அரசாங்கம் பதவி விலகினால் மொத்த அரச அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்குப் போகுமா?

===================================

வை எல் எஸ் ஹமீட்



அரசாங்கம் என்றால் என்ன?

—————————————-

அரசியல் அமைப்பின் சரத்து மூன்றின் பிரகாரம் ‘ மக்களின் இறைமை என்பது அரச அதிகாரம்,அடிப்படை உரிமை, வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்குகிறது. ஆனால், அரச அதிகாரம் என்றால் என்ன என்பது வெளிப்படையாக (expressly) குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம் சரத்து 4, சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை அதிகாரம் என்பவற்றைப்பற்றிப் பேசுகிறது. இவற்றை அரச அதிகாரமென தெளிவுபடுத்திக் கூறாமல் இவை மக்களின் அதிகாரம் என்றும் இவை மக்களின் இறைமை என்றும் குறிப்பிடுகிறது.

மேலே கூறப்பட்ட ‘அடிப்படை உரிமை, வாக்குரிமை’ என்பன இந்த மூன்றிற்கு மேலதிகமாக வேறாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது இந்த இரண்டும் மேலே குறிப்பிடப்பட்ட மூன்றிலிருந்தும் வேறுபட்டிருப்பதனால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்றும் ( சட்டவாக்க, நிறைவேற்று, நீதுத்துறை அதிகாரங்கள்) அரச அதிகாரங்கள் என்ற வார்த்தைப் பதத்திற்குரியவை; என்பது தெளிவாகின்றது.

அதேநேரம், சரத்து 43(1) நாட்டினுடைய “அரசாங்கத்தின்” கட்டுப்பாடும் இயக்கமும் அமைச்சரவையின் பொறுப்பில் இருக்கும்; எனக் கூறுகிறது. ஜனாதிபதி அந்த அமைச்சரவையில் ஒரு அங்கத்தவராகவும் அதன் தலைவராகவும் இருப்பார்; எனவும் கூறுகிறது. 

மறுபுறம், சரத்து 49(2), அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படும்பொழுது அமைச்சரவை கலைந்து விடுகிறது; எனக்கூறுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட சரத்து 43(1)&(2) மற்றும் 49(2) ஆகிவற்றின் கூட்டுப்பொருள் என்னவென்றால் “ அமைச்சரவையே அரசாங்கம்” என்பதாகும்.

இங்கு ஒரு முரண்பாடு தெரிகிறது. அதாவது, சரத்து 4 சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறையும் இணைந்ததே ‘அரசாங்கம்’ என்ற அர்த்தத்தைத்தர, சரத்துக்கள் 43 மற்றும் 49 அமைச்சரவையே ‘அரசாங்கம்’ என்ற அர்த்தத்தைத் தருகிறது.

உண்மையில் இது முரண்பாடு அல்ல. பொதுவாக, சில சொற்களுக்கு general meaning, specific meaning என்று இருக்கின்றது. இங்கு முந்தையது general meaning உம் பிந்தியது specific meaning உம் ஆகும். இது தொடர்பாக விரிவாக எழுதலாம். நமது தலைப்பிற்கு அது அவசியமில்லை.

சரத்து 49(1) இன் பிரகாரம் பிரதமர் பதவி இழக்கின்றபோது அமைச்சரவை கலைந்துவிடுகின்றது. அதாவது மேலே குறிப்பிட்ட விளக்கத்தின்படி அரசாங்கம் கலைந்துவிடுகின்றது. மறுவார்த்தையில் கூறினால் பிரதமராக ஒருவர் பதவி வகிக்காதபோது நாட்டில் அரசாங்கம் இல்லை.

இந்தப்பின்னணியில் அவ்வாறான சூழ்நிலையில் மொத்த அரச அதிகாரமும் ஜனாதிபதிக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுகின்றது.

மேலே குறிப்பிட்ட 43(1) மற்றும் (2) ஐக் கூர்ந்து அவதானித்தால் அவ்வாறு மொத்த அதிகாரமும் ஜனாதிபதிக்கு செல்லாது; என்பது புரியும். ஏனெனில் மேற்படி சரத்து 43 தெளிவுபடுத்துவது என்னவெனில் ஜனாதிபதி என்பவர் ஒருபோதும் அரசாங்கமில்லை. அவர் அமைச்சரவையில் ஓர் அங்கத்தவரும் அதன் தலைவரும் மட்டுமே. 

அதாவது, அவர் அரசாங்கத்தின் ஓர் அங்கத்தவரும் அதன் தலைவருமே தவிர, அவரே அரசாங்கம் இல்லை. அமைச்சரவையின் பொறுப்பில்தான் அரசாங்கம் இருக்கிறது. பிரதமர் இல்லாவிடின் அமைச்சரவை இல்லை. அமைச்சரவை இல்லாவிடின் அரசாங்கம் இல்லை.

சுருங்கக்கூறின்,ஜனாதிபதி இருந்தாலும் பிரதமர் இல்லாவிடின் அரசாங்கம் இல்லை. அரசாங்கம் இல்லாத நிலையில் அரசாங்கத்தின் அதிகாரம் அரசாங்கமாக இல்லாத ஜனாதிபதிக்கு செல்லாது. 

பிரதமரை நியமித்த பின்புதான் அமைச்சர்களை நியமிக்கமுடியும். அமைச்சர்களை நியமிக்கும்போது தனக்கு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பாக்கிக்கொள்ளமுடியும். மட்டுமல்ல, எந்தவொரு அமைச்சருக்கும் வழங்காத அமைச்சுக்கள் ( the subjects and functions and the ministries to be in his charge for that purpose) ஜனாதிபதியின் பொறுப்பின்கீழ் இருக்கும். 

இவையெல்லாம் சரத்து 44 இன் கீழ் அமைச்சர்களை நியமிக்கும்போதுதான் சாத்தியமாகும். ஏனெனில் சரத்து 44(2) கூறுகிறது, ஜனாதிபதி தனக்கு அமைச்சுக்களை ஒதுக்குவதோ, நியமிக்கப்படாத அமைச்சுக்களுக்கு பொறுப்பாக இருப்பதோ சரத்து 44 இன் கீழ் அமைச்சர்களை நியமிக்கும்போதுதான்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது; அவ்வாறாயின் ஒரு அமைச்சரையாவது நியமிக்கவேண்டுமா? அல்லது பிரதமருக்கு ஏதாவது ஒரு அமைச்சுப் பொறுப்பைக்கொடுத்தால் போதுமா? ஏனைய அமைச்சுக்கள் இயல்பாக ஜனாதிபதியின்கீழ் சரத்து 44(2) இன்படி வருவதற்கு; என்பதுதான் அந்தக்கேள்வி. இதற்கு இரு புறமும் விவாதிக்கலாம். அதற்குள் இங்கு நான் செல்லவிரும்மவில்லை.

அதேநேரம், 43(3) கீழ் பிரதமரை நியமிக்காமல் 44 இன் கீழ் அமைச்சர்களை நியமிக்கமுடியாது. அதாவது 44(1) மற்றும் (2) ஐச் செயற்படுத்துவதற்கு 43(3) செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றின் மொத்த சுருக்கம், பிரதமர் இல்லாதபோது அரசாங்கமில்லை. அரசாங்கமில்லாதபோது பாதுகாப்பு அமைச்சைத்தவிர வேறு எந்தவொரு அமைச்சும் ஜனாதிபதியின் பொறுப்பின்கீழ் வரமுடியாது.

மறுபுறம், ஒவ்வொரு அமைச்சுக்கும் நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர் அமைச்சின் செயலாளர். மட்டுமல்ல, அவர்தான் அவ்வமைச்சுக்கும் அதன்கீழ் வரும் நிறுவனங்களுக்கும் chief accounting officer. அவ்வாறான செயலாளர்கள் அனைவரும் அமைச்சரவை பதவி இழந்ததும் பதவி இழந்துவிடுவார்கள்.

எனவே, இலங்கை அமெரிக்கா அல்ல. இலங்கையில் பிரதமருக்கென்று விசேட அதிகாரமில்லாதபோதும் மொத்த அரசும் இயங்குவது பிரதமர் என்ற அச்சாணியில்தான். எனவே, பிரதமர் ராஜினாமா செய்தால் உடன் புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அரசாங்கமே இல்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.