மகேஸ்வரி விஜயனந்தன்
வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, தான் அல்லது தனது குடும்ப உறுப்பினர்கள் எவராவது இந்த மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு மறுநாளே அரசியலுக்கு விடைகொடுத்துவிடுவேன் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர். இந்த மோசடி தொடர்பில் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எவருக்கேனும் ஏதாவது தகவல் கிடைத்தால் அதனை, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
சிலர் ஊடகங்களிடம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து முழுமையான விசாரணை நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரிக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றார்.
இந்த விவகாரத்தின் உண்மை, பொய் தொடர்பில் ஆராய பொலிஸ் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.