இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தரமான நோய்த்தடுப்பு சேவைகளை எளிதாகவும் சமமாகவும் அணுகுவதற்கான உரிமையை அனுபவித்து வருகின்றது,
மேலும் நாட்டின் நோய்த்தடுப்பு கொள்கை ஒரு குழந்தைக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளை பெறுவதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில வறிய நாடுகளில் மலேரியா, காலரா, அம்மை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்த்து தடுப்பூசிகளை விநியோகிக்க 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்குடன் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக இன்று (4) நடைபெற்ற 'பூகோள தடுப்பூசி உச்சி மாநாடு 2020' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இங்கிலாந்து, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம், GAVI - தடுப்பூசி கூட்டணி, ஐக்கிய நாடுகள் சபை, மன்றங்கள், பொதுத்துறை மற்றும் சிவில் சமூக பங்கேற்புடன் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

”உலக சுகாதார தாபனத்தினால் முன் தகுதி பெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட தரமான தடுப்பூசிகளில் இலங்கை முதலீடு செய்கிறது. ஒவ்வொரு குழந்தையிலும் போதுமான நோயெதிர்ப்பு விருத்தியை உறுதி செய்வதற்காக தடுப்பூசிகளின் தரம் மற்றும் ஆற்றலைப் பாதுகாப்பதே எமது நோக்கம்” என்று ஜனாதிபதி அவர்கள் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
COVID - 19 நோய்த் தொற்று சூழலில் குழந்தை பருவ தடுப்பூசியை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை ஒரு முன்னுரிமையாக வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் தரத்தை தொடர்ந்து பராமரிப்பதும், தேவைப்படும்போது புதிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துவதும் இலங்கைக்கு முன்னால் உள்ள சவால் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். .
"கடந்த 30 ஆண்டுகளில் நோய் கட்டுப்பாட்டில் எங்களது வெற்றியைப் பாதுகாக்க நாங்கள் முன்னெப்போதையும் விட ஆர்வமாக உள்ளோம்" என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இலங்கை தனது வெற்றிகரமான செயற்பாடுகளையும் சிறந்த நடைமுறைகளையும் உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் முழுமையான உரை வருமாறு:
இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எனக்கு அழைப்புவிடுத்த பிரதமர் ஜோன்சன் அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், இந்த முக்கியமான முயற்சியில் இங்கிலாந்தின் தலைமையையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (ஈபிஐ) மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, மேலும் இது தேசியம் முதல் அடிமட்ட நிலை வரை ஆரம்ப சுகாதார சேவைகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எல்லா குழந்தைகளுக்கும் தரமான நோய்த்தடுப்பு சேவைகளுக்கு எளிதான மற்றும் சமமான அணுகலை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் நோய்த்தடுப்பு கொள்கை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான குழந்தையின் உரிமையை அடிப்படையாகக் கொண்டது.
தேசிய நோய்த்தடுப்பு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவால் செயல்படுத்தப்படுகிறது.

எங்களிடம் ஒரு வலுவான கண்காணிப்பு முறைமை உள்ளது மற்றும் அனைத்து தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களும் தொற்று நோய் கண்காணிப்பு முறைமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து மாவட்டங்களிலும் மிக உயர்ந்த தடுப்பூசி பாதுகாப்பை நாம் பேணுகின்றோம்.
WHO ஆல் முன் தகுதி பெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட தரமான தடுப்பூசிகளில் இலங்கை முதலீடு செய்கிறது. ஒவ்வொரு குழந்தையிலும் போதுமான நோயெதிர்ப்பு விருத்தியை உறுதி செய்வதற்காக தடுப்பூசிகளின் தரம் மற்றும் ஆற்றலைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது உட்பட நோய்த்தடுப்பு திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஏற்பாடுகளை இலங்கை பேணுகிறது. சுமார் 98% செலவை அரசாங்கம் ஏற்கிறது, இது அத்தகைய திட்டங்களின் வெற்றிக்கு முக்கியமான நிதி நிலைத்தன்மையை நிரூபிக்கிறது. GAVI, WHO மற்றும் யுனிசெப் ஆகிய இலங்கைக்கு நிதி உதவி செய்து வரும் முன்னணி சர்வதேச நன்கொடையாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
COVID -19 நோய்த்தொற்று சூழலில் குழந்தை பருவ தடுப்பூசி ஏற்றலை மீளத் துவங்குவது முன்னுரிமையாகக் கருதப்படுகிறது.
நிகழ்ச்சித்திட்டத்தின் தரத்தை பேணுவதும், தேவை ஏற்படும்போது புதிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துவதையும் தொடர்ந்து பேணுவது இலங்கையின் சவாலாகும். கடந்த 30 ஆண்டுகளில் நோயை கட்டுப்படுத்துவதில் எங்களது வெற்றியைப் பாதுகாக்க நாங்கள் முன்னெப்போதையும் விட ஆர்வமாக உள்ளோம். எங்கள் வெற்றிகரமான செயற்பாடுகளையும் சிறந்த நடைமுறைகளையும் உலகளாவிய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நன்றி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.06.04

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.