லிபியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக அரசு படையினர் தெரிவித்தனர். கிளர்ச்சியாளர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

லிபியாவில் ஆட்சியில் இருந்த கேர்னல் கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. 

அந்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளரான கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். 

அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வந்தனர். 

லிபியாவில் நடைபெற்று வந்த இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு வெளிநாட்டு படையினரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினர் என இருதரப்புக்கும் ஆதரவாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியை தலைநகராக கொண்ட லிபிய அரசு தலைமை நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்த உடன் கடாபியின் ஆதரவு கிளர்சியாளர் கப்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழுவும் தாங்களும் லிபியாவில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிப்பதாக தெரிவித்தது.

எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் விரைவில் பொதுத்தேர்தலை நடத்த இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதைய சண்டை நிறுத்தம் உள்நாட்டுப்போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர முதல் முயற்சி என ஐ.நா. உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.