உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா என்கிற புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி சாட்சியமளித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களைப் பற்றிய சரியான தகவல்களைப் பெற, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 'சாரா' என்ற பெண்ணை இந்த நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

சாரா என்ற பெண் இந்தியாவில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே சாராவை உடனடியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அனைத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று நான் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளேன்.

இதுபோன்ற தற்கொலைத் தாக்குதலை ஒழுங்கமைத்து நடத்துவதற்கு அவர்களுக்கு யார் பலம் கொடுத்தார்கள் என்பதுதான் எங்களுக்குள்ள பிரச்சினை. சாராவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்தால் அந்த எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு தற்கொலைத் தாக்குதல் நடத்துகிற அளவுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்களும் அல்ல என்றும் கூறினார்.

(தமிழ்வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.