தொடர்பில் புற்று நோய் பராமரிப்பு உளவளத் துணையாளரும் கண்டி உடபலாத போஷாக்குணவுகள் கமிட்டி அங்கத்தவருமான Dr. S. A. F. Inaya Faique, (BUMS (Hons) Diploma in Phrm ,Diploma in Psyco counselling) அவர்கள் கலந்துரையாடலுடனான விரிவுரையொன்றை நிகழ்த்தினார்.
முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சுற்றாடல் குழுவின் தலைவர் ரஸ்னி ஸ்ரூக்கின் வழிகாட்டலில் நடைபெற்ற நிகழ்வை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் AHM மர்வான் தொகுத்து வழங்கினார்.