20.12.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் ,தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான, அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதுவரை அதற்காக கையொப்பமிட்ட 86 நாடுகளில் 57 நாடுகள் ஏற்று அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இவ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கையும் அதற்குச் சார்பாக வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கியதுடன், அதற்கான உலகளாவிய தொடர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஊக்குவித்தும் வருகின்றது. குறித்த ஒப்பந்தத்தில் பங்கெடுக்கும் நாடுகள் அணு ஆயுதமோ அல்லது வேறு அணுவாலான வெடிபொருட்களை தயாரித்தல், பரிசோதித்தல், நிர்மாணித்தல், உற்பத்தி செய்தல், பரிமாற்றுதல், தன்னகத்தே வைத்திருத்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தல் அல்லது தமது நிலப்பரப்பில் அவ்வாறான ஆயுதங்களை நிலைப்படுத்துவதற்கு இடமளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவருக்கேனும் ஒத்துழைத்தல், ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் போன்ற செயற்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான மற்றும் அணு நிராயுதத்தன்மைக்கு சார்பாகவுள்ள இலங்கையின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் பொருத்தப்பாடானதாகும். அதற்கமைய, இலங்கை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் வெளி விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒசாக்கா நகர பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விப் பரிமாற்றல் மற்றும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒசாக்கா நகர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்விப் பரிமாற்றல் மற்றும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் (05) நடைமுறையிலுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய பல்கலைக்கழக பேராசிரியர்கள் பரிமாற்றல் வேலைத்திட்டங்களை நடாத்துதல், மாணவர் பரிமாற்றல் நிகழ்ச்சிகள், ஒத்துழைப்பு ஆய்வுகள் மற்றும் கூட்டான கற்றல் ஒன்றுகூடல்கள், செயலமர்வுகளை நடாத்துதல், கற்றல் நடவடிக்கைகளுக்கான தகவல்கள், வெளியீடுகள் மற்றும் பொருட்கள் பரிமாற்றங்கள் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இறப்பர் மீள்நடுகை மற்றும் புதிய செய்கைகளுக்காக வழங்கப்படும் சலுகைத் தவணைக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல்

இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முதலீட்டு சலுகை முறைக்கமைய, மீள்நடுகை மற்றும் புதிய செய்கைக்காக ஹெக்ரெயார் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 07 வருடங்களில் 08 தவணைகளில் செலுத்தப்படும். அதற்கமைய, காணியொன்றில் இறப்பர் மீள்நடுகைக்காக ஹெக்ரெயார் ஒன்றுக்கு 350,000 ரூபாய்களும், புதிதாக இறப்பர் செய்கைக்காக ஹெக்ரெயார் ஒன்றுக்கு 300,000 ரூபாய்களுமாக 08 தவணைகளில் செலுத்தப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள முறையின் குறைபாடுகளை தவிர்த்து, இறப்பர் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இறப்பர் மீள்நடுகைக்காகவும் புதிய செய்கைக்காகவும் செலுத்தப்படும் உதவித் தொகையை 05 தவணைகளில் செலுத்துவதற்கும், அதேபோல் கன்று நடுகை செய்து 05 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் 50 சென்ரிமீற்றர் இறப்பர் கன்றுகளின் வளர்ச்சியைப் பெறும் இறப்பர் செய்கையாளர்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 14,000 ரூபாய்கள் ஊக்குவிப்புத் தொகையாக செலுத்துவதற்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான சலுகைகளை வழங்கல்

கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் சலுகைக் காலத்தை வழங்குவதற்கு 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 2021 ஏப்ரல் மாதம் தொடக்கம் கொவிட் 19 தொற்று மீண்டும் பரவியமையால் சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்பட்ட விருத்தி ஏற்படாமையால், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் மாதம் 01 திகதி தொடக்கம் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

05. பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலைஞருக்கு காணித்துண்டொன்று வழங்கல்

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலைஞரை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், பாராளுமன்றத்திலும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கட் குழுவுக்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வா கலைஞருக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்காக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2018 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் (பணியாள் தொகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்) கட்டளை

சிக்காக்கோ உடன்படிக்கையின் கீழ் அரசொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள சர்வதேச பொறுப்புக்கள் மற்றும் பாதுகாப்பு, பாதுகாப்பான சூழலில் இலங்கையில் சிவில் விமான சேவைகளை நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்கில் 2010 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் ஏற்பாடுகளுக்கமைய 2018 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் (பணியாள் தொகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்) கட்டளை 2018 யூலை மாதம் 03 ஆம் திகதிய 2078ஃ22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் 119 ஆம் உறுப்புரைக்கமைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டளைகளும் துரிதமாக பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, 2018 யூலை மாதம் 03 ஆம் திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த கட்டளைகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டிகள்

இழப்பீடுகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளங் காணல் மற்றும் பொருத்தமான வகையில் கூட்டாக இழப்பீடுகளை வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இழப்பீடுகளுக்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் 11 ஆம் உறுப்புரையின் பிரகாரம் இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளாகியவர்களின் தகுதிகளைத் தீர்மானித்தல் போன்ற அளவுகோல்களைத் தயாரித்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல் போன்றன இழப்பீட்டு அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கமைய, மேற்படி அலுவலகத்தால் குறித்த தரப்பினர்களுடன் ஆராய்ந்து கொள்கைகள் மற்றும் வழிகாட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறித்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.