"நாங்கள் நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறோம். இந்த கம்பஹா மாவட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையிராகவே இருக்கின்றனர். இங்கு தமிழ் பேசும் இந்துக்கள் மற்றும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் சுமார் 55000 அளவில் தான் இருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்களின் வாக்குகள் சுமார் 85000 அளவில் தான் இருக்கிறது. மொத்தமாக எமது மாவட்டத்தில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சுமார் 130,000 ஆகும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சசிகுமார் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (02) அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள திஹாரிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களான நாம் வட - கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு தேர்தலில் எக்கட்சிக்கு வாக்குகளை அளித்த போதிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகளே பாராளுமன்றம் செல்வார்கள். வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிந்து சென்றாலும் எமது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது. 

ஆனால் எமது மாவட்டத்தில் எமது வாக்குகள் சுமார் 130,000 தான் இருக்கிறது. அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் 30 வருடங்களுக்கு முன்பு கூட தமிழ் பேசும் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் சென்றிருப்பார். ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் வாக்குகளை பெரும்பான்மை மக்களுக்கு வழங்கி விட்டு, எமது வேட்பாளர் தோல்வியடைந்த பிறகு நாம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் கைசேதப்பட்டு பேசிக்கொள்வது வழமையாகி விட்டது. 

குறித்த வாக்குகளில் குறைந்தது 80,000 வாக்குகளையாவது தமிழ் பேசும் உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருப்பின் வெற்றி பெறுவார்கள். 

கம்பஹா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 இலட்சம் பெரும்பான்மையின வாக்காளர்கள் இருக்கிறார்கள். எமது ஐக்கிய மக்கள் சார்பாக தமிழ் பேசும் பிரதிநிதிகள் இருவர் நியமிக்கப்பட்டிருக்கிறோம். நானும் நண்பர் ஷிராஸ் மொஹமட் அவர்களும் போட்டியிடுகிறோம். 

நீங்கள் ஒற்றுமையாக எங்கள் இருவருக்கும் வாக்குகளை அளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இருவருமே பாராளுமன்றம் செல்வோம். எனவே கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்து எமது வெற்றியை உறுதி செய்யுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.