இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகான் - இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்)
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞராவார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமய மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த முன்னோடியாக இவர்கள் கருதப்படுகின்றார். போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்னர் இலங்கையில் 350 இற்கும் அதிகமான பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்து இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சேவையைச் செய்தார்கள். ரஜப் மாதம் பிறை 5 இல் நினைவுகூரப்படுகின்றார்கள்.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1232 (1816), முஹர்ரம், பிறை 18இல் இந்தியாவின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர்களின் தாயார் பெயர் ஆமினா. இவர்கள் இஸ்லாமிய கிலாபத்தின் முதலாவது கலீபாவான செய்யிதினா அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வழித்தோண்றலில் வந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத் என்பதாகும். முகலாயப் பேரரசர் அவுரங்கஸீப் அவர்களின் ஆன்மீக வழிகாட்டியும், பெரும் ஞானியுமான அஷ்செய்க் ஸதகதுல்லா காஹிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பிறந்த வீட்டிலேயே இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பிறந்தார்கள் இவர்களது இரண்டாவது வயதில், இவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது. இவர்கள் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்கள்.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) தனது ஆரம்பக் கல்வியை தந்தையிடம் கற்றார்கள். அவர்கள் தனது தந்தையிடம் தப்ஸீர், ஹதீஸ்,தஸவ்வுப், பிக்ஹ், அகீதா,
இஸ்லாமிய வரலாறு மற்றும் ஏனைய மார்க்க அடிப்படைகளைக் கற்றார்கள். கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க மேதை அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கல்விகற்கும் வாய்ப்பு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு கிடைத்தது. அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பல்வேறுபட்ட இஸ்லாமியக் கலைகளைக் கற்றார்கள். மேலும், அக்காலத்தில் வாழ்ந்த பெரும் மார்க்க மேதைகளிடம் கற்கும் வாய்ப்பு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு கிடைத்தது.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு கல்வியின் மீது இருந்த ஆர்வம், அடுத்தவர்களுடன் அன்பாக நடந்துகொள்ளும் மனப்பாங்கு போன்ற பல்வேறு பண்புகளால் கவரப்பட்ட அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது நான்காவது மகளான ஸாரா உம்மா அவர்களை இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். தனது உஸ்தாதின் மகளை திருமணம் செய்ததால் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற பெயரால் இமாமுல் அரூஸ் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் காதிரிய்யாதரீக்காவின் செய்காக இருந்தோடு, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை தனது முரீதாக ஏற்றுக்கொண்டார்கள். சிறிது காலத்தின் பின்னர் காதிரிய்யா தரீக்காவின் கலீபாவாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் நியமிக்கப்பட்டார்கள். அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக கேரளா,தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சென்றார்கள். இதனால் ,19ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் கேரளா,தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவர்களது மாணவர்களாக காணப்பட்டார்கள். இன்றளவும் இலங்கையில் பல பகுதிகளில் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள் காணப்படுவதோடு நுாற்றுக்கணக்கான தைக்காக்கள் சிறப்பான முறையில் இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அர்வி (அரபுத்தமிழ்) மற்றும் அரபியில் கவிபாடும் திறமையைப் பெற்றார்கள். அவர்களது கவிதைகள் முக்கியமாக சமய, ஆன்மீக மற்றும் சமூக விடயங்களை சார்ந்தவாகவே அமைந்திருந்தது. தமிழ், உர்து மற்றும் பாரசீகம் போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்பட்டார்கள்.
தனது மாமனார் அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு பின்னர் , அவர்கள் நடத்தி வந்த அரூஸிய்யா மத்ரஸாவை இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நடாத்தினார்கள். அரூஸிய்யா மத்ரஸாவின் வாசிகசாலையை விஸ்தரித்து பல கையெழுத்துப் பிரதிகளை அங்கு பாதுகாத்து வந்தார்கள்.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முதலில் வியாபார நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்தார்கள். எனினும், ஐரோப்பிய காலநித்துவ ஆட்சியின் காரணமாக
கடுமையாக பாதிப்படைத்திருந்த இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு கவலையடைந்தார்கள். எனவே, தனது வியாபார நோக்கத்தை கைவிட்டுவிட்டு இலங்கை முஸ்லிம்களின் சமய,கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்காக தன்னை அர்பணித்தார்கள். இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பல அரபுநாடுகளுக்கு பயணம் செய்தார்கள். மக்கா மற்றும் மதீனா நகரங்களில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுகளை அங்கு வாழ்ந்த முக்கியஸ்தர்கள் கெளரவித்தார்கள், அங்கு சிலர் அவர்களின் மாணவராக மாறினார். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் புனித மக்காவின் ஒரு வாசிகசாலையில், தம்மால் எழுதப்பட்ட 'மின்ஹாதுஸ் ஸரன்தீப்' என்ற புத்தகத்தின் பிரதியொன்று வைக்கப்பட்டிருந்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிகழ்வை ஏனைய எழுத்தாளர்கள் சிலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் கரையோர நகரங்களான காயல்பட்டிணம் மற்றும் கீழக்கரை போன்ற இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள், போர்த்துக்கேய காலநித்துவ ஆட்சியின் போது ( கி.பி. 1501-1575) கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இலங்கையில் போர்த்துக்கேய காலநித்துவ ஆட்சியின் போது (கி.பி. 1505 முதல் 1658 வரையான காலப்பகுதியில்), இலங்கையின் கரையோரப் பகுதிகளில் காணப்பட்ட ஏறத்தாள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளச் சின்னங்களையும் போர்த்துக்கேயர்கள் அழித்தார்கள். அக்காலப் பகுதியில் இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மார்க்கக் கடமைகளைக் கூட சரியான முறையில் நிறைவேற்ற சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போர்த்துக்கேயருக்கு பின்னர் வந்த ஒல்லாந்து ஆட்சிலும் இது நீடித்தது.
ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கை முஸ்லிம்களுக்கு சிறிது சுதந்திரம் கிடைக்கப்பெற்றது.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் கடுமையாக பாதிப்படைந்திருந்த இலங்கை முஸ்லிம்களின் நிலையினை மாற்றுவதிற்கு கடுமையாக உழைத்தார்கள். அவ்வகையில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அக்காலப்பகுதியில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தவாதியாக அவர்கள் காணப்பட்டார்கள். இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் இலங்கையில் நுாற்றுக்கணக்கான பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் கி.பி. 1848இல் தோற்றுவிக்கப்ட்ட நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இலங்கையில் 350இற்கும் அதிகமான பள்ளிவாசல்களும், அர்வி பாடசாலைகளும் அவர்களால் கட்டப்பட்டது. இந்தியாவிலும் பல பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் அவர்களால் கட்டப்பட்டது. பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்தவர்கள் பற்றிய தகவல்களை அரபுக் கவிதைகளை இயற்றி அதன் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கையில் போக்குவரத்து மிகக்குன்றிய அக்காலப்பகுதியில் மறுசுக்கட்டி மற்றும் கரடிக்குழி போன்ற தொலைத்துாரப் பகுதிகளுக்குச் செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தோடு, வனவிலங்குகளின் ஆபத்தும் காணப்பட்டது. எனினும், அவ்வாறான பகுதிகளுக்கு இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சென்று பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். மரிசுக்கட்டிப் பகுதியில் வில்பத்து வனாந்தர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பழமையான பள்ளிவாசலும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தனது 84 ம் வயதில் ரஜப் பிறை 5ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை மாலை (கி.பி. 1898)யில் வபாத்தானார்கள். இவர்கள் கீழக்கரை அரூஸிய்யா தைக்காவில் அடக்கம்செய்யப்பட்டார்கள்.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அர்வி(அரபுத் தமிழ்) இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த பெரும் அறிஞராக அடையாளப்படுத்தப்படுகின்றார். இவர்கள் நுாற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன:
* மஙானீ(மார்க்க சட்ட நூல்)
* பத்ஹுத் தைய்யான
* பத்ஹுஸ் ஸலாம்
* ஙனீமத்துஸ்ஸாலிஹீன்
* மின்ஹத்து ஸரன்தீப்
* ஹதிய்யா மாலை
* ஹத்யா ஷரீப்
* ராத்திபத்துல் ஜலாலிய்யா
* தாமிரப் பட்டணம் - அரபுத் தமிழில் எழுதப்பட்ட முதலாவது தமிழ் நாவல்
* தலைப் பாத்திஹா
* மவாஹிபுல் மஜீத்-பி-மனாகிபி ஷாஹுல் ஹமீத்(நாகூரார் வரலாறு)
கருத்துகள்
கருத்துரையிடுக