மிக அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற தனியார் சட்டங்களையும் காதி நீதிமன்றங்களையும், காதி நீதவான்களையும் விமர்சித்து ஓரு சில பெண்கள் தங்களுக்கு காதி நீதிமன்றங்களில் அநீதம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் எனவே 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற தற்போதைய அரசின் கொள்கையின் அடிப்படையில் காதி நீதிமன்றங்கள் தேவையில்லை என்றும் காதி நீதிமன்றங்கள் நாட்டில் இருந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பேட்டி வழங்கி கோசமிட்டு வருகின்றனர்.

இவர்களது கோஷங்களைப் பார்க்கின்ற போது யாரோ ஒரு சிலரால் இவர்கள் இயக்கப்படுகின்றார்கள் என்ற சந்தேகம் தோன்றுவதாக ஒரு சில முஸ்லிம் நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது பல ஆண்டுகளுக்கு முன் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை மட்டும் ஆளக்கூடிய ஒரு சட்டம். இதன் கீழ் தான் முஸ்லிம்களது விவாகம் மற்றும் விவாகரத்து விவகாரங்களை ஆள்வதற்காக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச்

சட்டம் (MMDA) உருவாக்கப்பட்டது. இது ஒரு சில முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல.

இலங்கையில் வாழ்கின்ற இலங்கையின் பிரஜைகளான சுமார் இருபரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கும் உரித்தானது. ஒரு சில முஸ்லிம் பெயர்தாங்கி பெண்கள் அண்மைக் காலமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் சிலர் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் இல்லாமலாக்கப்பட வேண்டுமென்றும், குறிப்பாக காதி நீதிமன்றங்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்றும் கோஷமெழுப்பி வருகின்றனர்.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதற்கான பல நடவடிக்கைகளும் பல தரப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் நன்கு அறிவர்.

காதி நீதிமன்றங்கள் என்பது பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு முஸ்லிம்களுடைய விவாகம்

மற்றும் விவாகரத்தோடு தொடர்புடைய விடயங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டவைகள். இதற்கான காதி நீதவான்களை நியமிக்கும் பொறுப்பு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கே உள்ளது.

 இலங்கையில் 65 காதி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த காதி நீதவான்களை நியமிக்கும் போது அவர்களது தகுதிகளையும் தகைமைகளையும் ஆராய்ந்தே உயர் நீதிமன்ற அல்லது மேல் நீதிமன்ற நீதவான்கள் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நீதிச் சேவைகள் ஆனைக்குழுவை சிபாரிசு செய்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளோ அல்லது ஏனையவர்களின் சிபாரிசுகளோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

சட்டத்தின் பிரகாரம் ஒரு சில குறிப்பிட்ட விவகாரங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மாத்திரமே காதி நீதவான்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரையரைகளை மீறி தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் சட்ட வரையரைக்கு அப்பால் சென்று தீர்ப்பு கிடைக்க வேண்டுமெனவுமே வழக்காளிகள் எதிர்பார்க்கின்றனர்.

 இந்த எதிர்பார்ப்பு கிடைக்காத போது காதி நீதிமன்றங்களில் அநீதம் இழைக்கப்பட்டதாக அவர்கள் தவறான பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர். இது ஒரு பிழையான எதிர்பார்ப்பும் செயற்பாடுமாகும். அது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்தில் அநேகமானோர் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கென்று மாத்திரமுள்ள இந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை சரியாக புரிந்து தெரிந்து கொள்ளவில்லை என்பதும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு கவலைக்குறிய விடயமே.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு எதிரான பெண்ணினவாதிகளின் அல்லது முஸ்லிம் பெயர்தாங்கி பெண்களின் கோஷங்களும் சில தவறான நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தும் நடவடிக்கை என்பதனை குறிப்பிட விரும்புவதோடு காதி நீதிமன்றங்கள், காதி நீதவான்களுக்குத் தேவையானதல்ல என்பதனையும் இவைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையானவை என்பதையும் முஸ்லிம் சமூகம் தெளிவாகவும் துள்ளியமாகவும் புரிந்து செயற்பட முன்வரவேண்டும்.

எனவே, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு மற்றும் காதி நீதிமன்றங்களுக்கு எதிரான கோஷங்கள் திட்டமிட்ட ஒரு சதி செயற்பாடென்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து இந்த அனைத்து சதித்திட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் பொறுப்புவாய்ந்தவர்களும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதே மிகவும் சிறந்தது என்பதையுமே இப்பதிவின் மூலம் கருதுகின்றேன்.

மிர்ஸூக் பளீல்

(பேருவளை காதி நீதவான்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.