இன்று விசாக பூரணை தினம். இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில்தான் கௌதம புத்தர் ஞானம் பெற்றதாக பௌத்தர்கள் நம்புகின்றனர்.

இந்த நாளில்தான் புத்தரது பிறப்பு, இறப்பு, ஞானம் பெற்றது ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியதாக அவர்கள் நம்புவதால், இதை முப்பெரும் விழாவாகக் (தெமகுல் உத்சவய) கொண்டாடுகின்றனர்.

இதை ஐ.நா. அளவில் ஒரு சர்வதேச விடுமுறை தினமாக ஆக்க இலங்கைதான் பாடுபட்டது. அதனை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்தான் முன்மொழிந்தார்.

இலங்கைக்கு கௌதம புத்தர் 3 தடவைகள் வருகை தந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. எதிர்காலத்தில் பௌத்தம் செழித்து வளரும் 'புனித தலமாக' இலங்கை விளங்கும் என்பதை, புத்தர் தனது வருகையின் மூலம் முன்னறிவித்ததாக இங்குள்ள பௌத்தர்கள் நம்புகின்றனர்.

மகாவம்சத்தின் கருத்துப்படி, புத்தரது முதலாவது வருகை பதுளை மாவட்டத்திலுள்ள மஹியங்கனைக்கும், இரண்டாவது வருகை யாழ் மாவட்டத்திலுள்ள நாகதீபத்திற்கும், மூன்றாவதும் இறுதியுமான வருகை கொழும்புக்கு அருகே கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள களனிக்கும் (சிறீ கல்யாணி) நிகழ்ந்தது. இதற்கருகே உள்ள நதி, களனி கங்கை என்றே பெயர் பெற்றுள்ளது.

புத்தர் ஞானம் பெற்று ஒன்பதாவது மாதத்திலும், ஐந்தாவது வருடத்திலும், ஒன்பதாவது வருடத்திலும் முறையே இந்த வருகைகள் நிகழ்ந்தேறின எனவும்  குறிப்பிடப்படுகிறது.

இந்த மூன்று விஜயங்களின்போதும் 16 இடங்களை அவர் தரிசித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அதிலும், இரண்டாவது வருகையின்போதுதான் அதிக இடங்களைத் தரிசித்துள்ளார். இந்த 16 தலங்களையும் 'சொலமஸ்தான' என்கின்றனர். மகாவம்சம், அதில் 11 இடங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இதில் 8 தலங்களை வகைப்படுத்தும் இன்னொரு வகைப்பாடும் உள்ளது. அதற்கு 'அட்டமஸ்தான' என்று பெயர். 

அம்பாரை மாவட்டத்தில் ஒலுவிலுக்கு அருகாமையிலுள்ள தீகவாபிக்கும், யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த நயினாதீவிலுள்ள நாகதீபத்திற்கும் புத்தர் வந்ததாக அவர்கள் நம்புகின்றனர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புத்தருடைய இந்த வருகை காரணமாக, அவரது ஆசீர்வாதம் பெற்ற புனித பூமியாக இலங்கை விளங்குகிறது என்று, இங்குள்ள பௌத்தர்களுள் கணிசமானோர் உறுதியாக நம்புகின்றனர். இந்த இடங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர். உள்ளூர் சமய சுற்றுலாத் தலங்களாக (Local Religious Toursit Places) இவை முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. 

இதுபற்றி நம்மில் பலருக்கு போதிய அறிவில்லை. இதுபோன்ற பண்பாட்டுப் புரிதல் (Cultural Understanding) பரஸ்பரம் எல்லா சமூக - சமய மட்டங்களிலும் இருக்க வேண்டும். இதுபோன்ற சமூக, சமய, பண்பாட்டுப் புரிதல்கள், பல்லின சமூக வாழ்வியலுக்கு இன்றியமையாதனவாகும்.

புத்தர் தனது மூன்றாவது விஜயத்தின்போது, 500 புத்த பிக்குகளோடு சிறீ கல்யாணிக்கு வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.

எதிர்காலத்தில் இலங்கையில்தான் பௌத்தம் தழைத்தோங்கும் என்பதற்கான தெளிவான முன்னனறிவிப்பாக இதை பௌத்தர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

பின்னர் மௌரியப் பேரரசரான அசோக மன்னனின் மகன் மஹிந்த தேரர், இலங்கைக்கு பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய வரலாற்றுக்கு, இதுவே முன்னோடி நிகழ்வு என்பது இங்குள்ள பௌத்தர்களின் நம்பிக்கை. 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள மிஹிந்தலையில், மஹிந்த தேரரைச் சந்தித்த மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தைத் தழுவி, அதை இலங்கைத் தீவில் வளர்த்தெடுக்க வழியமைத்தான் என்ற வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.

பாளி மொழியில் அமைந்த பௌத்த 

மதத்தின் புனித நூல்கள் பல இலங்கையில்தான் பாதுகாக்கப்பட்டன.  மூல பௌத்தத்திற்கு மிக நெருங்கியதாக நம்பப்படும் 'தேரவாத பௌத்தம்' அரச அனுசரணையுடன் பெரிதும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவது இலங்கையில்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து வேறுபட்டு நிற்கும் மஹாயான பௌத்த மரபு, வரலாறு நெடுகிலும் இலங்கையில் சகித்துக் கொள்ளப்படவில்லை. மஹாயான பௌத்தத்தை அறிமுகப்படுத்த இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டன; முறியடிக்கப்பட்டன. அதற்கு 

சமீபகால வரலாற்றில் கூட பல உதாரணங்கள் உள்ளன.

மஹாயான (பெருவழி) பௌத்த மரபை வடக்கு பௌத்தம் (Northern Buddhism) என்றும் அழைப்பர். சீனா, ஜப்பான், தாய்வான், கொரியா போன்ற பௌத்த-ஆசிய நிலப்பரப்பின் வடக்கு நாடுகளில்தான் இது பின்பற்றப்படுகிறது. ஜென் பௌத்தம் (Zen Buddhism) கூட இந்த மரபோடு தொடர்புபட்டதுதான். 

தேரவாத மதகுருக்கள் திருமணம் செய்வதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால், மஹாயான மதகுருக்கள் திருமணம் செய்கின்றனர் என்பது முக்கியமான வித்தியாசங்களுள் ஒன்று.

தேரவாத பௌத்தத்தை 'ஹீனயான' (சிறுவழி) என்றும் அழைப்பர். இது இலங்கை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதனால் இதை தெற்கு பௌத்தம் (Southern Buddhism) என்றும் அழைப்பர்.


தேரவாத பௌத்தம் காரணமாக, 

தெற்கு பௌத்த நாடுகளிடையே

சமய- பண்பாட்டுத் தொடர்புகள் மிக அதிகம். மூல பௌத்தத்திற்கு நெருக்கமானதாக இவர்கள் நம்பும் தேரவாதத்தைக் கற்றுத் தேற, மியன்மாரிலிருந்தும் தாய்லாந்தில் இருந்தும் இங்கு பௌத்தர்கள் வருகை தந்தனர். வரலாறு நெடுகிலும் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்றும் இந்த இருவழிப் போக்குவரத்தை அவதானிக்கலாம்.

சாதிப் படிநிலையில் உயர்ந்து விளங்கும் இலங்கையின் மிக முக்கிய பௌத்த பீடத்தின் பெயர் 'சியம் நிக்காய'வாகும். அமரபுர மற்றும் ராமாஞ்ஞ பௌத்த பீடங்களை விட, சியம் நிக்காய சமூக அந்தஸ்தில் உயர்ந்து நிற்கிறது. இதன் இரு கிளைகளே அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களாகும். இவை கண்டியை மையப்படுத்தி இயங்குவனவாகும். 

'சியம்' (Siam) என்பது தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயரீட்டுக்குப் பின்னால் வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன.

நேபாளத்தின் கபிலவஸ்துவில் பிறந்த புத்தர், இந்தியாவிலுள்ள புத்தகயாவில்தான் ஞானம் பெற்றார். அங்குதான் பௌத்த தத்துவத்தைப் போதித்தார். சீர்திருத்த மதமாக பௌத்தம் உருப்பெற்ற இந்தியாவில் கூட, பின்னாளில் அது பாரியளவு செல்வாக்குப் பெறவில்லை. இலங்கையில்தான் அது நிலைபெற்றது. இங்கிருந்துதான் மூல பௌத்தத்தின் வேர்கள் தென்கிழக்காசியா வரை நீண்டது என்ற உளவியல்தான், மகாவம்ச மன அமைப்பு  உருவாக பிரதானமாகப் பங்களித்தது.

இதேவேளை தமிழ்நாட்டில் நிலவிய தமிழ் பௌத்த மரபு குறித்து- குறிப்பாக மகாயான பௌத்தத்திற்கான அதன் பங்களிப்பு குறித்து - இங்கு பெரிதாகப் பேசப்படுவதில்லை. அங்கும் தேரவாத மரபு இருந்தது. அது பற்றியும் இங்கு பெரிதாகப் பேசப்படுவதில்லை.

அதேபோல இலங்கையிலும் தமிழ்பௌத்த மரபொன்று நிலவியது. இதற்கு வடக்கில் யாழ் சுன்னாகத்திற்கு அருகேயுள்ள கந்தரோடை பௌத்த தலம் மற்றும் கிழக்கில் புல்மோட்டைக்கு அருகில் திரியாயிலுள்ள 'ராஜராஜ பௌத்த பள்ளி' என்பன மிக முக்கியமான வரலாற்றுச் சான்றுகளாகும். ஆந்திராவில் செல்வாக்குப் பெற்றிருந்த 'அமராவதி பௌத்த பள்ளிக்கும்' இதற்கும் இடையே வலுவான தொடர்புகள் இருந்துள்ளன.

இலங்கையில் நிலவிய 'தமிழ் பௌத்தம் (Tamil Buddhism) பெரிதும் மஹாயான பௌத்த மரபைச் சார்ந்திருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. தேரவாத பௌத்தத்திற்குக் கிடைத்த அரச ஆதரவு, காரணமாக மஹாயான தமிழ் பௌத்தம் காலவோட்டத்தில் அழிந்து போனதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு பார்வை உள்ளது.

பௌத்தம் பற்றி மேலே சொல்லப்பட்டுள்ள மகாவம்சக் கதையாடல்களும் நம்பிக்கைகளுமே, பிந்திய காலங்களில் 'சிங்கள பௌத்தம்' அரசியல் கருத்தேற்றம் செய்யப்பட்ட ஒரு கோட்பாடாமாக உருப்பெறக் காரணமாகவும் பின்புலமாகவும் அமைந்தது.

பெரும்பான்மை பௌத்தர்களின் 'புனிதபூமி' கருத்தாக்கத்திற்குப் பின்னே இந்த உளவியல் பின்புலம் ஆழமாக நிலையூன்றியுள்ளது.

இலங்கையிலுள்ள பௌத்தரல்லாத ஏனைய சிறுபான்மை மக்களுக்கு இந்தக் கருத்தாக்கம் - அதன் உளவியல் தத்துவார்த்தப் பின்புலம் பற்றிய

போதிய தெளிவுகள் இல்லை.

தொல்பொருளியல் 'சான்றுகளை' மையப்படுத்தி இங்கு உருப்பெறும் 'புனிதபூமி' கருத்தாக்கம், ஆழ்ந்த சமய- வரலாற்று- உளவியல் பின்புலம் கொண்டது என்பதை நாம் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும். அதனை வெறுமனே 'அரசியலாக' மட்டும் ஒற்றைப் பரிமாண வாசிப்புச் செய்வது தவறு.

கௌதம புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில், அவர் இலங்கைக்கு வந்ததாகவோ அதற்கான சான்றுகளோ கூறப்படவில்லை. அதேவேளை, இலங்கைத் தீவுக்கு புத்தர் வான் வழியாக வந்ததாக மகாவம்சம் கூறும் கருத்துகளுக்கு, பௌத்த மதவழிப்பட்ட வியாக்கியானங்கள் பல உள்ளன.

இதன் வரலாற்று உண்மைகள், சான்றுகள் பற்றி போதிய தெளிவைப் பெறமுடியாமலேயே உள்ளது. இலங்கையை ராவண தேசம் என்று கூறுவது போல, ஆதம் நபி இலங்கைக்கு வந்திறங்கினார் என்று நம்புவது போல இதுவும் தொன்மமாக மக்களது மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.

எது எப்படியோ புத்தர் இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு பேராளுமை. 

புத்தர் ஞானம் பெற்ற இந்த நாளை- வெசாக் கூடுகளால் அலங்கரித்தும், வீடுகளையும் பொது இடங்களையும் ஒளியூட்டியும், 'தன்சல' (கிரிபத் தன்சல, குளிர்பான தன்சல, ஐஸ் கிறீம் தன்சல...) எனும் தானம் வழங்கியும் சிங்கள மக்கள் கொண்டாடுகின்றனர்.

நேற்றும் இன்றும் மின்வெட்டு இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மிக நெருக்கடியான காலத்தில் இந்த வெசாக் பூரணை தினம் கொண்டாடப்படுகிறது. 

இதைக் கொண்டாடும் சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள்.

பிற்குறிப்பு:

இங்குள்ள 'சிங்கள பௌத்த பெரும்பான்வாத சமய அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதியிருக்கிறேன். 

ஆங்காங்கே வாசித்த நினைவுகளைத் திரட்டியும், நான் புரிந்து கொண்ட விதத்திலும் சுருக்கமாக இதை விளக்கியிருக்கிறேன்.

இதில் தவறுகள், திருத்தங்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்

படம்:

பொலன்னறுவை கல்விகாரையில் உள்ள நிற்கும் மற்றும் துயிலும் புத்தர் சிலைகள்.

சிராஜ் மஷ்ஹூர்

16.05.2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.