மதியாளன் பணியிங்கு
சதிசெய்யும்
என்றெண்ணி
மடமையை பணிக்கமர்த்தி
அறிவாற்றல் தனைகாட்டும்
முதலாளி வேதாந்தம்
மண்ணிலே பலவுண்டு...!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அடிமையின் சாசனத்தில்
அவதியுறும் சட்டங்கள்
தொழிலாளர் வர்க்கத்தின் தொல்லைகளை
செப்பனிட
ஆடம்பர சிம்மாசனம்
அமைதியாய் அரசோட்ச
முதலாளி வர்க்கங்கள்
வருமான எல்லைகளை
ஒப்பமிடும்...!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கையாலாகா
நிலைவரைக்கும்
கைசேதப்பட்டே
காலம்கடத்தும்
கைக்கூலி கஷ்டங்கள்
முன்னேற்றம்
காண்கையில்
சந்தேக வம்பளந்து
சதிகாரவில்லனாய்
அதிகாரம்
விளம்பி நிற்கும் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விசுவாச பணியாளன்
வழிமூலம் பெறுகின்ற
மிகையான வருமானம்
அவன் விழிநீரை
வடிக்கின்ற
நிலைமைக்கு வருமாயின்
சொகுசான வாழ்க்கைக்கு அதுவென்றும் அவமானம் !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முழுநாளும் பெய்கின்ற
வருமான மழைதனிலே
முடிவின்றி நனைந்தாலும்
தணியாத தாகமிது..
அளவில்லா ஆசைதனில்
முகமெல்லாம் பல்சிரிக்க
பிரியாத மோகமிது...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காரணங்கள்
பலவுரைக்கும்
மரணமது
வரும்வரைக்கும்..
உழைப்புக்கு உகந்த கூலி
உயர்த்திட மனம் மறுக்கும்..
பல தொழிலாளர்
வாழ்வென்றும்
துயரத்தைச்சுமக்கும்....
சில முதலாளித்துவ
கஞ்சத்தனம்
முதலைக்கண்ணீர்
வடிக்கும்.....!
=======================
பலகத்துறை அபூசஊத்
கருத்துகள்
கருத்துரையிடுக