(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டங்களையும் தேர்தல் சட்டங்களையும் மீறியேனும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார். அதன் காரணமாகவே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரமாக செயற்படும் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக செயற்படுவதாகத் தெரிவித்து அது தொடர்பில் இன்று புதன்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், அரச ஊடகங்கள் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் போன்று பக்கச்சார்பாக செயற்படுகின்றன. ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படும் நேரம் மிகக் குறைவாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் உள்ளுராட்சித் தேர்தலின் போதும் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் இம்முறை ஆணைக்குழு இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை.
எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆணையாளரிடம் வலியுறுத்தினோம். இது வரி செலுத்துகின்ற மக்களின் உரிமையாகும். இவ்வாறிருக்கையில் அரச ஊடகங்கள் தமக்கு தேவையான செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புவது தவறாகும். இது தொடர்பில் ஆணையாளர் கவலை தெரிவித்தார்.

தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரமாக செயற்படும் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வாறான கீழ்மட்டமான செயற்பாடுகளையும் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராகவுள்ளது. இவ்வாறான அரசாங்கத்துடனேயே நாமும் ஆணைக்குழுவும் செயலாற்ற வேண்டியுள்ளது. எனவேதான் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்துமாறு ஆணைக்குழுவை நாம் வலியுறுத்துகின்றோம்.

தனிமைப்படுத்தல் கட்டளை சட்டங்கள் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டங்களிலும் இவை பின்பற்றப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை வர்த்தமானிப்படுத்தினால் அதனை தாமும் பின்பற்ற வேண்டியேற்படும் என்பதால்தான் அதனை காலம் தாழ்த்துகின்றனர்.

தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தையும் தேர்தல் சட்டத்தையும் மீறியேனும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகவுள்ளது.
கடந்த அரசாங்கத்திலிருந்து சிரேஷ்ட தலைவர்கள் சிலர் ராஜபக்ஷக்களுடன் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டமையினாலேயே அவர்களது ஊழல் மோசடிகள் மறைக்கப்பட்டன.

அதுவே அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற ஏதுவாக அமைந்தது.
கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு எதிராக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவ்வாறு இல்லை. எவ்வாறிருப்பினும் இவற்றைக் கடந்து 113 ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.