உலகம்
வண்ணங்களின் சேர்க்கை!
வண்ணங்களின் கலவை!

அந்தி நேர ஆகாயம்!
ஐந்து வயதுச் சிறுவனின்
தூரிகை வர்ண ஓவியமாய்..

சூரிய அஸ்தமனம்!
நிமிடத்திற்கு நிமிடம் மாறும்
வர்ண ஜாலமாய்,.

வானவில்!
மழையின் வருகையில் களிப்புற்று
வானின் மீது வரைந்த
பூமித்தாயின் ஓவியமாய்..

பொன்மாலைப் பொழுதொன்றில்
கடற்கரையில் ஓர் பொடிநடை..
சூரியன் தன் தூரிகைக் கரங்களால்
வண்ணக் கலவையை ஒன்றுதிரட்டி
ஆழியில் தெறித்து அழகு பார்க்கிறான் ..

கரங்கள் நீட்டி சோம்பல் முறிக்கிறான்.
அதுகூட வண்ணங்களாய் விரிகின்றன.
மஞ்சள்,செம்மஞ்ச்ள்,சிவப்பு நிறங்களாக!

இயற்கையின்
வண்ணங்களை வாசிக்க
கலையுள்ளம் கோண்ட
கண்கள் மட்டுமே போதும்
உதடுகள் தேவையில்லை.

சில  வண்ணங்கள்
வளைந்ததால் அழகு
வானவில்!

சில வண்ணங்கள்
அசைந்ததால் அழகு
மயிற்றோகை!

 சில வண்ணங்கள்
மலர்ந்ததால் அழகு
ரோஜாவின் புன்னகை!

வண்ணங்களின் கலவையொன்று
வண்ணங்களோடே
உறவாடுகிறதே!
ஓ! ரோஜாவின் மேல் வண்ணத்துப்பூச்சி!

வண்ணங்களில் எதுவும் கழிவில்லை
கறுப்பும் ஓர் கவிதைதான்
கயல் விழிப் பெண்ணுக்கு!

உலகம்
வண்ணங்களின் கலவை!
வண்ணங்களின் சேர்க்கை!

அழகை விரும்பும்
அல்லாஹ்வின் படைப்புக்கள்
அத்தனையும் அழகுதான்! 

Fazmina Razick 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.