(ஐ.ஏ. காதிர் கான்)

முஸ்லிம்கள் எப்பொழுதும் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிப்பவர்களாக இருக்காமல், மிக நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்கக்கூடிய இந்த அரசாங்கத்திற்கு ஆதரவுகளை வெளிப்படுத்த வேண்டும். முஸ்லிம்களும் இம்முறை கட்டாயம் பங்காளர்களாக மாற வேண்டும் என, கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

கண்டி, பேராதெனிய வீதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய கட்சிக் கிளை காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்யப் போகின்றார். பொதுஜன பெரமுன கட்சியில் உடுநுவர தொகுதியில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எனக்குக் கிடைத்த இச்சந்தர்பத்தைப் பெரும் வெற்றியாக கருதுகின்றேன்.

பொதுத் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்பு வரும் போது, இந்த நாட்டில் நிலையான பலமான அரசாங்கம் ஒன்று உறுதியாக அமையும். அந்த அரசை உருவாக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன திகழும். மீண்டும் பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷவே திடமாக அமருவார். சிங்கள மக்கள் இதனைச் சாத்தியப்படுத்துவார்கள். அதில் முஸ்லிம்களாகிய நாமும் பாங்காளிகளாக மாற வேண்டும்.

நமது முஸ்லிம் தலைமைகள் சமூகத்தைப் பிழையான வழியிலேயே இட்டுச் சென்றதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவான பொதுஜன பெரமுனக் கட்சியை ஆதரிப்பதாகும். இதன் மூலம் கண்டி மாவட்ட மக்கள் அனைவரும் பயன் பெறக்கூடிய நல்ல செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அன்றைய சிறந்த முஸ்லிம் தலைவர்களாக பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீட், ஏ.எச்.எம் அஷ்ரப், பாக்கிர் மாக்கார் ஆகியோர் விளங்கினார்கள். இவர்களிடம் சிறந்த நாட்டுப் பற்று இருந்தது. மக்களுடனும் மிகவும் நெருங்கிப் பழகினார்கள். அரசியலில் எதனைச் சாதிக்க முடியுமோ, அதனை வெற்றிகரமாக சாதித்துக் காட்டினார்கள். அரசியல் பலம் இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. 

எனவேதான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதே முஸ்லிம்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும். இதனால், முஸ்லிம்களும் சிங்கள மக்களுடன் இணைந்து  பங்காளிகளாக மாற வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.