தீவிரவாதிகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த கல்வியதிகாரியை கைது செய்தீர்கள், உங்கள் மேல் சந்தேகமாகவிருக்கிறது - உண்மை சம்பவம்


கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இன்று எனது வீட்டுக்கு வந்து என் மீது விசாரணை ஒன்றை மேற்கொண்டனர்.

எனக்கும் இஸ்லாமிய போர்வையில் இயங்கும் கொலைகார வெளிநாட்டு கூலிப்படையான ஐஎஸ்ஐஎஸ்க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக விசாரிக்க வந்ததாகவும் அறிவித்தனா்.

இவர்கள் வரும்போது நான் வீட்டில் இருக்கவில்லை.

ஜனாஸா ஒன்றில் கலந்துகொள்ள வெல்லம்பிட்டியவுக்கு சென்றிருந்தேன். எனது மகன் அழைப்பெடுத்து அறிவித்தார். உடனே வருவதாக வந்தவர்களுக்கு அறிவித்தேன்.

எனது மனைவிடமும் பிள்ளைகளிடமும் சில விடயங்களை கேட்டு அறிய விரும்புவதாக அறிவித்த அவர்கள், அச்சமோ பதற்றமோ படத் தேவையில்லயென்றும் என்னால் வர முடியுமான நேரத்தை அறிவிக்குமாறும் கூறினர்

“பிரச்சினை இல்லை உங்களுக்கு வேண்டிய தகவல்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் ” என கூறி விட்டு அவசர அவசரமாக ஒரு அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

இருவர் வீட்டில் முன் ஹோலில் அமர்ந்திருந்தனர்.

சாமானிய மனிதர்களைப் போன்று சிவில் உடையில் தோற்றமளித்தனர். முதலில் அவர்களது அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்தேன். கடற்படை அதிகாரிகள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

“என்ன பிரச்சினை? “ என்று கேட்டேன்.

எங்களது மேல் அதிகாரிகளால் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி வருமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்றார்கள்.

“என்னைப் பற்றி என்ன தெரிய வேண்டும்?“ நான் வினவினேன்.

“தீவிரவாத வகுப்புகள் இங்கு அதாவது உங்கள் வீட்டில் இடம் பெற்றிருக்கின்றனவா?“ என வினவினர்.

”ஓரிரண்டு தினங்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றீர்களா? ” எனவும் வினவினர்.

”அப்படி எந்த வகுப்பும் எனது வீட்டில் இடம்பெறவில்லை யார் இந்த பொய்யான தகவலை உங்களுக்கு வழங்கியது? ” நான் கேட்டேன்.

“நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் ”என நான் கூறினேன்.

“இந்நாட்டில் இஸ்லாத்தின் பெயரில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக கருத்து தொிவித்து மோதல்களை உருவாக்கும் உரைகளை நிகழ்த்தியவர்களை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு விட்டு  தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களை நீங்கள் இலக்கு வைப்பதை என்னால் புரியக் கூடியதாக இருக்கிறது.“

“என்னை விசாரிப்பதற்காக உங்களை இந்த இடத்திற்கு அனுப்பியதன் பின்னணியில் ஒரு ஐஎஸ்ஐஎஸ் காரன் நிச்சயம் இருக்க வேண்டும்” என்று எனது எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவித்தேன்.

எனது வீட்டில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்த்து ”ஒரு வாசிகசாலையே வைத்திருக்கின்றீர்கள்...” என சொல்லிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார் வந்திருந்த மற்ற உத்தியோகத்தர்.

“ஆம் என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. தேசிய , சர்வதேசிய அரசியல், கவிதை, இலக்கியம் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு என்று பல மொழிகளில் உள்ள புத்தகங்கள் இருக்கின்றன. இவ்வாறான புத்தகங்கள் பலரை சிக்கலில் மாட்டி இருக்கிறது. குறிப்பாக அரபு புத்தகங்களை வைத்திருந்தவர்கள் அதுவும் குர்ஆன் பிரதிகளை வைத்திருந்ததற்காக பலர் இன்னும் சிறைகளில் இருக்கின்றார்கள்.”

“இஸ்லாமிய மத மற்றும் அரபு புத்தகங்களைக் கண்டவுடன் உங்கள் பாதுகாப்பு தரப்பினர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விட்டதைப் போல் ஆனந்தம் அடைகின்றனர்“ என்றேன்.

தொழில் என்ன? வினவினர்.

“பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் ஊடக செயலாளா் மற்றும் தேசிய கடலியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினா்” என்றும் கூறினேன்.

”நான் இந்த தீவிரவாதத்திற்கு எதிரானவன். 2013ம் ஆண்டு முதல் இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக ஊடகங்களில் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.

எழுதியிருக்கிறேன்...

பேசியிருக்கிறேன்...

“எனக்கு மரண அச்சுறுத்தல் வந்த போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடமும் முறைப்பாடு செய்திருக்கின்றேன்.”

”முறைப்பாடுகள் கிடைத்தபோது ஒழுங்காக விசாரணை  செய்து, குற்றங்களை தடுக்காத நீங்கள் இப்போது அப்பாவிகளை இலக்கு வைக்கின்றீர்கள்.

“அதுமட்டுமல்லாமல்  நீங்கள் இன்று இனவாத ரீதியில் செயற்படுகின்றீர்கள். அப்பாவிகளை தொடராக சிறைகளில் அடைத்து வருகின்றீர்கள்.

“உங்களின் செயற்பாட்டில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நீங்கள் இந்த  தீவிரவாதத்தை அழிக்காமல் வளர்க்க முயற்சி செய்வதாகவே நான் நினைக்கிறேன்.

“ உங்களை இந்த இடத்திற்கு அனுப்பியவரின் பின்னணியை நான் அறிய வேண்டும். அது எனக்கிருக்கின்ற உரிமை.”

“தீவிரவாதத்திற்கு எதிராக செயற்படும் என்னைப் போன்றவர்களை ஊமையாக்கும் ஓர் “அரசியல்” இங்கு நடைபெறுகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்த்து எழுதி வந்த புத்தளத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரி டில்ஷான் மொஹமட் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள்.”

“நான் இப்போது ஒரு மரண வீட்டுக்கு சென்று வருகிறேன்.

“இந்த மரணம் கூட உங்களது காவல்துறையின் மோசமான செயற்பாட்டால் உருவானது. ”

“எவ்வித காரணமுமில்லாமல் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒரு இளைஞனை கிரேன்ட்பாஸ் பொலிஸாா் மீண்டும் பொலிஸிற்கு அழைத்து வரும்படி அவரின் தந்தைக்கு கட்டளையிட்டனர்.”

“இந்த தகவலை அறிந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த மரண வீட்டில் வேதனையில் நான் இருக்கும் போதுதான் நீங்கள் என்னனை விசாரிக்க வந்த தகவல் எனக்குக் கிடைத்தது” என்று எனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகள்
தேவைப்பட்டால் தாம் தொலைபேசியில் கதைப்பதாக கூறி எனது தொலைப்பேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டு  விடைபெற்று சென்றனா்.

அடுத்த விசாரணைக்கு யார் வருவார்கள்..?
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

அஸீஸ் நிஸார்தீன்
30.05.2019
Share:

ஊடக அறிக்கை - ஞானசார தேரரின் குற்றச்சாட்டுகளை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா நிராகரிக்கிறது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள் சிலர் பயங்கரவாத தலைவர் ஒருவரை சந்தித்ததாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முன்வைத்த  குற்றச்சாட்டை எமது அமைப்பு முற்றாக நிராகரிக்கிறது.

2013 ஆம் ஆண்டில் கட்டார் நாட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கட்டார் நாட்டு அரச தலைவரின் ஆலோசகராக செயற்படும் மார்க்க அறிஞர் ஒருவரான யூசுப் அல் கர்ளாவி குறித்த மாநாட்டின் போது எமது அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

அந்த சந்திப்பு எவ்வித இரகசியமான ஒரு சந்திப்பாக இருக்கவில்லை என்பதுடன், கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படம் 2013 ஆம் ஆண்டில் எமது அமைப்பினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் வெளியான புகைப்படமாகும்.

யூசுப் அல் கர்ளாவி என்பவர் அல்ஜஸீரா தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியொன்றை நடாத்துபவரும், தற்பொழுது கட்டார் அரசின் மற்றும் கட்டார் அரச தலைவரின் ஆலோசகர் ஒருவராக செயற்படும் மார்க்க அறிஞருமாவார். குறித்த சந்திப்பின் போது அவர் எமது அமைப்பிடம் தெரிவித்ததாவது, இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினரான பௌத்த மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே. அவ்விடயம் பத்திரிகைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நிராகரித்து இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப தற்பொழுது எமது அமைப்பு கடும் பிரயத்தனம் எடுத்து செயற்படும் இத்தருணத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்த வேலைத்திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என நாம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டிக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில்
Share:

சில பிரதான ஊடகங்கள் "இஸ்லாமோபோபியா” இனை நயவஞ்சகத்தன்மையோடு கையாண்டு சட்டத்திற்கு முன்னரே தாமாக தீர்ப்பை வழங்கிவிடுகின்றன

இன்றைய பதற்றமான சூழ்நிலையில் சந்தேகங்களும்,  நிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்பும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாகத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான செய்தி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத முஸ்லிம்கள் சிலர் மேற்கொண்ட கீழ்த்தரமானதும் மிலேச்சத்தனமானதுமான படுகொலைகளின் விளைவாக பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து அவதிப்படுகின்றனர். 

இந்த இக்கட்டான வேளையில் மேற்கொள்ளும் நோவினை மிக்க பயத்தினூடாக இலங்கை முஸ்லிம்கள் தாம் இத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்வதற்கு வழிகோலிய ஏதுக்கள் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. பிரதான ஊடகங்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளை தளர்த்தினாலேயன்றி சகிப்புத்தன்மையோடும், பச்சாத்தாபத்தோடும் சுயவிமர்சனத்திற்கான வழிவகைகளை கண்டறிவது எமது சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான காரியமாக ஆகிவிடும்.

அரசியல் ரீதியாக நெறிப்படுத்தப்படும் ஊடக நிறுவனங்கள் ஒரு சமூகத்தவரை மற்றொரு சமூகத்தவர் மீது ஆத்திரமூட்டச் செய்வதன் மூலம் மோதலை வளர்ப்பதல்லாது, அரசாங்கத்தையும் ஆளும் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளையும் அவமானத்திற்கு உள்ளாக்குவதாகும். சில பிரதான ஊடகங்கள் “இஸ்லாமோபோபியா” எனப்படும் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையை நயவஞ்சகத்தன்மையோடு கையாண்டு, சட்டம் தனது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னரே தாமாக தீர்ப்பை வழங்கிவிடுகின்றன.

அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் அரசாங்கத்தின் மீது அடர்ந்தேற மக்களை தூண்டுகின்ற வேளையில், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்; போது ஊடகங்கள் தமது சொல்லாட்சியை உரிய முறையில் கையாள்வதற்கான பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றன.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் பிரதான ஊடகங்களை மையப்படுத்தி வெளியீட்டுள்ள காரசாரமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SRI LANKA MUSLIM CONGRESS
Share:

உச்ச நீதிமன்றத்தில் முறையிட கோத்தாவுக்கு தடை விதித்த விஷேட நீதாய மேல் நீதிமன்றம்

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கே அதிகாரம் இருப்பதாகவும், தனது சேவையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை இதனுடன் ஒப்பிட முடியாது என்று கோட்டாபய ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

எனினும் இந்தக் கோரிக்கையை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்ததாக தெரிவித்த சட்டத்தரணி, நீதாய மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி மறுத்து உத்தரவிட்டதாகவும் கூறினார். 

ஆகவே உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்ட கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோமானது என்று உத்தரவிடுமாறு கோட்டாபய ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் மனுவின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 06ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

(அத தெரண) 
Share:

தலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.


இன்று 29.05.2019 புதன் கிழமை,  காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்றிருந்த வேளை, 8வது வாட்டுக்கு பொறுப்பான விஷேட வைத்தியர்  அவரது வாட்டினுல் வைத்து அனைவர் முன்னிலையிலும்   (தலையில் அணிந்திருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இவ்வாட்டினுல் என்னுடைய சட்டம்) என சத்தமிட்டு ஏசியுள்ளார். மனைவி வெளியே வந்துள்ளார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு  பல இடங்களிலும் இருந்து முஸ்லிம்கள் செல்கின்றமையால் அவர்களுக்கு தலை மறைத்து ஆடை அணிவதில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்பதற்கும்  இதுபோன்ற விடயங்கள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கும் சமூகத்தில் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்,
மினுவாங்கொடை
Share:

அன்று அரசியலுக்காக ஒக்ஸ்போர்டில் படித்த பண்டாரநாயக்க இனவாதத்தை கையிலெடுத்தார் ; இன்று ஜீ.எல்.?

எங்கே செல்கிறது நமது நாட்டு அரசியல்
============================
வை எல் எஸ் ஹமீட்

பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் புகழ்பூத்த ஒரு சட்ட அறிஞர். கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர். ராணுவத்தளபதி சம்பந்தப்பட்ட அமைச்சர் அழுத்தம் பிரயோகிக்கவில்லை; வேண்டுகோளே விடுத்தார்; என்று தெட்டத்தெளிவாக கூறியபின்னும் அவர் அழுத்தம் கொடுத்தார்; அவர் கைதுசெய்யப்பட வேண்டும்; என்று கூறுவது எவ்வளவு கீழ்மட்ட அரசியலாகும்.

ஒருவரைக் கைதுசெய்யும்போது கைதுசெய்பவர்கள் யார்? என்ன காரணம் என்பவற்றைக் கூறவேண்டும். அவ்வாறு செய்யாத சூழ்நிலையில் அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தொடர்பாக தகவல்களை விசாரிப்பதில் சட்டரீதியாக பிழையேதும் இல்லை; என்பது சட்டத்தில் கடலான ஜீ எல் பீரிஸ் அவர்களுக்குத் தெரியாதா?

கண்டியிலும் கருத்தடை செய்யப்பட்டதாக எஸ் பி திசாநாயக்க ஒரு புரளியை கிளப்புகிறார். குறித்த கருத்தடை என்பது ரகசியமாக செய்யக்கூடிய ஒன்றல்ல; என்று மருத்துவ நிபுணர்கள் கூறியும் இன்னும் இவ்வாறு கதை கூறிக்கொண்டிருக்கிறார்கள். எஸ் பி திசாநாயக்க ஒரு இனவாதியாக கடந்த காலத்தில் அறியப்பட்ட ஒருவர் அல்ல. அரசியலுக்காக அவரும் இனவாதம் பேசுகிறார்.

டாக்டர் ஷாபி அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது ஒரு பயங்கரவாதத்தோடு தொடர்பான குற்றச்சாட்டு அல்ல. அது இறைவரித் திணைக்களத்திற்குரிய விடயம். 8000 பெண்களுக்கு கருத்தடை செய்தார்; என்று யாரும் முறைப்பாடு செய்ததாகத் தெரியவில்லை. பத்திரிகை செய்தியை வைத்து கைதுசெய்தபின் முறைப்பாட்டைக் கோருகிறார்கள். எங்குமே நடக்காத ஒருவிடயம்.

முறைப்பாடு செய்திருந்தால்கூட அது தொடர்பான ஆரம்ப விசாரணைகளைச் செய்து அவர்மீது நியாயமான சந்தேகம் இருப்பின் மாத்திரமே கைதுசெய்யமுடியும்.

ஒரு புறம் மருத்துவ நிபுணர்கள் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை; எனும்போது மறுபுறம் விசாரணை முடிவு தெரியாதபோது, இப்பொழுதான் முறைப்பாடு கோரப்பட்டு, முறைப்பாடு  செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது முன்னாள் ஜனாதிபதி அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென கூறுகின்றார்.

முதலாவது முறைப்பாடு உண்மையா? இவ்வாறு முறைப்பாடு உண்மையாக இருக்க சாத்தியமா? என்பதுபற்றி எதுவும் தெரியாத நிலையில் இவ்வாறான ஓர் அறிவிப்பு ஏன்? நஷ்ட ஈடு எதிர்பார்ப்பில் அதிகமான முறைப்பாடு செய்யப்படட்டும் என்பதற்காகவா?

அன்று ஒக்ஸ்போட்டில் படித்த பண்டாரநாயக அரசியலுக்காக இனவாதத்தைக் கையிலெடுத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இனவாதமே அரசியலில் பிரதான முதலீடாக இருக்கின்றது. அது ஜீ எல் பீரிஸ் போன்ற சர்வதேசத்தால் அறியப்பட்ட சட்டமேதைகளையும் விட்டுவைக்கவில்லையென்றால் நம் நாட்டு அரசியல் எங்கே சென்றுகொண்டிருக்கிறது?

இம்முறையும் இனவாதம்தான் தேர்தலுக்கான மூலதனம் என்றே பொது எதிரணி தீர்மானித்திருப்பதுபோல்தான் தெரிகிறது.

இது முஸ்லிம்களுக்கு சோதனையான காலம். ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என இரு தரப்பாலும் நெருக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் உணர்வுரீதியாக விடயங்களுக்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அறிவு ரீதியாக பார்க்கவேண்டும்; சிந்திக்கவேண்டும்.

அரசியல் கட்சிகள் புத்திஜீவிகளுடன் தொடர்கலந்துரையாடல்களை நடாத்தி சமூகத்தைக் கரைசேர்ப்பதற்கான காத்திரமான வழிகளைக் கண்டறியவேண்டும். அதன்படி விரைந்து செயலாற்ற வேண்டும்.
Share:

காத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி


பேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேலதிகமான பேரீத்த மரங்களை இந்நாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு கொண்டு சென்று மறு நடுகை செய்தார்.

புத்தளம் வண்ணாத்திவில்லு மற்றும் கல்பிட்டி பிரதேசங்களில் ஆங்காங்கே பற்றை புதர்களாக காட்சியளிக்கும் பேரீத்த மரங்கள் பிராந்தியத்தில் நிலவுகின்ற காலநிலை காரணமாக பூ பூத்தும், காய்க்காமல் அருவடையில்லாது மலட்டுத்தன்மை கொண்டதாகவே காணப்படுகிறது.

முன்னாள் விவசாய உத்தியோகத்தர் ஒருவரின் ஆலோசனை ஒத்துழைப்போடு, சரியான முறையில் மகரந்தச் சேர்க்கை செய்து பராமரிக்கப்பட்ட, சுமார் 70 மரங்களில் காய்த்து தொங்கும் பேரித்தம் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளமை இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கின்றது.

பேரினவாத அடிப்படைவாதிகளால்; முஸ்லிம் சமூகத்தையும், மரபுகளையும், கலாச்சார எழுச்சியினையும் விமர்சிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இன்று கிழக்கு மாகாணத்தில் காய்த்துத் தொங்குகின்றன பேரீத்தம் மரங்கள் மீதும் தமது விஷமப் பார்வையை திருப்பி இனவாத கருத்துக்களை கக்காமல் இல்லை.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி "மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசங்கள் பேரீச்சம் மரங்களால் அலங்கரிக்கப்பட்டு சவுதி மயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது, ஆக அந்த மரங்களை வெட்டி அகற்றி மீண்டும் இலங்கையாக மாற்றுமாறு நான் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருக்கு தெரியப்படுத்துகிறேன்" என்று அண்மைய ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்தார்.

அரபு நாடுகளிலிருந்து நோன்பு காலங்களில் போது முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடாக ஒரு சில தசாப்தங்களாக, நமக்கு கிடைத்துவரும் பேரீத்தம் பழங்களை உண்டுவிட்டு வீசிய விதைகள்தான், புத்தளத்தில் பேரீத்த மரங்களாகியதும், அவை கிழக்கிலங்கைக்கு கொண்டு போய் நாட்டப்பட்டதும் முன்னைய வரலாறு.

நாத்தாண்டிய பெருங்குடிகளின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய ஹெக்டர் ஒரு சில வருடங்களாக ஐ. தே. க புத்தளம் தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவரே தவிர; புத்தளத்தினதும் முஸ்லிம்களினதும் வரலாறு, பண்பாடு, அரசியல், கலாச்சாரம் போன்ற எதையும் அறியாத கெபினட் அமைச்சு பதவிகளுக்கு கனவு காண்பவராவர்.

தன்னுடைய நாத்தாண்டிய தொகுதியில் தும்மோதர, மானிங்கள, தப்போவ மற்றும் கொற்றாமுள்ள பிரதேசத்தில் மே13 இடம்பெற்ற இனவாத செயல்களை தடுக்கவோ அல்லது அசம்பாவித செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல், கடைகள், வீடுகளுக்கு இன்று வரை பார்வையிட போகாமலிருக்கும் நாத்தாண்டிய பெரும்பான்மை வாக்குகளை சேகரிக்கும் ஆளுங்கட்சி முகவர்.

வெள்ளையர்கள் வெளி நாடுகளிலிருந்து பயிர்ச் செய்கைக்காக கொண்டுவந்த தேயிலை, ரப்பர், மகோகனி போன்ற பெருந்தோட்ட விவசாயத்தினால் நமது நாட்டுக்கு வருமானம் தேட முடியும் என்றால்; இனி மேலும் அரபு நாடுகளில் கையேந்தாமல் உள்நாட்டில் பேரீத்தம் பழ தேவையில் தன்னிறைவு கண்டு மேலதிக உற்பத்தியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்று பிறந்துள்ளது.

ஆக எக்காரணம் கொண்டும் சவுதி மயமாதலில் இருந்து காத்தான்குடியை மட்டக்களப்பை மீட்பதாக சொல்லி வீதி நெடுகிலும் உயர வளர்ந்து காய்த்துத் தொங்கும் பேரித்தம் மரங்களை வெட்டுவதற்கும், புத்தளத்தில் பேரித்தம் மரத்தை தடை செய்வதற்கும் முனையும் யாரையும் அனுமதிக்க மாட்டோம் அவர்களுக்கு மக்கள் தேர்தலில் வாக்களிக்க விடவும் மாட்டோம்.

இப்ளால் அமீன்
29.05.2019
Share:

நாத்தாண்டிய பிரதேசத்தில் தாக்குதல் நடாத்திய 31 பேருக்கு பிணை வழங்கியது நீதி


1518579852-courts-judje-new-l
நாத்தாண்டிய பகுதியில் இனவாத 
வன்முறை செயல்களில் ஈடுபட்டமை 
தொடர்பில் கைது செய்யப்பட்டு 
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 
31 நபர்களுக்கும் பிணை 
வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் தலா ஐம்பதாயிரம் 
ரூபா பெறுமதியான சரீரப்பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாறவில மாவட்ட நீதவான் சிரிமேவன் மஹேந்திரராஜாவினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு 
எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 
குறித்த பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயலினால் ஒருவர்
 உயிரிழந்ததுடன் ஏராளமான 
சொத்துக்களும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Daily Ceylon)
Share:

தேசத்திற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருவோம் ; புலனாய்வுச் சிங்கம் துவான் நிஷாம் முத்தலிப் (තුවාන් මුතලිබ්)
 இலங்கை தேசத்திற்காக முஸ்லிம்கள் பல்வேறுபட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றனர் ஆனால் இன்றைய சமூகம் அவற்றை ஞாபகப்படுத்த மறந்திருக்கின்றது, , அந்தவகையில் இலங்கை இராணுவத்தில் இணைந்து  உயிர்நீத்த ஒரு  முஸ்லிம் தியாகி பற்றிய பதிவே இதுவாகும்.

அறிமுகம்

துவான் முத்தலிப் மலே முஸ்லிம் குடும்பத்தில் 1966 july 11 ல் களுபோவலையில் பிறந்தவர்,DS சேனநாயக்க, கல்லூரியில் கற்கும்போதே விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைத்தவர்

படையில் இணைவு

1986 ல் Srilanka Army ல் Cadet Officer ஆக இணைந்த இவர் தியத்தலாவை பயிற்சிக்கல்லூரி, Pakistan Military Academy, போன்றவற்றில் சிறப்பு பயிற்சி பெற்றார்,பின்னர்  2nd லெப்டின்னாக 4ம் Gamunu Regiment ல் இணைந்த இவர் அவரது சிறந்த சாதுரியத்தின் காரணமாக 1989ல் லெப்டினனாக தரமுயர்வு பெற்றார்,

சிறப்புச் சேவை

1990 ல் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவில் ( Military Intelligence) ன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்,  அதிலும் பல உயர்பதவிகளை வகித்ததுடன், GSO என்ற உயர் அதிகாரியாக வட கிழக்கில் அதிக காலம் பணி புரிந்தார்,

விஷேட ஆற்றல்  

தமிழ், சிங்களம் ,ஆங்கிலம் போன்ற பல மொழி ஆற்றல் உடையவராக இவர் விளங்கியதால், அக்காலத்தில் இயங்கிய LTTE னரின் பல்வேறுபட்ட உளவுத்
தகவல்களை இலகுவாகப் பெறக்கூடிய ஆற்றல் இவரிடம் இருந்தது, குறிப்பாக தமிழ் மொழி பரீட்சியம், இவருக்கான விஷேட சிறப்பம்சமாகும், அதனையவர் சிறப்பாகக் கையாண்டார், 

இராணுவத்தின் பல வெற்றிகளுக்கும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உதவிய சிறப்பு அதிகாரியாக முத்தலிப் விளங்கினார், பின்னர் 2004ல்  கொழும்பில் உள்ள  புலனாய்வுப் பிரிவு பகுதியின் Director என்ற தரவுயர்வு பெற்றார்,

வீர மரணம்

சமயப்பற்றும், சிறந்த குடும்ப்ப் பின்னணியையும் கொண்ட  சாறா, மலிக், என்ற, இரண்டு குழந்தைகளின் தந்தையான முத்தலிப்  தனது 38 வது வயதில் கொழும்பில் உள்ள Polhengoda என்ற தனது விட்டுக்கு அருகில் வைத்து LTTE தீவிரவாதிகளால்  சுடப்பட்டார், இவரது உடல் பூரண  இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறக்கும்போது அவர் 19 வருட சேவையை நிறைவு செய்திருந்த்துடன்,இராணுவ உயர் விருதுகளான Rana wickrama parakkirama, North & East Operation Medal, Operation Wadamarachchi Medal, .. போன்ற பல உயர் விருதுகளைப் பெற்றிருந்தார்,

 எமக்கான படிப்பினை

முத்தலிப் போன்றோர் இந்நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, இராணுவத்தில் இணைந்து தன்சமூகத்தை மட்டுமல்ல, முழுத்தேசத்தையும் பிரிவினைவாதிகளிடம் இருந்து காக்க தம் உயிரை அர்ப்பணித்தவர்கள், இவரைப்போல தமிழ் மொழி புலமை உடையவர்களின் பஙரகளிப்பின் மூலமே இராணுவத்தினர் வடகிழக்கில் போரில் முன்னேறவும், முழு நாட்டைக்காக்கவும் முடிந்தது,

அத்தோடு வடகிழக்கில் பயங்கரவாதிகளினால் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், இவர் பெற்றுக்க கொடுக்கவும், அம்மக்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் உதவினார்,

அந்தவகையில்  வரலாற்றில் இந்த நாட்டின் அனைத்துத் துறையிலும் முஸ்லிம்கள் பணியாற்றியது, போல யுத்த கால இலங்கைக்கும் இத்தேசத்தின் வெற்றிக்காகவும் பலர் தமது உயிரை அர்ப்பணித்துள்ளனர்,

முத்தலிபைப் போன்ற   தியாகிகளின் தியாகத்தை இன்று வரை வருடா வருடம் நமது சமூகம் நினைவு கூரத் தவறியதும், , இவ்வாறான இராணுவ   பணிகளில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக இளைஞர்கள் தம்மை போதியளவு இணைத்துக் கொள்ளாமையும்  இன்றைய வன்முறை, மற்றும்,முரண்பாட்டு நிலைக்கான காரணிகளில் ஒன்றாகும்,

எனவேதான் ,இனியாவது இவர்களின் சேவைகளை ஆண்டுக்கொருமுறையாவது, சமூகம் சார்பாக   நினைவு கூர்வதுடன் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் இராணுவத்தில் போதியளவு இணைந்து பணியாற்றுவதும்  முஸ்லிம் சமூகத்தின் இன்றைய  கட்டாய கடமையாகும்.MUFIZAL ABOOBUCKER
DEPARTMENT OF PHILOSOPHY 
UNIVERSITY OF PERADENIYA
28:05:2019
Share:

அமைச்சர் றிஷாத் மீது பாயும் ஊடக பயங்கரவாதம்...!!!இலங்கையில் கடந்த மாதம் 21ம்திகதி உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிற்பாடு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக  தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகளுடன்  அமைச்சர் றிஷாத்துக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாகவும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு  சில பாராளுமன்ற உறுப்பினர்களால் திணிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் அது ஊடுறுவியுள்ளது.

அது மட்டுமன்றி கடந்த காலம் தொட்டு அமைச்சர் றிஷாத் மீதான பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டொன்றும் இருந்து வருகின்றது. இவை அனைத்தையும் சாதகமாக பயன்படுத்தி ஒரு சில பெரும்பான்மை அரசியல் வாதிகள் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி குளிர்காய முனைகிறார்கள் அதற்கு பகடைகாயாய் ஒரு சில இனவாத ஊடகங்களும் இருந்து வருகின்றது.

இலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புக்கள்   மதங்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணுவதற்கும்,இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுளை தோற்றுவிப்பதற்கும்,  தங்கள் அமைப்புக்களுக்கு எதிராக செயற் படுகின்றவர்களை இல்லாதொழிப்பதற்கும், பாமர மக்களை மூலைச்சலவை செய்வதற்கும் இவ்வாறான   ஊடகங்களையே முன்நிலைப்படுத்துகிறார்கள்.

ஊடகத்துறையானது இன,மத,நிற,வர்க்க,கட்சி,இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு நடு நிலையாக பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும் அதுவே ஊடக தர்மமாகும் அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த  ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன நாட்டின் பொருளாதார மேம்பாடு  தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.

எவ்வாறாயினும்  றிஷாத் என்பவர் தனி மனிதரல்ல ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை  பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  ஒரு கட்சியின் தலைவர்,ஒரு  அமைச்சர், அனைத்துக்கும் அப்பால் ஆளும் கட்சியிலுள்ள ஒரு அரசியல் பிரமுகர், ஜனாதிபதி பிரதமருடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்ற ஒரு அரசியல் வாதி அவரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதென்பது சாதாரண விடயமுமல்ல.

இலங்கையிலுள்ள ஊடகத்துறையில் பிரபல்யமான காட்சி ஊடகமான சிரச,சுவர்ணவாஹினி,தெரன,சக்தி,ஹிரு  போன்ற ஊடகங்களே அமைச்சர் றிஷாத் மீதான குற்றச்சாட்டை  திரிவு படுத்தி  குறிப்பிட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை மறைத்து பூதகரமாக்கி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இவயனைத்துக்கும் பின்புலத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சஹாக்களே இருக்கின்றார்கள். என்பதனையும் பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து வெளி உலகுக்கு காட்டிவிட்டார்கள். அதுவும் கை நளுவிப் போயிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறான ஊடகங்களை மையப்படுத்தி காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து விட முயற்ச்சிக்கிறார்கள்.

குறிப்பாக ஊடகத்துறையை வழி நடத்துபவர்களை    மக்கள்  கண்ணியமாக  கருதுகிறார்கள்.  ஏனெனில் உலகத்தில் எந்த மூலையில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் பல் வேறு தியாகங்களுடன் அதனை உடனுக்குடன் மக்களுக்கு அறியத்தருகிறார்கள்.   ஆகவே இவ்வாறான ஊடகங்களை வழிநடத்தும் ஊடகவியலாளர்கள் நடுநிலையாக செய்திகளை வழங்குவதோடு  ஊடக நிறுவனங்களும்  பக்கச்சார்பின்றி  செயற் பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறாயினும் அமைச்சர் றிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்துக்கு முன் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் அதற்குறிய தண்டனை அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.மாறாக அதைவிடுத்து தனி நபரின் நப்பாசைக்காக ஊடக தர்மத்தை இல்லாதொழிக்க முனைவது ஊடகத் துறைக்கு  ஆரோக்கிமானதொன்றல்ல

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை
Share:

மேல் மாகாண சபைத் தேர்தலை உடனே நடாத்த உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்


மேல் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடுவலை பிரதேசத்தைச் ​சேர்ந்த சிரிசென தொலவத்த என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உள்ளிட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

கடந்த எப்ரல் 21ம் திகதியுடன் மேல்மாகாண சபையின் காலம் நிறைவடைந்துள்ள போதிலும் தேர்தல் நடத்தப்படாமையால் அந்த மாகாணத்தில் வாழும் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

(AdaDerana)
Share:

இலங்கை சூழலில் இஸ்லாமிய எதிர்பை (Islamophobia) எதிர்கொள்வது எப்படி.?


இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இன்று மிகப் பெரிய நிறுவனமாகும் (Industry).அதற்கென பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன.பலர் முழு நேர ஊழியர்களாக தொழிற்படுகின்றனர் .இந்த வகையில் இலங்கை சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை எதிர்கொள்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.

01.இஸ்லாமிய எதிர்ப்பின் மிகப் பெரிய இலக்கு நபியவர்களாகும் .முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நபியவர்களை நேசிப்பதை அவர்கள் நன்கு அறிவர் .எனவே எம்மை கோபப்படுத்துமாறு பல விடயங்களை எழுதுவர் ,பிரச்சாரம் செய்வர் .
இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி எந்த மொழியில் எதிர்ப்பு அமைகிறதோ அந்த மொழியில் நபியவர்களின் வாழ்கை வரலாறு .அவரது வாழ்வில் அவர் எடுத்த முடிவுகளின் நியாயங்கள் .... Etc வெளியிட வேண்டும் ,கலந்துரையாடல்கள் ,ஊடக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

02.அடுத்த முக்கிய அம்சம் இஸ்லாத்தை பயங்கரவாத்த்துடன் தொடர்புபடுத்தவர் .அதற்கென முஸ்லிம் சமூகத்தில் இருந்தே ஆட்களை தெரிவு செய்து ஆயுதங்களைக் கொடுத்து பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்குவர் .இந்த இடத்தில் நாட்டின் பாதுகாப்பு தரப்பிற்கு தீவிரவாத சிந்தனை கொண்டோரை அடையாளப்படுத்திக் கொடுப்பது முஸ்லிம்களின் மார்க்க ரீதியான கடமையாகும் .அத்துடன் அவ்வாறான சிந்தனைகளின் உண்மையான பின்புலத்தை விளங்க வைப்பதற்கு சமூக மட்டத்தில் பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஒரு நிகழ்வு நடந்து  விட்டால் உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாத சமூகங்களிற்கு தெளிவுபடுத்த முயற்சிகள் செய்ய வேண்டும்.

03.அடுத்த முக்கிய அம்மசம் ஊடகங்கள் ,அனேக முஸ்லிம் அல்லாத ஊடகங்கள் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துமாறு தோடராக செய்திகளை வெளியிடும் .அவற்றை ஆவணப்படுத்தி உரிய இடங்களில் முறைப்பாடு செய்வதுடன் தேவையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஊடகப் பிரச்சாரத்திற்கு தெளிவான எதிப்பிரசாரத்தை முன்வைக்க வேண்டும்.

04.அடுத்த முக்கிய அம்சம் இனவாத்த்தை வளர்ப்பதாகும் .முதலில் நாம் இனவாதிகளிற்கு களம் அமைத்துக் கொடுக்குமாறு எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளக் கூடாது .தற்போது நடப்பது போன்று அவர்களது நிகழ்வுகளிற்கு நாம் ஊடகப் பிரச்சாரத்தை வழங்கக் கூடாது .தேவையான இடங்களில் பாதுகாப்பு துறையிடம் தொடராக முறைப்பாடு செய்ய வேண்டும்.

05.இஸ்லாமிய எதிர்பின் அடுத்த முக்கிய அம்சம் அச்சுருத்துமாறு கடுமைஊ தொனியில் பேசுவர் .இந்த எந்த அச்சுருத்தளிற்கும் அஞ்சக் கூடாது அவற்றை அறிவு பூர்வமாக உரியவர்கள் ,உரிய முறையில் கையாள வேண்டும்.

06.அடுத்த முக்கிய அம்மசம் தேசிய ,கிராமிய மட்டங்களில் சர்வமத கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். அவை நிறைய பிரச்சினைகளை தீர்க்க உதவும்.

07.அடுத்து சிலர் அனுசரனை பெற்று (Sponsor) இஸ்லாமிய எதிர்ப்பை மேற்கொள்வர் ,அவ்வாறு அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் ,வெளிநாட்டு அரசுகள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதுன் .அவைகளை சட்டரீதியாக தடுக்க தடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

08.நாட்டில் உள்ள எல்லா வாசிகசாலைகளிற்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுபடுத்தும் நூல்களை அன்பளிப்பு செய்ய வேண்டும் .இஸ்லாமிய எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு என தனியான சஞ்சிகை சிங்கள மொழியில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

09.இஸ்லாமிய எதிர்பின் தற்போதைய மிகப்பெரிய தளம் சமூக ஊடகங்களாகும் .அவர்கள் முஸ்லிம்களை தூண்டுமாறு பதிவுகளை இடுவர் (உதாரணமாக புனித கஃபா மீது பன்றியை வைத்து படங்களை பதிவேற்றம் செய்தல்) இந்த இடங்களில் நாம் பின்னூட்டல்களை(Comments) வழங்க முற்படக் கூடாது .மாறாக அவற்றை முதலில் கானும் ஒவ்வொருவரும் Report பண்ன வேண்டும். பாதுகாப்பு தரப்பிடமும் தொடராக பல இடங்களில் முறைப்பாடு செய்ய வேண்டும். அவர்கள் முழு நேர ஊழியர்களை வைத்து வேலை செய்வது போன்று நாமும் முழு நேர ஊழியர்களை வைத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

10.தேர்தல் காலங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும் இவ்வாறான காலங்களில் ,முஸ்லிம் அரசியல் தலைமைகள் .மிகவும் பொறுப்புடன் கவனமாக கருத்துக்களை வெளியிட வேண்டும். ஏனெனில் சிலரது அரசியேலே இஸ்லாமிய எதிர்ப்பாகும் .அத்துடன் அரசியல் நிலைப்பாடுகளும் கவனமாக எடுக் கப்பட வேண்டும்.

11.ஊடகங்கள் ,அல்லது அரசியல் தலைவர்கள் அல்லது மதகுருக்கள் இஸ்லாமிய எதிர்பை வெளியினும் போது உரிய தரிப்பிற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

12.கிராமிய மட்டங்களில் இஸ்லாமிய எதிரப்பை ஜனநாயகரீதியாக ,சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு உரிய ஒழுங்குளை செய்து கொள்ள வேண்டும்.

13.இஸ்லாமிய எதிர்பை நீதமாக எதிர்க்கும் முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் ,அரசியல் சமூகத்தலைமைகளிற்கு எப்போதும் நன்றி செலுத்த வேண்டும்.

14.இஸ்லாத்தின் மீதும் ,முஸ்லிம்கள் மீதும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையாக தொழிற்பட வேண்டும் .முஸ்லிம் என்பதற்காக ஒரு பிழையான விடயத்தை நியாயப்படுத்த முற்படக்கூடாது.

எம் .என் முஹம்மத் -ஆசிரிய ஆலோசகர்.
Share:

அமித் வீரசிங்கவுக்கு நாளைய தினம் வரை விளக்க மறியல்


மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். 

சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சந்தேகநபரை நளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

(அத தெரண)
Share:

"சேனா" கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சேனா  கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபா 21 இலட்சத்திற்கும் அதிகமான நஷ்ட ஈட்டுத் தொகை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 

நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியுடைய 77 விவசாயிகளில் முதல் கட்டமாக 10 பேருக்கான நஷ்ட ஈடு ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம். 
Share:

வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு


வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ;
மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு

( மினுவாங்கொடை நிருபர் )

   உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காரணமாக வைத்து, சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு சமூகமளிக்கச் செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

   இது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள், மினுவாங்கொடை புருல்லப்பிட்டிய (சிங்கள) மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பிரதேச வாழ் முஸ்லிம் பெற்றோர் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

   இதற்கு முன்பு, இப்பாடசாலையில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை, வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தினத்தன்று உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினத்தன்று, இம்மாணவர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக வீடு செல்வதற்கு, குறித்த பாடசாலையின் அதிபர் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

   இதேவேளை, "இனிமேல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்ல கேட்டு வரவேண்டாம். அதற்கு நாம் அனுமதி தரவும்  மாட்டோம்" என்றும், முஸ்லிம் மாணவர்கள் எச்சரிக்கப்பட்டுமுள்ளனர். 
மினுவாங்கொடை, புருல்லப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

ஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போமா?


ஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போமா?
★★★★★★★★★★★★★★★★★★★★

★ஜெம்ஸித் அஸீஸ்★

ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தது.

தாக்குதலில் பலியான அப்பாவி பொது மக்களுக்காக கண்ணீர் வடித்தது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

சாய்ந்தமருதில் மறைந்திருந்த தீவிரவாதிகளை படைத் தரப்புக்கு காட்டிக் கொடுத்தது.

தற்கொலைத் தாக்குதல்தாரிகளின் உடலை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க மறுத்தது.

முஸ்லிம்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை என்றது.

அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிக் கிரியை நடத்த நாம் தயாரில்லை என்றது.

இன்று வரை அவர்களை சரி காண ஒரு முஸ்லிமேனும் முன்வரவில்லை.

அந்த ஈனச் செயலைப் புரிந்தவர்கள், துணை நின்றவர்களையெல்லாம் சபித்து வருகிறது  முஸ்லிம் சமூகம்.

முஸ்லிம் தனவந்தர்களும் முஸ்லிம் வியாபார நிலையங்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினூடாக முஸ்லிம் மக்களும் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் காயப்பட்டவர்களுக்கும் தம்மாலான நிதி உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தனைக்குப் பிறகும், முழு முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதப் பட்டம் கொடுக்க பலரும் முயற்சிக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் அனைவருமே குற்றவாளிகள். அவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்… இவ்வாறு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கும் தோரணையுன் நடந்து கொள்கிறார்கள். சில இனவாத ஊடகங்கள் அதற்கு கலன் கலனாய் எண்ணெய் வார்க்கின்றன.

முஸ்லிம்களின் முதுகெலும்பை முறித்துப் போட இதனை விட வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. குட்டையோ நன்றாக கலங்கியிருக்கிறது. மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி நிற்கிறார்கள் பலர்.

விளைவாக முஸ்லிம்களும் குற்ற உணர்வோடு கூனிக் குறுகி நிற்கிறார்கள். அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். தம்மை முஸ்லிம்களாக இனங்காட்ட வெட்கப்படுகிறார்கள் சிலர். இந்த நாட்டில் இனியும் வாழலாகாது. நாடு துறந்து வேறெங்காவது சென்று வாழ்வதுதான் நல்லது என்று சிந்திப்பவர்களும் இல்லாமல் இல்லை.

முஸ்லிம் சமூகத்தினரே! இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் எஜன்டாவுக்கு விலை போனவர்கள் செய்த வேலை இது. அவர்களது பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக இருப்பதனால் நாங்கள் எப்படி குற்றவாளிகளாக முடியும்?

தேசத் துரோகம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் மாபியா, கடத்தல், பாதாள உலக குழுவினரின் அட்டகாசம்… என்று பஞ்சமா பாதகங்கள் தினம் தினம் நடக்கின்றன. தனி மனிதர்களாகவும் குழுக்களாகவும் அவை அரங்கேறுகின்றன. அவர்களது குற்றங்களுக்கு அவர்கள் சார்ந்த இனமோ மதமோ பொறுப்பல்ல.

எனவே, அநாவசியமாக நாம் குற்ற உணர்வோடு வாழ வேண்டியதில்லை. குற்றமிழைத்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதே நமது கடமை.

என்றாலும், இந்தத் தாக்குதல் மதத்தின் பெயரால் நடந்திருப்பதனால் சூழ்நிலை சற்று சூடாகவே இருக்கிறது. அதனைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் குறி வைக்கப்படலாம். அநாவசிய கெடுபிடிகளுக்கு உள்ளாகலாம். துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடலாம். சின்னச் சின்ன விடயங்கள் பூதாகரப்படுத்தப்படலாம். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வஞ்சிக்கப்படலாம். வெறுக்கப்படலாம். முன்பு புன்முறுவல் பூத்தவர்கள் இப்போது முறைத்துப் பார்க்கலாம். நெருக்கமாக பழகியவர்கள் தூர விலகிச் செல்லலாம். எந்தக் காரணமின்றியும் சோதனையிடப்படலாம்.

இந்த சந்தர்ப்பங்களில் நாம் பொறுமை காக்க வேண்டும். ஆவேசப்படுவதற்கும் ஆத்திரத்தைக் கொட்டுவதற்குமான சந்தர்ப்பமல்ல இது. நிதானமிழக்காது சமயோசிதமாக நடந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். முதலில் இந்த சூழலை எதிர்கொள்ளத் தேவையான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுகளை ஒருபக்கம் வைத்து விட்டு அறிவுபூர்வமாக பேசவும் கலந்துரையாடவும் செயற்படவும் வேண்டும். முரண்பாட்டுக்கு வழிவகுக்கும் விடயங்களைத் தவிர்க் வேண்டும். விதண்டாவாதம் வேண்டவே வேண்டாம். படைத் தரப்பினருக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஆதாரமற்ற விடயங்களையும் எமக்குத் தெரியாதவற்றையும் பொய்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்ற கருத்துக்களை ஒருபோதும் பகிர்ந்து விடக் கூடாது.

இலங்கை எமது தாய் நாடு. நாம் இங்கு இரண்டாம் தரப் பிரஜையல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை எமக்கும் உண்டு. மத சுதந்திரத்தை எமது நாட்டின் சட்ட யாப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் இங்கு வெளிநாட்டவர்கள் போல் வாழ வேண்டியதில்லை. அந்நியப்பட்டு பிரிந்து நிற்க வேண்டியதில்லை. நாட்டு நலன்தான் எமது நலன். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாட்டைப் பாதுகாப்பது எமது கடமை. ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து போராடியவர்களின் வாரிசுகள் நாம் என்பதை ஒருபோதும் நாங்கள் மறந்து விடக் கூடாது.

ஒரு முஃமின் சோதனைகள் வரும்போது அதனை எவ்வாறு எதிர்கொள்கின்றான் என்பதனை அல்லாஹுத் தஆலா பார்க்கின்றான். பரிசோதிக்கின்றான். தற்போதுள்ள சூழலை மையமாக வைத்து நாம் எதிர்காலம் குறித்து அச்சமடையவோ நம்பிக்கையிழக்கவோ தேவையில்லை. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள், பண்பாடுகள், நற்குணங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

ஆனால், கடந்த காலங்களில் நாம் மார்க்கத்தின் பெயரால் விட்ட தவறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து பாடம் கற்கவும் வேண்டும்.

நபியவர்களது காலத்தில் முஸ்லிம்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் இது உங்களது தவறுகளால் நடந்த தோல்வி என்பதை சுட்டிக்காட்டி அல்லாஹ் அவர்களது தவறுகளை திருத்த சந்தர்ப்பம் அளித்தான்.

எனவே, நாம் எங்கு சமூகமாக தவறிழைத்திருக்கின்றோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் இது. எமது பண்பாடுகள், நடத்தைகள், வெளித் தோற்றங்கள், முஸ்லிம் சமூகத்தினருடனான உறவு, மாற்றுக் கருத்து தெரிவிப்போருடனான தொடர்பு, சகோதர மதத்தவர்களுடனான உறவு… முதலானவற்றில் எமது கடந்த கால அனுபவங்களை மீட்டிப் பார்த்து படிப்பினை பெற வேண்டிய காலம் இது.

இந்த நெருக்கடியான கால கட்டத்திலும் நாம் எமது உள்வீட்டுச் சண்டையை சந்திக்கு கொண்டு வரக் கூடாது. இயக்க, கட்சி பேதங்களால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறக்க வேண்டிய தருணம் இது. பழைய வெறுப்புணர்வும் காழ்ப்புணர்வும் பழிவாங்கும் உணர்வும் எம்மை வழிநடத்தலாகாது.

பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் ரமழான் கற்றுத் தரும் அரிய பாடங்கள். சோதனைகளை பொறுமையுடன் எதிர்கொள்வதில் வெற்றி இருக்கிறது.

சோதனைகள் பொதுவாக இரண்டு வகையான எதிர்விளைவுகளை நோக்கி ஒரு மனிதனை நகர்த்தி விடும்.

01. மதச் சார்பின்மை
02. தீவிரவாதம்

இந்தக் கட்டத்தில், மார்க்கத்தைப் பின்பற்றுவதனால்தான் எமக்கு இந்த சோதனை என்று கருதி மார்க்கத்தை விட்டும் தூரமாகி நிற்க சிலர் முயற்சிப்பர். அதற்கான காரணங்களையும் பட்டியலிடுவர். தமது வாதத்தை நிறுவ முயற்சிப்பர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மார்க்கத்திலிருந்து விலகி மார்க்கத்தின் அடிப்படையிலிருந்தே தூரமாகி விடுவர். மற்றவரையும் தூரமாக்கும் முயற்சியில் ஈடுபடுவர். இது ஆபத்தானது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

மறுபக்கம், சோதனைகளும் தொடர்ந்தேச்சியான அடக்குமுறையும் தீவிரவாதத்தின்பால் மற்றும் சிலரைத் தள்ளி விடும் அபாயமும் இருக்கிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விடும்.

இந்த இரு திசைகளின்பால் முஸ்லிம் சமூகத்தை நகர்த்துவதற்கான முயற்சிகள் திரை மறைவில் இடம்பெறலாம். இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

குறிப்பாக முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். நவீன யுகத்தில் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது நண்பர்கள் யார், எவ்வாறான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், யாருடன் தொடர்பிலிருக்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க கடமைப்பட்டுள்ளனர். தீவிரவாத சிந்தனையின்பால் தமது பிள்ளைகள் கவரப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துவது பெற்றோரின் பாரிய பொறுப்பு.

சமூக ஒழுங்கு, சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கின்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்குரியது. ஊர் மட்ட, தேசிய மட்ட சமூக சன்மார்க்க தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் நாட்டு சட்டங்களை மதித்து நடக்கவும் வேண்டும்.

ஏனைய சமூகத்தினருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஊர், பிரதேசம், மாவட்டம், தேசிய மட்டங்களில் அரச இயந்திரத்துடன் இணைந்தும் சமூக நலப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.  கிராம சேவகர், மாவட்ட அதிகாரி, பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர், நகர சபை, மாநகர சபை… என்று எங்கெல்லாம் அரச நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணகளில் ஈடுபட முடியுமோ அங்கெல்லாம் எமது ஒத்துழைப்பை வழங்குவது கட்டாயம்.

இனியும் நாம் தனியாகவோ தனித்தோ இயங்க முடியாது. இணைந்து பணியாற்றுவதில்தான் பலன் அதிகம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

★Jemsith Azeez★
majemsith83@gmail.com
27.05.2019
Share:

மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது - சிறிசேன


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிநாட்டுத் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி , தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாகவும் உறுதியளித்தார்.

பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டினார்.
ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்பையும் பொருளாதார அபிவிருத்திக்கான உதவியையும் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குவதற்கு உதவுமாறும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தூதுவர்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக உறுதியளித்தனர்.

இதேநேரம், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நபர்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறித்தும் விளக்கினார்.

மேலும் இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

(மெட்ரோ நியூஸ்)
Share:

உதவியாகக் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைத்தோம் ; ஆச்சரியமூட்டும் படிப்பினை


ஆச்சரியமூட்டும் படிப்பினை
————————————

“நிறைய பேர் எங்களுக்கு பண உதவி செய்தார்கள். நாங்கள் சேகரித்த சீட்டுப் பணம்,மகளின் நகைகள்,மருமகனின் சம்பள பணம் இனவாதிகள் கொள்ளையிட்டு சென்றதனால், கிடைத்த பணம் அனைத்தையும் கொடுக்க வேண்டிய சீட்டுக்குரியவருக்கு கொடுத்து எங்களுடைய கடனை தீர்த்துக் கொண்டோம். கடன் தானே மகன்; அதனை முதலில் கொடுத்து விட வேண்டும் தானே.”

மகனின் சம்பளப்பணத்தோடு சேர்த்து இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், மகளின் 8 பவுண் நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தாய் சொன்ன வார்த்தைகளே இவை. அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதில் கஷ்டத்தை எதிர் நோக்கும் போதும், கடனோடு வாழக் கூடாது, கடனோடு மரணித்து விடக் கூடாது என்ற அந்தப் பெண்ணின் எண்ணத்தைக் கண்டவர்களின் திகைப்பு இன்னும் நீங்கவில்லை.

நான் நேற்று,#தும்மோதரை ல் கேட்ட சம்பவம்!

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால்பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

(அஸீம் ஜௌபர்)
Share:

மீண்டும் சிறைச்சாலைக்கு கண்ணீருடன் மஸாஹிமா ; பிணை வழங்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லையாம்


மீண்டும் சிறைச்சாலைக்கு கண்ணீருடன் மஸாஹிமா

#தர்மசக்கரமா???? கப்பலின் சுக்கானா ?????
===============
ஹசலக பொலிசாரால் தர்ம சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது ஊடாக இரு சமூகங்களுக்கிடையிலே இன முறுகளை ஏற்படுத்தியமைக்காக அப்பாவி முஸ்லிம் பெண்ணை கடந்த 14 நாட்களாக மகியங்கனை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததமை நீங்கள் அறிந்த விடயமே.

இன்று   27/05/2019  மேற்கூறப்பட்ட வழக்கு மகியங்கனை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.

" குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரம் அல்ல அது கப்பலின் சுக்கான் ( steering wheel ) ஆகும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எம்மால் கொண்டு வரப்பட்டது.

அத்துடன் பிரித்தானிய பிரஜை Coleman தொடர்பான tattoo வழக்கின் தீர்ப்பினை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

போலீசாரின் வேண்டுக்கோளுக்கிணங்க குறித்த ஆடை ஆனது பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்திற்கும் தர நிர்ணய சபைக்கும் அறிக்கைக்காக அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ICCPR சட்டத்தின் நோக்கம் இனங்களுக்கினையே இன முறுகள் வராமல் தடுப்பதே ஆகும். ஆனால் குறித்த அப்பாவியான நோயாளியை எந்த விதமான குற்றமும் செய்யாமல் 14 நாட்கள் தடுத்து வைத்தீர்கள் என்று பொலிசாரிடம் கேட்டதற்கு

" 10 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட அந்த கிராமத்திற்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவே இவ்வாறு மேற்கொண்டோம்" என்று பதிலளித்தனர்.

எது எவ்வாறு இருப்பினும் வழக்கில் எமக்கு சார்பாக இருந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி பிணைக்கோரிக்கை முன் வைத்தோம்.

ஆனால்
இவ்வழக்கானது ICCPR சட்டத்தன் கீழ் பொலிசாரினால் தொடுக்கப்பட்டிருப்பதால் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என எமது பிணை கோரிக்கையை நிராகரித்து வழக்கை எதிர்வரும்        03/06/2019 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இறுதியாக சிறை கைதிகள் மத்தியில் கண்ணீருடன்  நின்ற சகோதரி மசாஹிமாவை ஆரத்தழுவி ஆறுதல் வார்த்தைகளை கூறிய பின் தனது கண்ணீரை துடைத்த வண்ணம் எனது மனைவி நுஸ்ரா நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

இவ்வழக்கில் என்னுடன் எனது மனைவி சட்டத்தரணி நுஸ்ரா சறூக் மன்றில் தோன்றினோம்.சட்டத்தரணி சறூக்
0771884448
Share:

மொபைலுக்கு VPN செயற்படுத்த 100 ரூபா வாங்கிய கடைகள்


ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் VPN இற்கான கேள்வி அதிகரித்தது. இணையத்தளப் பாவனையாளர்களில் 95 வீதமானவர்களுக்கு அது பற்றித் தெரியாது. அரசு சமூக வலைத்தளங்களை முடக்கினாலும் 58% ஆனவர்கள் அவற்றை VPN மூலம் பாவித்துள்ளனர்.

VPN இனை செயற்படுத்தத் தெரியாதவர்களை வைத்து சில கடைகள் இலாபம் பார்த்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. குறித்த கடைகள் VPN இனை செயற்படுத்த 100 ரூபா அறவிட்டனவாம். அத்துடன் சில தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு VPN குறித்து வகுப்பில் பாடம் எடுத்துள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.
Share:

இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி

இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கினியம, வெல்லவ பகுதிகளுக்கு
மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(மாவனல்லை  நிருபர்)

குருநாகல் மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட கினியம மற்றும் வெல்லவ பகுதிகளுக்கு  மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினர் விஜயம் செய்தனர். இதன்போது, இனவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கினியம பிரதேசத்துக்கான நிவாரண பொருட்களை கினியம தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் எம்.எச்.சதகதுல்லாஹ்விடம் மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எம்.கே.எம.மிக்ஷாட் வழங்கி வைத்தார்.

அத்துடன், வெல்லவ பகுதிக்கான ஒரு தொகை நிவாரணப் பொதிகள் வெல்லவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் அல்-ஹாஜ் பௌசானிடம் ஒப்படைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
 Share:

முஸ்லிம்கள் அநாவசியமாகக் கைது செய்யப்படுவதை ஏற்க முடியாது - ஆளுநர் அஸாத் சாலி
முஸ்லிம்கள் அநாவசியமாகக்  கைது செய்யப்படுவதை ஏற்க முடியாது 
- ஆளுநர் அஸாத் சாலி

( மினுவாங்கொடை நிருபர் )

   எவ்வாறான  சட்டவிரோதப்  பொருட்களை ஒருவர் வைத்திருந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்ற வரையறையொன்றை அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தவேண்டுமென,  மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
   அன்றாடம் திட்டமிட்ட முறையில்  முஸ்லிம் மக்கள் அநாவசியமாகக்  கைது செய்வதை ஏற்கமுடியாது.  சட்டவிரோதப்  பொருட்கள் தொடர்பில் வரையறையொன்றை மக்களுக்குத்  தெளிவுபடுத்துவது முக்கியம்.
 1983 ஆம் ஆண்டு 13 சடலங்களே கொழும்புக்கு வந்த நிலையில்,  அதுவே 30 வருட யுத்தத்துக்கு வழி வகுத்தது என்பதால், நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியமாகும்.
   இதுபோன்ற அழிவுகள் நாட்டில் இனியும் வந்துவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். எனினும்,  அப்படியான நிலையொன்று நாட்டில் ஏற்பட வேண்டுமென்றே சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகச்  செயற்படும் இவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.
   சட்டம்,  எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ பாரபட்சமாக இருக்கக்கூடாது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட ரீதியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் மக்கள் அனைவரையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பாமர மக்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை,  சம்பந்தப்பட்டோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
   நாட்டில் பாதாள உலக செயற்பாடுகள் போன்று பெரும் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற நிலையிலும், 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களை அடுத்து,  சாதாரண பொது  மக்களே பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.
   தற்போது வாள்களும், கத்திகளுமே பிரச்சினையாகியுள்ளன. இந்த வாள்கள் இரும்புக் கடைகளிலும் விற்கப்படுகின்றன. அவை சட்டவிரோதமானவை என்றால்,  அந்த வாள்கள் இறக்குமதி செய்யப்படும் போது அதனைத் தடை செய்திருக்க முடியும்.
   எங்காவது, ஒரு துருப்பிடித்த வாள் கிடைத்தால்,  அதன் அயலிலுள்ளவர் கைது செய்யப்படுகின்றார். இது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.
   சில இடங்களில் பல தடவைகள் சோதனை செய்யப்பட்ட வீடுகள், பள்ளிகளுக்கு அருகாமையிலும் வாள்கள் அல்லது கைக்குண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அங்கு அவை போடப்பட்டு மீள எடுக்கப்படுகின்றன என்பதே உண்மை. இல்லாவிட்டால்,  பலமுறை சோதனை செய்த இடத்திற்கு இத்தகைய பொருட்கள் எவ்வாறு வர முடியும்.
   இத்தகைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சு,  படையினருக்கு அறிவுறுத்துவது முக்கியமாகும். மக்களுக்கும் சட்டவிரோதப்  பொருட்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
பள்ளிவாசல்களைச் சோதனை செய்ய வேண்டாமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. பள்ளிவாசல்கள் புனிதமான சமயத் தலங்களாகும். அங்கு சப்பாத்துக்கால்களுடன் செல்வது கூடாது என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். 
   நாய்கள் என்பது எமது மார்க்கத்திற்கே தவறான பிராணியாகும். இதற்கிணங்க,  பள்ளிவாசல்களுக்குள் நாய்களை அனுமதிப்பது எந்தளவில் தர்மமாகும். அவ்வாறு நாய்களை வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால்,  முன்பே எமக்கு அறிவித்தால் கார்பட் போன்ற ஏதாவது விரிப்புக்களை நாம் போட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
   பாதுகாப்புச்  சபையில் இது தொடர்பில் முறையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியிடமும் நான் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிருபம்


2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பபடிவம் இன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த சுற்று நிருபம் மற்றும் விண்ணப்படிவம் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதற்கான பத்திரிகை அறிவித்தல் நாளை வெளியிடப்பட இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

அநியாயத்தில் சிக்கிய முஸ்லிம்களும் நியாயத்தின் கரமாக பிரத்தியேக முஸ்லிம் ஊடகத்தின் தேவையும்......


எல்லா திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில் பரந்து விட்டது.அநியாயம்  தலைவிரித்து ஆடுகிறது.முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.முஸ்லிம்களின் இரத்தம் அநியாயக்கார நாடுகளால் பங்கு போடப்படுகிறது.கண்டாலே அரவணைத்து முத்தமிட வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளைக் கூட இரத்தக்கட்டிகளாக மாற்றி விட்டார்கள்.பூங்காவனத்தில் பூக்களோடு பூக்களாய் மலர வேண்டிய பிஞ்சு குழந்தைகள் யுத்த களத்தில் இரத்த ஆற்றில் மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.இது கதையல்ல நிஜம்!நியாயமல்ல அநியாயம்.இதற்கெல்லாம் மாபெரும் பின்னனி இருக்கிறது.உலகின் பல வகையான ஆயுதங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன அவ் ஆயுதங்கள் எண்ணிலடங்காதவை...அதிலும் இந்த மனித வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய அதி பயங்கரமான ஆயுதம் மீடியாவாகத்தான் இருக்கிறது.அந்த வகையில்  முஸ்லிம்களி்ன் கையில் தவழாத ஆயுதமும் மீடியா தான்.மீடியா உலகையே ஆட்டிப்படைக்கிறது.மக்கள் மனங்களில் மீடியா ஆட்சி செய்கின்றது.மீடியாவின் பலத்தை உற்று நோக்கினால் மீடியா இல்லாத இடமே இல்லை என்றாகி விட்டது.மனிதர்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் மீடியாவையே தொடர்பு கொள்கிறார்கள்.மீடீயாவை கத்திக்கு ஒப்பாக கூறலாம்.கத்தியைக் கொண்டு காய்கறி வெட்டி உணவு சமைத்துக் கொண்டு மக்களுக்கு நன்மைகள் செய்யலாம்.அவ்வாறே குத்தி இன்னொருவரை கொலையும் கொலையும் செய்யலாம்.அவ்வாறே மீடியாவில் நன்மைகள் காணப்படுவதை போல் தீமைகளும் குவிந்து கிடக்கின்றன.மீடியாவில் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் இன்றைய கால மக்கள் மீடியா மூலம் ஆபாசத்திலும் ,ஆட்டத்திலும் மூழ்கி வாழ்வையும் சீரழித்துக் கொள்கிறார்கள்.மக்கள் மன்றத்தில் உடனுக்குடன் செய்திகளை எத்திவைக்கும் மீடியா முஸ்லிம்கள் பற்றிய நச்சுக் கருத்தையும் மக்கள் மனங்களில் போடப்பட்ட அந்த விஷக்கருத்துக்கள் காரணமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகள் ,அநியாயக்காரர்கள் ,மிகக் கெட்டவர்கள் ,இழிபிறவிகள் என்று நினைக்கும் அளவிற்கு மீடியா முஸ்லிம்களின் மீது சாயம் பூசி விட்டது.

முஸ்லிமை 'முஸ்லிம்' என்று கூறிய காலம் மலையேறி போய் முஸ்லிமானவன் "முஸ்லிம்  தீவிரவாதி"என்று பெயர் சூட்டும் காலத்தை மீடியா ஏற்படுத்தி வெற்றியும் கண்டு விட்டது.இதனால் ஈராக்கில் இலட்சக்கணக்கணக்கான உயிர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்ட போதும்,பலஸ்தீனில் தெருவெல்லாம் சடலங்களின் மீது நடக்கும் நிலை ஏற்பட்ட போதும் ,சிறுவர்கள் விளையாடும் தெருவெல்லாம் இரத்த ஆறு ஓடுகின்ற போதும் ,யமனில் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்ற போதும்,இலங்கையில் முஸ்லிம்களி்ன் உடமைகளுக்கும் ,உயிர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஏன் இந்த அநியாயத்தை செய்கிறாய் என்று தட்டிக் கேட்க ஒரு மனிதனும் இல்லை ,அமைப்புக்களும் மறைந்துவிட்டது.

இந்த மீடியா முஸ்லிம்களை பெயரளவில் மாத்திரம் வைத்து விட்டு,அவர்களுடைய ஈமானிய உணர்வுகளைப் பிடுங்கி ஜடமாக்கி விட்டது.அதனால் கூத்து கும்மாளங்களை விரும்பும் ஒரு முஸ்லிம் ஈமானை நாவினால் உச்சரிக்கும் சில எழுத்துக்களாக்கி விட்டான்.முழு உடலையும் மறைத்துச் செல்லும் முஸ்லிம் பெண்ணை இன்னாரெு அந்நிய பெண் கேவலமாக நினைக்கும் அளவிற்கு நியாயமான ஆடையை அநியாய மீடியா சந்தையில் ஏலம் போட்டு விற்கிறார்கள்.இவையெல்லாம் மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.இதற்கு நாம் கையிலே எடுக்க வேண்டியது இன்னும் ஒரு மீடியாவைதான் .இமாம் மஹ்தி அவர்கள் உலகத்தை ஆளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே நம்புகிறோம்.அல்லாஹ் நாடினால் அக்காலத்தில் நம் பக்கம் திரும்பலாம் அதுவரைக்கும் முஸ்லிம்களின் உரிமைக் குரலை உரத்துச் சொல்வதற்கு நமக்குள் பல மீடியாக்கள் உதயமாக வேண்டும் இல்லாவிட்டால் நியாயம் அநியாயமாகி விடும் அநியாயம் நியாயமாகி விடும்.இன்று இந்நிலையை நாம் கண்ணூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

"யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ம் நூற்றாண்டின் பலம் வாய்ந்தவர்கள்,யாரின் கரங்களில் விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ம் நூற்றாண்டின் பலசாளிகள் ,யாரிடம் ஊடகப் பலம் இருக்கிறதோ அவர்கள் தான் 21ம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்தவர்கள்" என்ற  மகாதீர் முஹம்மதின் கூற்றுக்கிணங்க 21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ள நாம் இ்ன்னும் எமக்கான ஊடகம் ஒன்று உருவாக்கப்படாமல் இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

ஊடகம் ஒன்று உருவாக்கப்டுவதனால் ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா?என்ற கேள்வி நம்முள் எழுகின்றது...ஆம் இது தனிப்பட்ட கேள்வியல்ல ஒட்டுமொத்த சமூகக் கேள்வியும் இதுதான்.அதாவது ஊடகம் ஒன்று உருவாக்கப்படுவதனால் அனைத்து பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு காணமுடியாது ஆனால் ஒரளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும்.இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆணி வேர் இந்த ஊடகங்கள் தான் இனவாத ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் இல்லையேல் நாம் மேலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.இவ்வாறான இனவாத ஊடகங்களுக்கு இன்னொரு ஊடகத்தினாலேயே பதிலடி கொடுக்க முடியும் .அது முஸ்லிம்களின் முதலீட்டில் ,முஸ்லிம்கள் இயக்குகின்ற தேசிய ஊடகமாக அமைதல் வேண்டும்.அவை இலத்திரனியல்  ஊடகமாக இருந்தாலும் அல்லது அச்சு ஊடகமாக இருந்தாலும் கூட சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடியவாறு இயங்குதல் வேண்டும்.முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மாத்திரம் அல்லாது பிற இனத்தின் உரிமைகளையும் கருத்திற் கொண்டு ஊடக தர்மத்தை  வென்றெடுக்கக் கூடிய ஊடகம் ஒன்றை முஸ்லிம்கள் உருவாக்க வேண்டும்.இதற்காக முஸ்லிம் தலைவர்கள் ,தனவந்தர்கள்,அரசியல்வாதிகள் ,இளைஞர் படை,ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்.
நமக்கான ஊடகத்தின் தேவை கடந்த காலங்களாக பேசப்பட்டு  வந்தாலும்கூட பிரச்சினைகள் தனிந்தவுடன் மறந்து விடுகின்றனர்.இவ்வாறான அசமந்தப் போக்கினாலேயே நம் உரிமைகள் ஒவ்வொன்றாக இழந்து வருகின்றோம்.நமது சமூகம் கல்வியை உலகக் கல்வி ,மார்க்க் கல்வி என வகைப்படுத்தியவாறு சமூக நற்பணிகளையும் உலகம் சார்ந்தவை ,மார்க்கம் சார்ந்தவை என பிரித்து விட்டனர் .இதனாலேயே கடந்தகாலங்களாக முஸ்லிம் சமூகம் நொருக்கப்பட்டு வந்த போதும் இன்னும் முஸ்லிம் ஊடகத்துக்கான அடித்தளங்கள் இடப்படவில்லை...அதாவது கலாநிதி யூசுப் அல் கர்ழாவியின் கருத்தானது "முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் மீடியா ஒன்று உருவாக்கப்படுவதானது ஜிஹாத் செய்வதை விட நன்மை தரும்"எனவே,முஸ்லிம்களின் முதலீட்டில் பிரத்தியேக முஸ்லிம் ஊடகமொன்று உருவாக்கப்படல் வேண்டும் அவை பக்கச்சார்பின்றி ஊடக தர்மத்தை வென்றெடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.இதில் முஸ்லிம்களும் ,முஸ்லிம் அல்லாத நீதியான ஊடகவியலாளர்களும் பயிற்றுவிக்கப்பட்டு செயல்படல் சிறந்தது.இத் தேவை தனிப்பட்ட குழுவின் தேவையல்ல  சமூகத்திற்குமான தேவை எனவே  சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வருதல் காலத்தின் தேவையாகும்.


Miss Afra Noor✍✍✍✍✍✍

Share:

அமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

அமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

சதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார். 

2௦15 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானதில் இருந்து ஏராளமான விசாரணைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் அமைச்சர் றிசாத் விசாரிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவர் மோசடி செய்த குற்றத்துக்காகவே விசாரிக்கப்படுகிறார் என்று கருதியிருக்கலாம். 

ஆனால் இவ்வளவு காலமும் விசாரணை செய்ய தவறியவர்கள் இன்று இனவாதம் ஊதிப்பெருத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு நெருக்கடி தருகின்ற இந்த நேரத்தில் விசாரணை செய்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அமைச்சர் றிசாத் சம்பந்தமாக கடந்த காலங்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதி உள்ளேன். அவரது அனைத்து விடயங்களையும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் விபரித்துள்ளேன். திரும்ப திரும்ப அதனை கூறுகின்ற நேரம் இதுவல்ல. 

முற்போக்கு அரசியல் சிந்தனைகொண்ட இயக்கங்களையும், தலைவர்களையும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் கொண்ட அரசாங்கமும், இனவாத சக்திகளும் விரும்புவதில்லை. அவர்களை அழிப்பதற்கே முற்படுவார்கள்.

அந்தவகையில் பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதில்லை. அவ்வியக்கத்தை அழிப்பதற்காக அதன் தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்து வருகின்றது.

அதேநேரம் மிதவாத போக்கைகொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்பாஸ் அவர்களோடு இஸ்ரேல் நல்லுறவை கொண்டாடுகின்றது.

அதுபோலவே மத்தியகிழக்கில் மிதவாத போக்குடைய தலைவர்களை கொண்ட நாடுகளுடன் நட்புறவுகொண்டு வருகின்ற அமெரிக்கா, முற்போக்கு தலைவர்கள் உள்ள நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

இங்கே எது சரி, எது பிழை என்று விவாதிப்பதற்குரிய நேரம் இதுவல்ல. இத்தனை இனவாதம் கொண்ட நாட்டில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து நின்று முஸ்லிம் சமூகத்துக்காக சத்தமிட்டு குரல் கொடுத்ததனை நாங்கள் உதாசீனம் செய்ய முடியாது.

கடந்த காலங்களில் செயல்பட்டதுபோல அல்லாமல், மேலாதிக்க வெறிகொண்ட இனவாத சக்திகளுக்கு அமைச்சர் றிசாத் அவர்கள் இப்போது அடங்க மறுத்துள்ளார் என்பது இந்த FCID விசாரணையின் மூலம் எங்களால் ஊகிக்க முடிகின்றது.

அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், தனது ஆதரவாளர் என்ற காரணத்துக்காக அவரை விடுதலை செய்வதற்காக இராணுவ தளபதி மூலமாக மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. எந்தவொரு அமைச்சரும் இவ்வாறான விசப்பரீட்சையில் இறங்கமாட்டார்கள்.

நான் றிசாத் பதியுதீனின் கட்சி ஆதரவாளன் அல்ல, அவரை தலைவராக ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அத்துடன் என்னைப்போன்று அதிகமாக அவரை விமர்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

எவராக இருந்தாலும் எமது சமூகத்துக்காக குரல்கொடுக்கும் போது அந்த குரலை நசுக்க முற்பட்டால், அது முழு சமூகத்தையும் நசுக்குவதற்கு சமமாகும். அதனாலேயே தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் அமைச்சர் றிசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்.

எனவே அமைச்சர் றிசாத் மீதான FCID விசாரணையானது ஊழலை கண்டுபிடிப்பதற்கான விசாரணை அல்ல. அது முஸ்லிம் சமூகத்தில் உள்ள முற்போக்கு சக்திகளை அடக்கி அச்சுறுத்தும் ஓர் இனவாத செயல்பாடாக பார்க்கப்படுகிறது. அத்துடன் அது தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கையுமாகும். 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள் ; தவணைப் பரீட்சைகளும் நடைபெறும்


அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெராக்கள் ;
தவணைப் பரீட்சைகளும் நடைபெறும் 

( மினுவாங்கொடை நிருபர் )

   நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி.  கமெராக்களைப்  பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
   அத்தோடு, பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளை இரத்துச் செய்வதற்கான எந்தவிதத்  திட்டங்களும் இல்லை என்பதோடு, வழமை போன்று க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
   பரீட்சைகளை ஒத்திப்போடுவதால், ஏனைய சில  சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார். 
   அமைச்சரது  இல்லத்தில், 21 ஆம் திகதி  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அமைச்சர்  இவ்வாறு கூறியுள்ளார்.
   அரசாங்கப் பாடசாலைகளில் பாதுகாப்பைப்  பலப்படுத்துவது தொடர்பாகக்  கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும்  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
   மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தைத்  தொடர்ந்து,  பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதிக்கு ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் மாத விடுமுறையை இரத்துச் செய்வதா என்பது பற்றிய கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share: