நமது நாட்டில் இனங்களுக்கிடையே உறவு பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்தது மொழிப் பிரச்சினை ஆகும். அதாவது இந்நாட்டின் இரு தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைப் புறந்தள்ளி மற்றைய மொழியான சிங்களத்தை மட்டும் நாட்டின் ஒரே நிர்வாக மொழியாக, அரசகரும மொழியாகப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த முயன்றதே இனங்களுக்கிடையே விரிசலை உண்டாக்கியது.

1956 ஆம் ஆண்டு இனவிரிசலுக்கு வழிவகுத்த குறித்த மொழிச் சட்டம் நாட்டில் பல பிரச்சினைகளை, வன்முறைகளை, அழிவுகளை ஏற்படுத்தியதன் தாக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக 1987 இல் அதனை மீளாய்வு செய்து மாற்ற வேண்டிய கட்டாய நிலைமை உருவானது.

இலங்கைக்குள்ளும் வெளியிலுமிருந்து மேலெழுந்த கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களால், பாராளுமன்றத்தால் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தை முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கைவிடும் நிலைமை ஏற்பட்டது.

ஒரு நாட்டின் உரிமையுள்ள குடிமகனுக்கான அங்கீகாரமாக இருப்பவற்றில் அந்தாட்டில் அவனது தாய்மொழிக்குரிய உரிமையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்றையது அவனது சமயம்.

1956 இல் இழைக்கப்பட்ட தவறு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1987 மற்றும் 1988 இல் திருத்தப்பட்டாலும் கூட மேலும் முப்பது ஆண்டுகள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. அரசியலமைப்பில் அது கண்டுகொள்ளப்படாத பக்கமாகவே உள்ளது.

எது எவ்வாறிருந்த போதிலும், நமது நாட்டில் நமது தாய்மொழிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமைகள் எவையென்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். மொழியுரிமை தொடர்பில் அறிவின்மையும் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு உள்ள தடைகளிலொன்றாகும்.

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயம் மொழிகள் தொடர்பான அடிப்படைச் சட்டமாக அமைந்துள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 1987 ஆம் ஆண்டின் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமும் திருத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. மொழியுரிமை அடிப்படை உரிமையென்று அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தின் 12(2) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழாக 18(1) மற்றும் 18(2) ஆம் உறுப்புரைகளின்படி சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகள் ஆதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அரச கரும மொழிகள் என்னும் போது அது நாட்டின் நிர்வாக மொழியாக செயற்படும் உரிமை கொண்டது என்று பொருள்படும்.

அதாவது ஒரு குடிமகன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத்துடனான தொடர்புகள், பரிமாற்றங்களையும் தான் விரும்பும் மொழியில் எதுவித தயக்கமோ, தடையோ, தாமதமோ இன்றி திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது பொருளாகும். சட்டம் உள்ளது அதை நடைமுறைப்படுத்த உரிய, உகந்த செயற்றிட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தின் 19 ஆம் உறுப்புரையில் இந்நாட்டின் அதாவது இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த இரு மொழிகளையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இந்நாட்டின் தேசிய இனத்தவர் என்று அரசியலமைப்பினூடாகத் தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உண்மையை அதாவது நாட்டின் இரு மொழிகளும் தேசிய மொழிகள், அவற்றின் உரித்தாளிகளான இரு இனத்தவர்கள் தேசிய இனத்தவர்கள் என்பதை இரு சாராரும் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

1978 ஆம் ஆண்டின் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்கு 1987 இல் மேற்கொள்ளப்பட்ட மொழியுரிமைகள் பற்றிய திருத்தங்களுக்கு மேலதிகமாக 1988 இல் 16வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் நாடு முழுவதும் அதாவது இலங்கை முழுவதும் சிங்களமும்இ தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 16 ஆவது திருத்தத்தின் 22(1) உறுப்புரையே அதுவாகும். அந்தத் திருத்தத்தின்படி நாடு முழுவதும் நிர்வாக மொழிகளாக ஏற்கப்பட்டிருந்த போதும், வடக்கு கிழக்கு மாகாணங்களிரண்டினதும் முதன்மை நிர்வாக மொழி தமிழாகவும் ஏனைய ஏழு மாகாணங்களினதும் முதன்மை நிர்வாக நிர்வாக மொழி சிங்களம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், முதன்மை நிர்வாக மொழியாகப் பயன்பாட்டிலுள்ள மாகாணங்களின் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் மற்றைய மொழியினர் உள்ள போது அப்பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழி அதாவது சிங்களமும் தமிழும் நிர்வாக மொழியுரிமை கொண்ட இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் 22(1) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்படலாம்.

அவ்வாறு பிரகடனப்படுத்தப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைமுறையில் இரு மொழிகளும் சமத்துவம் கொண்ட மொழிகளாகவே கணிக்கப்பட வேண்டும்.

குறித்த அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் 23(3) ஆம் உறுப்புரையின் கீழ் சிங்கள மொழி நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்படும் பிரதேசமொன்றில் தமிழில் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் அரச அலுவலருடன் தொடர்பு கொண்டு தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒருவருக்கு உரிமையுண்டு. அதே உரிமை தமிழை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேசங்களில் மற்றைய மொழியினருக்கும் உண்டு.

ஒருவர் ஏதேனும் அலுவலக முறையான இடாப்பை, பதிவேட்டை, வெளியீட்டை அல்லது வேறு ஆவணமொன்றைச் சட்டப்படி பார்வையிடுவதற்கும் பரிசீலிப்பதற்கும், பிரதியைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிமை உள்ள போது அதை சிங்களத்திலோ, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பெற்றுக் கொள்ள முடியும். தேவைப்படும் போது அவற்றின் மொழிபெயர்ப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக இதுவரை நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் பெயரிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானிகள் மூலம் காலத்திற்குக் காலம் ஜனாதிபதிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்களை நாம் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கும் நிர்வாக உரிமையுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அப்பாலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அரசியலமைப்பின் 22(1) உறுப்புரையின் கீழ் 1999 நவம்பர் மாதம் 12ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்வரும் பன்னிரண்டு (12) பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளான அம்பேகமுவ, நுவரெலியா, கொத்மலை, ஹங்குரங்கெத்த, வலப்பனை, ஆகியவையும் ஊவா மாகாணத்தின் பண்டாரவளை, எல்ல, ஹல்தும்முல்ல, ஹாலிஎல, அப்புத்தளை, பசறை மீகஹகிவுல ஆகிய ஏழுமே அவையாகும்.

அதிவிசேட வர்த்தமானி மூலம் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அன்றை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவ்வாறே 1282(3) இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் 2003.04.07 ஆந் திகதி ஊவா மாகாணத்தின் பதுளை, லுணுகலை, வெலிமடை, சொரணத்தோட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் காலிநகர் சூழ் பிரதேச செயலகப் பிரிவும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச செயலகப் பிரிவும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, பன்வில, தெல்தோட்டை, பஸ்பாகேகேறளை, உடபலாத்த ஆகிய ஐந்தும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் முந்தல், கல்பிட்டி, புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகியவையும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தமிழ்மொழியும், சிங்கள மொழியும் நிர்வாக உரிமை கொண்ட இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து 2012.10.10 ஆந் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் தெகிவளை, கல்கிஸ்ஸை, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோறளை, கண்டி நகர் சூழ் பிரதேசம் மற்றும் கங்கவட்ட கோறளை, மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு ஆகியவையும், வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர வெலிகந்த ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை மற்றும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பிரதேச செயலகப்பிரிவும் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுடன் வடமாகாணத்தின் வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச செயலகப் பிரிவும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டிய பிரதேச செயலகப் பிரிவும் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த 1776(16) இலக்க வர்த்தமானி மூலம் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அவை பன்னிரண்டையும் பிரகடனப்படுத்தியவர் அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படாத போதும் மேலும் முப்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகத் தகைமை கொண்டவையாக இனங்காணப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் மொழிக்கும் உரிமை கொண்ட மேற்குறித்த நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச அலுவலகங்களினூடாக தமிழ் மொழியினும் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிக் கொள்ளும் உரிமையைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பொறுப்பாகும். அது உரிமையும் கூட. அந்த மொழியுரிமையை நிறைவேற்றத் தடையாயுள்ள காரணிகள் ஆராயப்பட்டு அவற்றைக் களைய வழி காணப்பட வேண்டும். மொழியுரிமைக்குக் குரல் கொடுப்பது நமது பொறுப்பாகும்.


த. மனோகரன்

(கல்விக் குழுச் செயலாளர்,

அகில இலங்கை இந்து மாமன்றம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.