நாங்கள் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டபோது கட்டியிருக்கும் கோவணத்தை உருவி எடுக்க முயற்சிக்கின்றார்கள்.

எங்களுக்கு பட்டுவேட்டியும் வேண்டாம், காஞ்சிபுரம் சாரியும் வேண்டாம். இருக்கின்ற கோவணத்தை உருவ விடாது பாதுகாப்போம். 

அபிவிருத்தி என்ற போர்வையில் உயர்ந்த கோபுரத்தை அமைக்கின்றோம். ஆனால் அக்கோபுரத்தின் அத்திவாரம் இனவாதிகளினால் உடைக்கப்படுகின்றது.

அதாவது ஆடம்பரத்தை நோக்கி செல்லுகையில், எங்களது அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்படுவதோடு, பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. 

முஸ்லிம்களுக்கென்று தனித்துவ அரசியல் கட்சி உருவானது உரிமையற்ற வெறும் சலுகை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காக அல்ல.

ஆனால் இன்று சமூக அரசியல் மறக்கடிக்கப்பட்டு அபிவிருத்திக்காக மட்டுமே தனித்துவ கட்சி உருவாக்கப்பட்டது என்ற தோற்றம் முஸ்லிம்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் கோருவது உரிமையுள்ள அபிவிருத்தியே தவிர, சலுகை அபிவிருத்தி அல்ல. ஆனால் இன்று நடைபெற்றதெல்லாம் சலுகை அபிவிருத்தியாகும்.

ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை புறக்கணித்துவிட்டு பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் மட்டும் ஆட்சியாளர்களினால் அபிவிருத்தி செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் அந்த நாடு அபிவிருத்தி என்னும் இலக்கை அடைய முடியாது. 

எமது தலைவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் பதவி வகிப்பதன் மூலம் உச்சக்கட்ட நண்மை அடைவது அவர்களை சுற்றி இருக்கின்ற சில குறிப்பிட்ட வர்க்கத்தினர்கள் மட்டுமே. 

அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் அபிவிருத்தி என்ற போர்வையில் அரச நிறுவனங்களுக்கு பகிரப்படுகின்றது. இதன் மூலம் தரகுப் பணம் பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பது அரசியல்வாதிகளின் எடுபிடிகளும், கொந்தராத்து காரர்களுமே தவிர, பொது மக்கள் அல்ல.

இன்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது அமைச்சர் பதவிகளை துறந்ததனால் சாமான்ய முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள அதேவேளை, அரசியல்வாதிகளின் எடுபிடிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தங்களது சம்பாத்தியத்தில் இடி விழுந்துவிட்டது என்பதுதான் இதற்கு காரணமாகும்.

அதனால் மக்களைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் அமைச்சர் பதவிகளை தங்களது அரசியல் தலைவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கி வருகின்றார்கள். இவ்வாறான சமூகத்துரோகிகள் விடயத்தில் எமது தலைவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆயிரக்ககணக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எமது சகோதரர்களை விடுவிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதொடு குற்றவாளிகளை கைது செய்வது மற்றும் வடகிழக்கில் மீட்கப்படாத காணிகளை மீட்பது ஆகிய பிரச்சினைகள் அவசரமாக தீர்க்கப்படல் வேண்டும்.

அவ்வாறு எமது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல், மீண்டும் அமைச்சு பதவிகளை பாரமெடுப்பதானது எமது சமூகத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாக பார்க்கப்படும்.   

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.