களுத்துறை மாவட்டத்தின், பேருவளை தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவில் வெற்றி பெற்று பெண்கள், சிறுவர் அபிவிருத்தி, ஆரம்ப கல்வி மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு, கல்வி சேவை, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுள்ள பியல் நிசான்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோருக்கு தர்காநகரில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பியல் நிசான்த பேருவளை பிரதேச சபைத் தலைவராக, மேல்மாகாண சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி புதிய அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டமை பேருவளை தொகுதிக்கு கிடைத்த கௌரவமாகுமென்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

பேருவளை பிரதேசம் சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பிரதேசமாகும். எமது முன்னோர் காண்பித்த ஒற்றுமையை என்றென்றும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அங்கு வருகை தந்திருந்த முக்கியஸ்தர்கள் கூறினர்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கூறுகையில் 'தர்காநகர் மக்கள் இன, மத மொழி பேதமின்றி எனது வெற்றிக்காக வாக்களித்து உதவி புரிந்தனர்.

இப்பிரதேச முஸ்லிம்கள் என் மீது வைத்துள்ள அன்புக்காக கிடைத்த பரிசு இது என்றுதான் கூற வேண்டும். பேருவளை தேர்தல் தொகுதியில் இருந்து மர்ஜான் பளீல் அவர்களும் பாராளுமன்றம் செல்வது உங்களுக்குக் கிடைத்த மற்றுமொரு மகிழ்ச்சியாகும். எனவே நானும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்களும் இணைந்து பேருவளை தேர்தல் தொகுதியில் பாரியதொரு அபிவிருத்தி புரட்சியொன்றை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே நல்லுறவை ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபடுவோம்' என்று கூறினார்.

இவ்வரவேற்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் இணைப்புச் செயலாளர் எம்.இஸட்.எம் பாயிஸ், பேருவளை பிரதேச சபை உறுப்பினர்களான றுஸ்தி ரமீஸ், ரியாஸ் (பயர்), முன்னாள் பிரதேச சபை உறுப்ப்பினர் இஸ்மாயில் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கட்சி, ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.