(நா.தனுஜா)

இலங்கை - பாகிஸ்தான் உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு 5 வருடகாலத்திற்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலை வழங்கவிருப்பதாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இந்தப்புலமைப் பரிசில் ஊடாக இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் பொறியியல் விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலின் கீழ் மாணவர்களுக்கான வகுப்புக்கட்டணம், தங்குமிட கட்டணம், கற்கைக்கான கட்டணம் மற்றும் ஒருமுறை மாத்திரம் நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றன.

இதனைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தகைய பின்னணியைக் கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், குறிப்பாகப் பெண்கள் இதற்கு விண்ணபிப்பது பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதில் தெரிவாகும் விண்ணப்பதாரிகள் பாகிஸ்தானின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமது உயர்கல்வியைத் தொடரமுடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முகமட் ஷாட் கட்டாக் இந்தப் புலமைப்பரிசில் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளித்தார். இச்சந்திப்பின் போது பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் ஊடாக இலங்கை - பாகிஸ்தானுக்கு இடையில் காணப்படும் தீவிரவாதத்தடுப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.