மே.தீவுகள் அணியின் அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள் விளாச, மே.தீவுகள் 395 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

வங்காளதேசம் - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 3-ம் திகதி தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ஓட்டங்கள் குவித்தது. மே.தீவுகள் 259 ஓட்டங்களில் சுருண்டது.


171 ஓட்டங்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் மொமினுல் ஹக் சதமும், லித்தோன் தாஸ் அரைசதமும் அடிக்க வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் 394 ஓட்டங்கள் முன்னிலை பெற, மே.தீவுகள் அணிக்கு 395 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

395 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.தீவுகள் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிரேக் பிராத்வைட் (20), ஜான் கேம்ப்பெல் (23) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 4-வது நாள் ஆட்ட முடிவில் மே.தீவுகள் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளில் அந்த அணிக்கு 285 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கெட் இருந்தது. அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 37 ஓட்டங்களுடனும், போனர் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கைல் மேயர்ஸ் சதம் அடிக்க, போனர் 86 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். போனர் ஆட்டமிழக்கும்போது மே.தீவுகள் 275 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட் இருந்த நிலையில், 115 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அடுத்து வந்த பிளாக்வுட் 9 ஓட்டத்துடனும், ஜோஸ்வா டி சில்வா 20 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். பிளாக்வுட் ஆட்டமிழக்கும்போது, மே.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஜோஸ்வா  டி சில்வாவை வைத்துக் கொண்டு கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.


டி சில்வா ஆட்டமிழக்கும்போது மே.தீவுகள் 392 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கேமர் ரூச் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கைல் மேயர்ஸ் 210 ஓட்டங்கள் அடிக்க மே.தீவுகள் 7 விக்கெட் இழப்பிற்கு 395 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இளம் வீரர்கள் கொண்ட மே.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

அறிமுக போட்டியிலி இரட்டை சதம் அடித்த முதல் வீரராகவும், இரண்டாம் இன்னிங்சில் இலக்கை துறத்தி ஆடி இரண்டை சதம் அடித்த இரண்டாவது வீரராகவும் கைல் மேயர்ஸ் வரலாற்றில் இடம் பிடித்தார்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.