அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்மொழிந்ததும், வழி மொழிந்ததும், இறுதி உரை நிகழ்த்தியதும் என அனைத்தையும் செய்தவர்கள் முஸ்லிம் உறுப்பினர்கள் என்று அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரிடம் சியன நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களால் வினவப்பட்ட போது அவர் தெரிவித்தவை:

"இந்த அரசியல் கலாச்சாரத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறான அரசியல் கலாச்சாரம் எமது இரத்தங்களையே வெளியேற்றியுள்ளது.

நாங்கள் எந்த குலத்தில் இருந்தாலும், எந்த சமூகத்தில் இருந்தாலும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒரே குடும்பத்தினர் போன்று நடக்க வேண்டும். 

இந்த வங்குரோத்து அரசியல் இறுதியில் தோல்வியடையும். வங்குரோத்து அரசியலின் ஒரே கோசமே இனவாதம் அல்லது மதவாதம். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அவர் மிகவும் சமூகத்தன்மை வாய்ந்த கருத்துக்களை கொண்ட ஒருவர் என நினைத்திருந்தேன்.

இந்த பிரேரணை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டவர் மரிக்கார் ஆவார். அவரே அதனை முன்மொழிந்தார். 

எமது கட்சியில் சகல பொறுப்புக்களுக்கும் உறுப்பினர்களை நியமித்துள்ளோம். எரிபொருள் விவகாரம் தொடர்பில் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் குறித்த பிரேரணையை வழிமொழிந்தார். 

மேலும் ஆளும் தரப்பு சார்பில் மிகவும் காத்திரமாக உரையாற்றக்கூடிய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இறுதி உரையை நிகழ்த்தினார். அதனால் எமது பக்கம் சார்பில் இறுதி உரை நிகழ்த்துவதற்கு மிகவும் காத்திரமாக உரையாற்றக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அதனால் நாம் முஜிபுர் ரஹ்மானை பாவித்தோம்.

சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் சக்தியானது வங்குரோத்து அரசியல் செய்வதில்லை. 

60 களில் கிறிஸ்தவ மயமாக்கலை பேசி தேர்தலை வெற்றி கொண்டார்கள். மற்றுமொரு தேர்தலில் தமிழ் விரோதத்தை பேசி வெற்றி பெற்றார்கள். மீண்டும் 'சிங்களம் மட்டும்' போன்ற விடயங்களை பேசி தேர்தலில் வென்றார்கள். இந்த முறை முஸ்லிம் விரோதத்தை பேசி தேர்தலில் வென்றார்கள்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உண்டாக்காவிட்டால் நாட்டை எப்போதும் கட்டியெழுப்ப முடியாது. இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விமல் வீரவன்ச அவர்களுக்கு சிறந்த ஞானம் உதயமாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.