(செ.தேன்மொழி)

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வயதானவர்கள் என்பதால் வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். இதனாலேயே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நிறுத்தி வைத்துள்ளார்களே தவிர மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் பிரசார கூட்டங்களை நிறுத்துமாறும், தேர்தலை பிற்போடுவதாகவும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தால் ஐக்கிய மக்கள் சக்தியும் பிரசார கூட்டங்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் இணைந்து மாகாண சபை தேர்தலுக்காக நான் செயற்பட்டபோது , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவருடைய காரியாலயத்திற்கு என்னை அழைத்து எனது பிரசாரங்களை நிறுத்திக் கொள்ள முடியுமா? என்று கேட்டார். நான் முதலிடத்தை பெற்றால் பிவித்துறு ஹெலவுறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு முதலிடம் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதன் காரணமாகும்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தமட்டில் எப்போதுமே பெண்களுக்கு ஆதரவு கிடையாது ஆண்களுக்கு மாத்திரமே முதலிடம் கொடுத்து செயற்படுவார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் பெண்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'ஐக்கிய பெண்கள் சக்தி' செயற்திட்டத்தின் அனைத்து பொறுப்புகளையும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எனக்கே பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் எனது உடல்நிலைமையை கருத்திற்கொண்டு ஜலனி பிரேமதாச எனக்கு வசதியான இருப்பிடம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த இருப்பிடத்தை எனக்கு காண்பிப்பதற்காக அவர் என்னிடம் பேசுவதை மாத்திரம் பதிவு செய்து, அதனை ஊடகமொன்றில் திரிவுப்படுத்தி காண்பித்துள்ளனர். இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். எந்த அரசாங்கத்திலும் ஆண்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் அந்த நிலைமை இல்லை. நாங்கள் யாருமே அச்சத்துடன் அரசியல் செய்யவில்லை.

நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் நிறமொன்றை பிடித்துக் கொண்டு பேசி வருகின்றார்கள். முக்கியமாக தற்போது நிறத்தை அல்ல பாரக்க வேண்டும். மக்கள் எங்கு, யாருடன் இணைந்து கொண்டுள்ளார்கள் என்பதனையே. ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டங்களில் ஆதரவாளர்கள் குறைவு என்பதனால் தொழிநுட்பமுறையிலான பிரசாரக்கூட்டத்தை நடத்துவதாக பிரசாரம் செய்தார்கள். மொட்டு அணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு வெவ்வேறு பகுதிகளிலிருக்கும் நபர்களை அழைத்து வந்து தங்களுக்கு அதிகமான ஆதரவாளர்கள் இருப்பதாக காண்பித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் ஊடகச் சந்திப்பு ஒன்றின்போது ஊடகவியலாளர் ஒருவர் கட்சியின் நிறம் தொடர்பில் என்னிடம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நான் நகைச்சுவையாக வழங்கிய பதிலை இன்று பாரிய பிரச்சினையாக மாற்றியுள்ளனர். இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முறைப்பாடு அளித்துள்ளது. சுதந்திரக் கட்சி எங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு முன்னர், தங்களது கட்சி வேட்பாளர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் எமக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் நாம் எமது பயணத்தை நிறுத்தமாட்டோம்.

ஆளும் தரப்பினர் ஊடகங்களின் ஊடாக தாராளமாக தங்களது தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றனர். எமக்கு அந்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தங்களது பிரசார கூட்டகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வயோதிபர்கள் என்பதினால் அவர்களுக்கு வைரஸ் தொற்றிவிடும் என்பதன் காரணமாகவே, தேர்தல் பிரசாரங்களை நிறுத்திவைத்துள்ளார்கள்.

அரசாங்கம் தேர்தல் பிரசார கூட்டங்களை நிறுத்துமாறும், தேர்தலை பிற்போடுவதாகவும் உறுதியாக அறிவித்தால் நாங்களும் எங்களது கூட்டங்களை நிறுத்துவோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.