பரீட்சையில் சித்தியடைவதை மட்டும் கல்வியின் நோக்கமாக பிள்ளைகளுக்கு ஒரு போதும் காட்டக்கூடாது. சிந்தனையை வளர்த்து நடத்தையில் அழகான மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த மனிதனாக வாழ்வதே கல்வியின் மிக முக்கியமான நோக்கம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

படிப்பது பரீட்சையில் பாசாகுவதற்கு” என்ற கருத்தோட்டத்தை உடையவர்களாகவே இன்று பலர் இருக்கக் காண்கிறோhம். பிள்ளைகளின் எண்ணங்களிலும் இந்தக் கருத்து பல வழிகளில் விதைக்கப்பட்டிருக்கிறது.
'பிள்ளைகள் பாடசாலைக்குப் போவது படிப்பதற்காக! படிப்பது பரீட்சையில் பாசாகுவதற்காக!' என்ற கருத்து முன்பு ஒரு போதும் இல்லாதவாறு இப்போது சமூகத்தில் பரவலாக வேர்விட்டிருக்கிறது.

பரீட்சையில் தோற்றுப்போகலாம். ஆனால் வாழ்க்கையில் தோற்றுப்போகக்கூடாது. பரீட்சையில் வெற்றியடைந்த எல்லோரும் வாழ்வில் வெற்றிபெற்றவர்களாவர் என்று கூறவும் முடியாது. பரீட்சையில் தோல்வியடைந்த எவராலும் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்பதே வாழ்வியல் உண்மையாகும்.

நாம் பறவைகள் போல் ஆகாயத்தில் பறக்கக் கற்று இருக்கிறோம்
மீன்கள் போல் கடலில் நீந்தக் கற்று இருக்கிறோம்
ஆனால் மனிதர்கள் போல் பூமியில் வாழ கற்றுக்கொள்ளவில்லை
என 'மார்டின் லூதர் கிங்' கூறியிருப்பதிலிருந்து இந்த பூமியில் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் வேண்டும் என்பது தெளிவாக புரிகிறது.

பரீட்சைகள் வாழ்வின் விருத்திக்குத் தேவைப்படும் கூறுகளாகும். அவற்றிலிருந்து ஓடி ஒழித்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை. அவற்றை ஆசையுடன் எதிர்கொள்ள வேண்டும்.ஆனால் அவை மனபாரத்தை, பயத்தை ஏற்படுத்தி வாழ்வின் சுதந்திரத்தையும் இன்பத்தையும் அழிக்கும் காரணிகளாக இருந்துவிடக்கூடாது.

கல்வியில் சித்திபெற்றவர் எப்பொழுதும் தனக்கும் தான் வாழும் பூமிக்கும் பயனும் பெறுமதியும் உடையவராகவே இருப்பார். அவர் பூமிக்கு பாரமாகவும் பாதிப்பாகவும் இருக்கவே மாட்டார். அவ்வாரே எமது பிள்ளைகள் எமக்கு கண்குளிர்ச்சியுடையவர்களாகவும் மண்ணுக்கு மகிமை சேர்க்கக்கூடியவர்களாகவும் ஆக வேண்டும் என்றே நாம் எப்பொழுதும் விரும்புகிறோம்.
அப்படியானால் சிந்தனையை வளர்த்து நடத்தையில் நானத்தை வெளிப்படுத்தி தனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள மனிதனாக வாழ கற்றுக்கொள்வதே கல்வியின் மிக முக்கியமான நோக்கம் என்பதை எமது பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறுவோம்.
------------------------------
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.