ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை நாட்டில் உள்ள உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செமட்ட விக்ரம என்ற தலைப்பில் - அனைவருக்கும் ஓய்வூதியம் என்ற திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனாக்க பண்டார தென்னக்கோன், அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ. ரத்ணஸ்ரீ, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ, ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மப்பிரியவினால் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் தேசிய ஓய்வூதிய தினத்தில் அனைத்து உழைக்கும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களது பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி திருத்த சட்டமூலமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்பொழுதுள்ள கொவிட் - 19 நெருக்கடி நிலைக்கு மத்தியில் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கலந்துரையாடுவதற்கு வாய்பில்லை. இதனால் இது தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்திற்கமைவாக அரச மற்றும் தனியார் துறையில் உள்ள ஓய்வூதியம் பெறும் வயதை நீடிப்பதற்கும் தனியார் துறைக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், அரச சேவை ஓய்வூதிய முறையை பாதுகாப்பதற்கும், ஓய்வூதிய முறைக்கு உட்படாத அனைவருக்கும் ஓய்வூதிய பயன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இணையத்தளத்தின் samatawishrama@pensions.gov.lk மின்னஞ்சல் முகவரியூடாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும்.
சர்வதேச ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு தேசிய ஓய்வூதிய தின நிகழ்வின் கீழ் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.