காலங்கள் 
எதுவானாலும்.....

கண்ணிமை முடி
பழுத்து விழுந்தாலும்......

விழுதுகள் பிடி 
தளர்ந்தாலும்.....

பழுதில்லா பாதைகள்..
பாதியிலே நின்றாலும்......

மனிதப் பிறப்பு
 மாறுவதில்லை......

மாற்றுமேகமும் 
உருகுவதில்லை......

காற்றின் திசைகள்
கால்முளைத்து  .....
விலகப்போவதுமில்லை......

சூரியனும் சந்திரனும்
சுற்றி நிற்கும் கோள்களும்......

பற்றி எரியும் இதயத்து..
அன்பின் வழி  ஆறாக
ஓடினாலும்............

இயற்கை...அம்சங்களும்
வம்சங்களும்..அன்பை.
எனக்குக்காட்டு என்று......

அழுதுமுகம் சிவந்து
கேட்டதுமில்லை...................................

என்னைக் கும்பிடு என்று
என்றும் வாய் பிளந்து
பல்லிளித்துக் கேட்டதுமில்லை.......

ஆனால்..ஆனால் 
பாருங்கள்.........

தசையும்..பசையுமாய்
தாங்கும் அன்பு கொண்டதுமாய்..
ஏக்கம் நிறைத்தங்கே.....

கருவாய்ச் சுமைந்து
உருவாய் உடம்பு படைத்து...
உயிரை உள்வைத்து தைத்து...

குத்தித்ததள்ளும்வேதனையுடன்
பிறப்புக்கொடுத்து......

பாலூட்டி.. உண்டி ஊட்டி
தாலாட்டி..தரையில் ஓடவைத்த
தாய்க்கு.....

எத்தனை படைப்புகளாயினும்
உற்பத்திசெய்த உதிரத்திற்கு
உரியநேரத்தில்......

அரியது எழுதி..  ஆயிரமாய்
எழுதினாலும்....அம்மாவுக்காய்.. ..
நீர்சிந்த எழுதும் ..

கண்ணீர் நிறைக் கவிதை....
"மேக மண்டலமே..
அழாமல் கேள்..

வைரமுத்துவின்..
கண்ணீர்ககடல்
பெரிதா........

நீ கரைந்தூற்றும்
மழை பெரிதா........

கவிதை நாயகனின்.
கண்ணீர்த்துளிக்கு பதில் கூறு....!!!!!!!!!

"
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம்  நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு  வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா" 

- வைரமுத்து - 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.