பெரும்பாலான வீடுகளில் ஒரு பிள்ளையை அதன் உடன் பிறப்புகளோடு அல்லது அடுத்த வீட்டு பிள்ளைகளோடு, நண்பர்களோடு ஒப்பிட்டுவதை பார்க்கிறோம். படிப்பு, நடத்தைகள், திறமைகள், பலவீனங்கள் என பல விடயங்களில் பிள்ளைகள் ஒப்பிடப்படுகின்றனர். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு நோக்குவது மனித இயல்பின் ஒரு பகுதியாக இருக்கிறதோ என்று எண்ணுகிற அளவிற்கு ஒப்பீடுகள் காணப்படுகின்றன.

 நாங்களே சிலசமயம் எங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எமது உடமைகளை ஒப்பிடுகிறோம். எமது தரத்தை, உயர்வை அல்லது பலவீனங்களை ஒப்பிடுகிறோம். நாம் எம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் எமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு குறைகூறுவதும் பாதிப்பான எதிர்விளைவுகளை உருவாக்க முடியும்.

தோட்டத்திலுள்ள மரங்களை சற்று நோக்குவோம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அளவில் வளர்ந்து இருப்பதையும் ஒவ்வொரு அளவிலான காய்களை தருவதையும் காண்கிறோம். சில மரங்களில் கிளைகள் முறிந்து விழும் அளவிற்கு காய்கள். சில மரங்களில் ஒரு சில கிளைகளில் மட்டும் காய்கள். ஒரு காயேனும் இல்லாமல் மொட்டையாக சில மரங்கள். பலா மரத்தில் பெரிய காய்கள். நெல்லி மரத்தில் சிறிய கணிகள். நாம் எவ்வளவுதான் அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வித்தியாசஙகள் கண்டாலும் அவற்றின் இயல்பான பதையில் அவை வளர்ந்து செல்கின்றன. குழுங்கிக் காய்த்திருக்கும் மரமும், இலைகள் உதிர்ந்து மொட்டையாக நிற்கின்ற மரமும் பல விதத்தில் எமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதை நாம் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

எமது ஒவ்வொரு பிள்ளையும் தனிப்பட்ட தன்மையுடையவர், தனிச்சிறப்பானவர். ஒப்புவமையற்றவர். வேறுபட்ட ஆற்றல்களையுடையவர். அவர்களின் வேறுபாடுகளை தெறிந்து, தனித்துவத்தை மதித்து அவர்களது ஆர்வம், அக்கறை, கணவுகளை அடைந்துகொள்வதற்கு படிப்படியாக ஆலேசனைகள்  கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் பொழுது அவர்கள் தாழ்வு மனப்பான்மையுள்ளவராக மாறிவிடவும் எங்கள் பார்வையில் அவர்கள் “தரமானவர்கள் அல்லர்” என்ற உணர்வு ஏற்படவும் காரணமாக இருக்கும்.

“ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள், வித்தியாசமான திறமைகளையுடையவர்கள் என்றும் மற்றவர்களைவிட நாம் வேறுபட்டவர்களாக இருப்பதில் எந்தச்சிக்கலும் இல்லை என்பதையும் மற்றவர்களை பின்பற்றி அவர்களைப்போல் நாம் இருக்கத்தேவையில்லை” என்பதையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையும் ஏதோ ஒரு விசேட ஆற்றலைக் கொண்டவராக  இருப்பதுடன் அவ்வாற்றலை வளர்த்து முன்னேரிச்செல்லவதற்கான பாதையை காட்டிக் கொடுப்போம்.
----------------------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.