(எம்.எம். இஸ்மதுல் றஹுமான்)


விண்வெளி வீராங்கணையாகும் முயற்சியில் எஸ்டோன் விண்வெளி ஆராய்ச்சிக் கல்லூரில் இணைந்து கல்வி பயில எமது இலங்கை நாட்டைச் சேர்ந்த பாத்திமா ஸஹ்தா ஹாரூன் என்ற 20 வயதுடைய இளம் பெண்ணொருவர் தெரிவாகியுள்ளார்.

புத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் கொட்டராமுல்லை கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா ஸஹ்தா ஹாரூன் ஆகிய 20 வயதான இப் பெண், தனது கனவை நனவாக்க  விரைவில் அமெரிக்கா பயணமாகின்றார்.

இவரின் தந்தை துபாய் நாட்டில் வேலை செய்வதினால் அங்கு வாழ்ந்த இவர், அங்கு இலங்கை பாடசாலையில் கல்வி கற்ற நிலையில், இலங்கை வந்து 9ஆம் தரத்தில் செய்லான் சர்வதேச பாடசாலையில் இணைந்து க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வியைத் தொடர்ந்தார். சாதாரண தரத்தில் பாடசாலையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற இவர், தனது உயர் கல்வியை லைசியம் சர்வதேச பாடசாலையில் தொடர்ந்தார்.

பாடசாலையில் கல்வி பயின்ற காலப்பகுதியில் தனது பாடவிதானத்தில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும், எழுத்துத் துறையிலும், பேச்சு வன்மையிலும் சிறந்து விளங்கியதாகவும் பாடசாலை விவாதம் குழுவில் திறம்பட செயற்பட்டதாகவும் பல வெற்றிக் கிண்ணங்களை பெற்றதாகவும் செய்லான் சர்வதேச பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம். முஜிரிப் தெரிவித்தார்.

ஸஷ்தா சிறுவயதிலிருந்தே விண்வெளித் துறையில் கல்வி கற்க கனவு கண்டதாகவும் 3ஆம் வகுப்பில் கல்வி பயிலும் போதே விண்வெளி  தொடர்பான நூல்களை வாசிப்பதில் ஆர்வமாக இருந்ததாகவும், சந்திரனுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் தெரியவருகின்றது. தனது தந்தையின் உற்சாகத்திலேயே இந்த ஆர்வம் தனக்கு ஏற்பட்டதாக ஸஹ்தா கூறியதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர் துபாய் நாட்டில் உள்ளதனால் அவர்களை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஒரு முஸ்லிம் பெண் விண்வெளித்துறையில் தன்னை ஈடுபடுத்த எடுத்துள்ள இந்த முயற்சியை சகலரும் பாராட்டுவதுடன் அவரின் முயற்சி வெற்றிபெற பிரார்த்திக்கிறோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.