அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் குறிப்பிட்ட முஸ்லிம் வைத்தியர் மீது திவஇன பத்திரிகை வெளியாக்கிய செய்தியினைத் தொடர்ந்து அவ்வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

இதன் பிற்பாடு இனவாத செயற்பாடுகளின் ஓரங்கமாக ஏனைய முஸ்லிம் வைத்தியர்களும் குறிவைக்கப்பட்டமை நாமனைவரும் அறிந்ததே. இது இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் புத்திஜீவிகளை ஓரங்கட்டும் திட்டமாகவே அமையப்பெற்றது.

இது இலங்கையிலுள்ள சகலமத மக்கள் மத்தியிலும் மாற்றுமத புத்திஜீவிகளான சேவைவழங்குநர் மீதும் சந்தேகத்தை ஏறபடுத்தி முழு நாட்டையும் அதாளபாதாளத்திற்கு தள்ளிவிடும் நிலையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த நாட்டையும் இந்த மக்களையும் நேசிக்கும் வைத்திய சமுகத்தின் ஓரங்கமான நாங்கள் இதனை உரிய முறையில் கையாள நினைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை கடந்த 30/05/2019 அன்று ஏற்பாடு செய்திருந்தோம்.

இதில் என்னோடு சேர்த்து சக வைத்திய சகோதரர்களான Dr. MA ஹில்மி, Dr. SA பர்ஹாத் , Dr A நைறூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் எங்களால் முன்வைக்கப்பட்டன.

1-இன்று முஸ்லிம் வைத்தியர்கள் மீது வீசப்படும் இந்த இழிசொற்களும் சந்தேகங்களும் நாளை ஒரு வியாதியாகப்  பரவி முழு மருத்துவ சேவையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

2-இன்னும் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு முஸ்லிமாக இருப்பதால் எல்லா முஸ்லிம் வைத்தியர்களையும் குறைசொல்லக்கூடிய ஒரு நிலை சகவைத்தியரகள் மத்தியில் உருவாகி வருகின்றது.
இதன் விளைவாக நாடு தழுவிய இனக்கலவரங்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருக்கின்றது.

3-பல்வேறுபட்ட நெருக்கங்ககளுக்கு மத்தியிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியரகளின் தரத்தை ,சமூக அங்கீகாரத்தை விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கை சிதைந்து போக இந்த சம்பவம் இடமளிக்கக் கூடாது.

4-சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான பக்கச்சார்பற்ற உரிய விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த விடயங்களை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்பீட அங்கத்தவர்கள் அநேகமான விடயங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த ஒரு சம்பவம் காரணமாக ஏனைய முஸ்லிம் வைத்தியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் சகவைத்தியரகள் மத்தியில் பிரிவினை வளரவிடமாட்டோம் என்றும் உறுதிமொழி வழங்கினார்கள்

கைதுசெய்யப்பட்ட வைத்தியர் தொடர்பாக உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு தீர்வு வரும்வரை தாங்கள் இதில் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்கள்.

இந்த விடயம் சார்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் ஒரு கிழமைக்குப் பிறகு மீண்டும் உயர்பீடத்தோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



டாக்டர் அஹ்மத் ரிஷி

(இரண்டாம் சந்திப்பின் சாரத்தை இன்னொரு பதிவில் தருகிறேன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.