தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவெம்பரின் 11.1 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 14.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேநுவிசு 2021 நவெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 7.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 16.9 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 21.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெணின் மாதாந்த மாற்றம் 2021 திசெம்பரில் 3.68 சதவீதத்தினைப் பதிவுசெய்தமைக்கு முறையே 3.00 சதவீதமாகவும் 0.68 சதவீதமாகவும் காணப்பட்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் காய்கறிகள், அரிசி, மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றின் விலைகளில் முதன்மையான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. மேலும், பிரதானமாக உணவகம் மற்றும் விடுதிகள், மதுசாரக் குடிவகைகள் அத்துடன் புகையிலை (சாராயம், வெற்றிலை) துணை வகைகளில் மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், 2021 நவெம்பரின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 10.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 நவெம்பரின் 5.0 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

(இலங்கை மத்திய வங்கி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.