சிறுவர் தொழிலாளர்கள், கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றின் மீதான தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்:

முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில், வீட்டு வேலைகளை புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன் டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை (2021/07/03) அன்று அவரது உடலில் பலத்த தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73வது சிகிச்சை அறையில் அமைந்துள்ள தீவிர சிகிச்சை பிரிவு 2 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து வழக்கிலக்கம் B/52944/2/21க்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியாலைக்கு குறித்த சடலத்தினை பார்வையிடச் சென்ற கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திரா சூரிய அவர்கள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைகளை உரிய முறையில் முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார். 

குறித்த பாதிக்கப்பட்டு மரணித்த சிறுமி 2004/11/12 அன்று ஹற்றன் டயகமவில் பிறந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன் அவர்களின் வீட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு வரும் போது அச்சிறுமிக்கு 15 வயது 11 மாதங்களே பூர்த்தியடைந்தவராக இருந்துள்ளார். அச்சிறுமி இறக்கும் போது அவருக்கு வயது 16 ம் 8 மாதங்களும் மட்டுமே ஆகும். குறித்த சிறுமி வீட்டு வேலைக்காக குறித்த வீட்டிற்கு வந்த பின்னர் அவர் தொலைபேசியின் ஊடாக சில தடவைகள் குடும்பத்தனருடன் தொடர்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன் அவர் வீட்டிற்கு விடுமுறையில் செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. உறவினர்களை பார்க்காமலே குறித்த சிறுமி எரியூட்டப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். 

எமது நாட்டில் வயது 16 வரை பிள்ளைகளுக்கான கல்வி கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக பிரதேச அலுவலகத்தில் காணப்படும் அதிகாரிகள் அதாவது சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று பலர் குடும்பங்களில் பின்தொடர்தலை மேற்கொண்டு பாடசாலை கல்வியில் இருந்து விலகிச்செல்லும் மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கு பாடசாலை சமூகத்துடன் பணியாற்ற வேண்டியவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமியினது கல்வி இடைவிலகல் அவதானிக்கப்படாமல் இருந்துள்ளதுடன் குறித்த உத்தியோகத்தர்கள் தமது கடமையை சரிவர செய்ய தவறியுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுகின்றது. 

இலங்கையில் 1956ம் ஆண்டின் 47ம் இலக்க  பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்திற்கு அமைவாக பொது நன்மைக்காக 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு இடைப்பட்டதுமான ஆட்களை தொழிலுக்கு அமர்த்தலாம். ஆனால் அது தொடர்பாக தொழில் ஆணையாளருக்கு அறிவித்து அவசர நிலை தொடர்பாக அறிவித்த பின்னரே அதனை செய்ய முடியும். இதே சட்டத்தில் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதாக அல்லது உடலுக்கு பங்கம் விளைவிக்கும் தொழிலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என சட்டம் தெளிவாக கூறுகின்றது. 

இந்நிலையில் இச்சிறுமி வயது குறைந்த நிலையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவரது கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவரது பிரேத பரிசோதணை அறிக்கையின்படி குறித்த சிறுமி தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எமது தண்டனைச்சட்டகோவையின் பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பாரிய குற்றமாக காணப்படுவதுடன் இது வேலைத்தளங்களில் இடம்பெறுவது கண்டிக்கப்பட்டும் வருகின்றது. 

இங்கு சிறுமியை வேலைக்கு அமர்த்தியது, கல்விக்கு பங்கம் விளைவித்தமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை போன்ற பல்வேறுபட்ட பாரதூரமான குற்றங்களுடன் பின்னிப்பிணைந்ததாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் குறித்த சிறுமியின் மரணத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஏனைய உரிமை மீறல் குற்றங்களுக்கும் தகுந்த வகையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த விசாரணைகளை சட்டத்தினை அமுல்படுத்தும் தரப்பினர் பக்கச்சார்பின்றியும் எந்த ஒரு பின்புல அழுத்தங்களையும் பொருட்படுத்தாது நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நீதியானது பல கிஷாலினிகளின் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒன்றாக அமைய வேண்டும்.  

தற்போதைய கொரோனா சூழலில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் இந்த சூழலில் குடும்ப மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையினை நாம் காண முடிகின்றது. இந்த மாதத்தில் கிஷாலினியின் வழக்கு உள்ளடங்கலாக மொத்தம் 6 சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. 

1. 15 வயது சிறுமி இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட கொடுமை.

2. 16 வயது சிறுமி சட்டவாக்கத்துறை பிரதிநிதியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் தீக்காயங்களுடன் மரணம்.

3. 14, 12 வயது சொந்த மகள்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய 36 வயது தந்தை. 

4. 13 வயது நாவலப்பிட்டியைச் சேர்ந்த  சிறுமி அவளது 7 வயதில் இருந்து சொந்தத் தகப்பன் உட்பட பலரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுள்ளமை.

5. கம்பஹா 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு விகாரையின் தலைமை துறவி உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.

6. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்  சிறுவர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இவை அனைத்தும் நம் நாட்டில் இம்மாதத்தில் இடம்பெற்ற கொடுமைகள். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பெண்கள் சிறுவர்கள் நலன் பொலிஸ் பிரிவின் கட்டமைப்பும் சிறுவர்கள் தொடர்பான வன்முறை முறைப்பாடுகள் தொடர்பான பாரபட்சம் காட்டாமல் நியாயம்  கிடைப்பதற்கு கட்டாயம் நீதியுடன் செயற்பட வேண்டும். காரணம் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான அதி கூடிய வன்முறை இடம்பெற்ற போதும் மேற்குறிப்பிட்ட கட்டமைப்புக்கள் எதுவும் சீராகவும் வினைத்திறனுள்ள முறையிலும் தங்களது கடமைகளை நிறைவேற்றவில்லை.

பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களாக நாங்கள் பல அணுகுமுறைகளை நாடியும் இந்தக் கட்டமைப்புக்கள் சீராக இயங்கவில்லை. அதனால் சிறுவர்கள் தொடர்பான பாரிய வன்முறைகள் தொடர்ச்சியான இடம்பெற  இந்த கட்டமைப்புகளது வினைத்திறனற்ற செயற்பாடுகள் ஒருவகையில் வழிவகுத்துள்ளன. இந்த நிகழ்வின் பின்னரேனும் இந்தக் கட்டமைப்புக்கள் அவர்களது கடமைகளை சரியாக வினைத்திறனுள்ள வழியில் பாதிக்கபட்டவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் செய்ய வேண்டும். மேலும் அதன் துறை சார்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதித்துறை சார்ந்த பல மாற்றங்களை கதைத்து கொண்டிருக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களும் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான மாற்றங்கள் தொடர்பாகவும்  கருத்திற் கொள்ள வேண்டும். 

அதற்கான செயற்திறன் மிக்க பொறிமுறைகளை உருவாக்கி, நீதித்துறை சார்ந்த கட்டமைப்பில் சிறுவர்கள் சார்ந்து கையாளப்படும் வழக்குகளை காலதாமதமில்லாமல் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு  தண்டனைகளை வழங்கக் கூடிய செயல்முறைகளைக் கொண்டு வர வேண்டும். துரிதப்படுத்தப்பட்ட செயன்முறையை (நுஒpநனவைநன pசழஉநளள) நடைமுறைப்படுத்தி விரைவாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுவர் துஸ்பிரயோகத்தையும் அவர்களுக்கெதிரான வன்முறைகளையும் இலங்கையில் குறைக்க முடியும். 

அனுசரணையுடன்:

1. Women’s Action Network

2. Suriya Women’s Development Centre – Batticaloa

3. Mannar Women’s Development Federation

4. Centre for Human Rights &  Development

5. Affected Women’s Forum – Ampara

6. Muslim Women’s Development Trust – Puttalam

7. Rainbow Pillars for Creativity

8. Women Aid Network – East

9. Eastern Social Development Foundation

10. Institute of Social Development – Kandy

11. Rural Development Foundation

12. Law & Human Rights Centre – Jaffna

13. Women Development Innovators

14. Third Eye Local Knowledge & Activist Group

15. Alliance for Minorities

16. Human Elevation Organization – Ampara

17. Viluthu Centre for Human Resource Development

18. National Christian Evangelical Alliance Sri Lanka

19. District Federation of Women Rural Development Societies (Jaffna, Killinochchi, Mullaitheevu, Mannar, Puttalam, Batticaloa, Trincomalee)

20. Amara District Forums Female Heads of Households (Jaffna, Killinochchi, Mullaitheevu, Mannar, Puttalam, Batticaloa, Trincomalee)

21. International Centre for Ethnic Studies

22. National Peace Council

23. Association of War Affected Women

24. Sisters at Law

25. Stop Child Cruelty Trust (as Organization)

26. Sisterhood Initiative

27. National Fisheries Solidary Movement

28. Hashtag Generation

29. People’s Alliance for Right to Land

30. Law & Society Trust

31. Centre for Policy Alternative


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.