சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடாத்துவதற்கு தயார் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் நிமல் புஞ்சிஹேவா இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

"தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆனைக்குழு இருக்கின்றது. எந்த நேரத்திலும் தேர்தலை நடாத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாம் என்ன தேர்தலை நடத்துவது? சுதந்திரமானதும் மற்றும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதென்றால், இந்த நேரத்தில் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா? மக்கள் மிகுந்த வேதனையிலும் துன்பத்திலும் சிக்கித் தவிக்கும் காலம் இது. மக்கள் இப்போது பெரும்பாலும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளிலேயே இருக்கின்றனர். அப்படியென்றால் நாம் வாக்கெடுப்பு நிலையங்களை எரிபொருள் வரிசைகளுக்கு அருகில் வைப்பதா?

மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நீங்கள் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். எனவே அதற்கு 6 மாதங்கள் எடுப்பதா? எவ்வளவு காலம் எடுக்கும்? என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. இதனை தீர்த்து எங்களுக்கான சந்தர்ப்பத்தை தாருங்கள். பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால், பாராளுமன்றத்தின் முன்மொழிவு நிறைவேற்றப்பட வேண்டும். பெரும்பான்மையினரின் விருப்பத்தின் பின்னர் ஜனாதிபதி அதனை ஏற்க வேண்டும். அப்போதுதான் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் எமக்கு கிடைக்கும்.

பின்னர் அதற்கான நிதி திரட்டும் வழியையும் பாராளுமன்றம் பொறுப்பேற்கும் என்று நாம் நம்புகின்றோம்"என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.