வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் – கலாநிதி அமீர் அலி


“உலகம் மோசமான நபர்களின் வன்முறையால் துயரத்தை அனுபவிக்கவில்லை. மாறாக நல்ல மனிதர்களின் மௌனத்தினாலேயே துயரத்தை அனுபவிக்கின்றது” – நெப்போலியன்
கொவிட்-19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மோசமான கலக்கத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடியது, ஏனென்றால், இஸ்லாம் உடல்களை எரிப்பதைத் தடைசெய்துள்ளது. உடல்களைப் புதைப்பதால் அந்த உடல்களின் மூலம் ஆபத்தான தொற்றுநோய் ஏற்படும் என்ற தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் போது மாத்திரம் உடல்களை எரிக்கலாம். கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களால் அவ்வாறான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இலங்கையில் இல்லை.
ஆனால், பௌத்த இலங்கையில், அதிகாரவர்க்கத்திற்கு ஆதரவான தொற்றுநோயுடன் தொடர்புடைய நிபுணர் ஒருவரின், நிலத்தடி நீர் தொடர்பான போலியான கருத்தொன்றால் அதிகாரத்தில் உள்ள கோட்டபாயவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் என்ன நடந்தாலும் பரவாயில்லை, முஸ்லிம்களின் உடல்களை எரித்தே ஆகவேண்டும் என விடாப்பிடியாக உள்ளனர்​ஒரு நாடு ஒரு தேசம் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலும் பௌத்த நிகழ்ச்சி நிரலே இந்த தீர்மானத்தின் பின்னால் உள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் பத்திரிகையாளர்களும், கல்விமான்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், மிக முக்கியமாக சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும், சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வெளியிட்டுள்ள முறைப்பாடுகளும், கரிசனைகளும் ஆர்ப்பாட்டங்களும் செவிடன் காதில் விழுந்த சங்காகியுள்ளன. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மத மற்றும் கலாச்சார உரிமைகளை மதிக்குமாறு அனைத்து அரசாங்கங்களுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இறுதியாக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரும் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதுடன் இது குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிற்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார். இவற்றுக்கு அப்பாலும், ஜனாதிபதி – பிரதமர் மத்தியில் இந்த விவகாரம் தொடர்பில் பிடிவாதமான நிலைப்பாடு காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அரசாங்கத்தை பொறுத்தவரை முஸ்லிம்களின் உடல்களை எரியூட்டுவது வாக்குகளை பெற்றுக்கொடுக்க கூடிய நடவடிக்கையாகும். எதிர்வரும் தேர்தலில் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இது அவசியமாகும்.
இரு தலைவர்களின் பிடிவாதத்தைப் புரிந்துகொள்வதற்கு 2019 இல் கோட்டபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த விடயங்களை மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் மக்களின் ஆதரவை இழந்து காணப்பட்டது என்பதும் அவநம்பிக்கைக்கு உள்ளாகியிருந்தது என்பதும் கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இலகுவாக அவர்களை வெற்றிகொண்டிருக்க முடியும் என்பதும் உண்மை.
எனினும், பல வேட்பாளர்கள் களத்தில் காணப்பட்டதாலும், இரண்டு சிறுபான்மை சமூகத்தினர் கோட்டபாய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவளிக்காததாலும்,தேர்தல் முடிவுகளை விருப்பு வாக்குகளே தீர்மானிக்கும், இதன் காரணமாக சஜித் பிரேமதாசவிற்கு வெற்றி வாய்ப்பு ஏற்படலாம் எனக் கருத்துருவாக்கிகளும் அரசியல் விற்பன்னர்களும் எதிர்பார்த்தனர். இந்த அச்சம் காரணமாகவே பௌத்த மேலாதிக்கவாதிகள் கடுமையாக கோட்டபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காகப் பாடுபட்டனர், முஸ்லிம்கள் மத்தியில் மறைந்திருக்கின்ற ஆபத்துக்கள் குறித்து பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். 2019 ஏப்ரலில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஜிகாத் தீவிரவாதிகள் முன்னெடுத்த படுகொலை, குரோதத்தை பிரச்சாரம் செய்பவர்களுக்கு சொர்க்கத்திலிருந்து கிடைத்த ஆசீர்வாதமாகும். இதன் காரணமாக கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார், மேலாதிக்கவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நித்தியமாக பாதுகாப்பவராக மாறினார்.
அந்தப் பிரச்சார காலத்தின் போது சில தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய பௌத்த மதகுருமார், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும் எதிராக முன்வைத்த பல குற்றச்சாட்டுகள் இன்னமும் நிரூப்பிக்கப்படாமல் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களில் ஜாதிக ஹெலய உறுமயவின் அரசியல்வாதி அத்துரலிய ரதன தேரரும், அவரது சகாவான பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உண்மையில் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தினார்கள், தூண்டினார்கள்.
தலதா மாளிகை முன்பாக அத்துரலிய ரதன தேரர் அரங்கேற்றிய அரசியல்மயப்படுத்தப்பட்ட நாடகம் குறிப்பாக குரோதத்தை தூண்டும் நோக்கில் விசேடமாக அரங்கேற்றப்பட்டது. இதனால் முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எனப் பலர் இராஜினாமா செய்யவேண்டிய நிலையேற்பட்டது.
ஷரியா பல்கலைகழகம் என அழைக்கப்பட்டதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது தற்போது கொவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாறியுள்ளது. அவர் இறுதியாக சர்ச்சைக்குரிய முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்துச் சட்டத்தினை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதுடன் 2015 முதல் 19 வரையிலான காலத்தின் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முடிவிற்கு கொண்டுவந்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ரத்தன தேரர் ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தினை முன்வைத்தார். ஆனால், தான் எந்த திருமண விவகாரத்து சட்டத்தினை விரும்புகின்றார் என்பதை அவர் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. அவரின் இந்த ஒரே சட்டம் கருத்தே தற்போது, முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது ஊடாக அதிகாரத்தின் தாழ்வாரங்கள் ஊடாக  எதிரொலிக்கின்றது.
கோட்டபாய ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னரே, தேர்தல் ஆணையகம் திகதியை அறிவிப்பதற்கு முன்னரே அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் உரையாற்றக்கூடிய இரு பௌத்த மதகுருமார், முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் மருத்துவருக்கு எதிரான தங்களுடைய குற்றச்சாட்டுகள் முறையாக விசாரணை செய்யப்படவில்லை என அரசாங்கத்தை நச்சரிக்க ஆரம்பித்திருந்தனர். பௌத்த மதகுருமாரால் அவர்களை அதிகாரத்தில் இருத்த முடியுமென்றால், பௌத்த மதகுருமாரால் அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றவும் முடியும் என மற்றொரு மேலாதிக்கவாதி எச்சரித்திருந்தார். ஆட்சியாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் அத்துரலிய ரதன தேரரும் ஞானசார தேரரும் தங்களின் அபே ஜன பலய பக்சய (AJBP) சொந்த அரசியல் கட்சியை 800 மதகுருமார் – பாரிய நிதியுதவியுடன் ஸ்தாபிக்க தீர்மானித்தனர்.
ஞானசார தேரரின் பொதுபலசேனா அதன் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் முற்றிலும் முஸ்லிம் எதிர்ப்பானது என்பது வெளிப்படையான விடயம். பொதுபலசேனா வெளிநாட்டு ஆதரவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. அடிப்படைவாதத்தை சுத்திகரிக்கும் விதத்தில் முஸ்லிம்களின் சிந்தனையை வடிவமைக்கப்போவதாக அவர் தெரிவிக்கவில்லையா? தேர்தல் ஆணையகம் ஞானசார தேரரினதும், AJBPயின் ஒருவரினதும் வேட்பு மனுக்களை நிராகரித்துள்ள போதிலும் தேர்தல் பிரச்சாரத்தில் AJBP எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பது தெளிவாக தெரியாத விடயமாக காணப்படுகின்றது.
இதேவேளை, உடல்கள் தகனம் குறித்த அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடு AJBPயிற்கு மிகவும் பிடித்தமானதாக காணப்படும்,அதன் உறுப்பினர்களை திருப்திப்படுத்தும்.
பௌத்த மதகுருமாரையும் அவர்களது ஆதரவாளர்களையும் நிச்சயம் அலட்சியம் செய்ய முடியாது என்பது குறித்தும் சிங்கள பௌத்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் பலம் அவர்களுக்கு உள்ளது என்பது குறித்தும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் கரிசனை கொண்டுள்ளனர். இந்த நிலையில் சிங்கள மையநீரோட்ட மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்பி வருகின்றன. ஊடக முதலாளிகள், மதகுருமார், அரசியல்வாதிகள் முன்னரே தாரளமாக நிதி வழங்கப்படும் திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை ஒரு முழு சமூகத்திற்கும் எதிராக முன்னெடுப்பதுடன், கொரோனா வைரஸ் பரவலிற்கு மாத்திரமல்லாமல் ஏனைய தீமைகளுக்கும் அந்தச் சமூகத்தின் மீது பழிபோட முயல்கின்றனர். கோட்டபாய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷவின் பார்வையின் கீழ் ஆபத்தான விளையாட்டு ஒன்று விளையாடப்படுகின்றது. அவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு தடுக்க மறுப்பதும் பல தரப்பட்டவர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பான அவர்களது மாற்ற முடியாத முடிவும், அவர்களது இரகசியமான அரசியல் நிகழ்ச்சி நிரல் எத்தகையது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
இவற்றிற்கு மத்தியில் ஜிகாதிகளின் உயிர்த்த ஞாயிறு இழிவான செயலின்  பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமான  சம்பவத்தை இந்த அரசாங்கம் சுலபமாக மறந்துள்ளது போல தோன்றுகின்றது. அவ்வேளை அந்தக் கொலைகாரர்களின் உடல்களைப் புதைப்பதற்கு முஸ்லிம் சமூகம் மறுத்தது. அதன் மத ரீதியான கடப்பாடாக உள்ள சடங்குகளை செய்வதற்கு முஸ்லம் சமூகம் மறுத்தது. தேசிய நலனிற்கு ஆபத்து ஏற்படும்போது முஸ்லிம்கள் தங்கள் மதக் கட்டளைகளை கைவிடுவதற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை அது புலப்படுத்தியது.
ஆகவே, கொவிட்-19 காரணமாக பலியான முஸ்லிம்களைப் புதைப்பதற்கு  அனுமதிக்கப்போவதில்லை என கோட்டபாயவும் மஹிந்தவும் பிடிவாதமாக இருப்பதற்கு அவர்களது அரசியல் சூழல் மாத்திரமே காரணமாக இருக்கவேண்டும். கடந்த 72 வருடங்களில் இலங்கையில் அரசாங்கங்களை உருவாக்குவதற்கும் அகற்றுவதற்கும் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை துரதிஸ்டவசமானது. சிங்கள மேலாதிக்கவாதிகளின் சமூக குரோதத்தின் விளைவுகளை இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர்கள், பர்கர்கள், முஸ்லிம்கள் என அனைத்து சிறுபான்மை சமூகத்தினரும் அனுபவித்துள்ளனர்.
இறுதியாகக் குரோதங்களுக்குப் பலியானவர்கள் முஸ்லிம்களே, வெற்றிபெறக்கூடிய அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தப்பிவாழும் அவர்களது தந்திரோபாயம் தோல்வியடைந்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பு அடுத்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டிற்காகப் பலிகொடுக்கப்படப்போகும் ஆடுகளாக அவர்கள் விளங்கப்போகின்றனர். உடலை தகனம் செய்யும் விவகாரம் கத்திகளை கூர்மையாக்குகின்றது.
கலாநிதி அமீர் அலி
Vote-Worthy Cremation Of Dead Muslims என்ற தலைப்பில் கொழும்பு ரெலிகிராப் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

Thanks - Maatram.org

கருத்துகள்