கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரி மாளிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிக்கு ஒருவர் உட்பட் 8 ஆண்களும், பெண்ணொருவரும், அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
60 வயதுடைய குறித்த நபரிடம் இருந்து 9 பித்தளை அலங்கார பொருள் மற்றும் பெரிய பயணப் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்தக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவரை கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட 24 வயதான பிக்கு, பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருவதுடன், மற்றைய சந்தேக நபர் ஓபநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
அத்துடன், கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை நுகேகொட வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மே 9ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை பேருந்திலிருந்து இறக்கி தாக்குதல் நடத்தி, பணப்பையை திருடிய பின்னர் அவரை பேரே வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் கண்ணீர் புகை குண்டுகளை திருடியமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டங்களை கூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 38 மற்றும் 42 வயதான, அங்கொடை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.