அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.

"நெருப்புடன் விளையாடுகிறார்" என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை.

கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி.

"நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை" என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

தைவானில் வந்திறங்கிய நான்சி பெலோசி, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெலோசியின் விமானம் தைவானில் வந்திறங்கியபோது, சீனாவின் பெருநிலப்பரப்புக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தைவான் ஜலசந்தியை சீனாவின் ராணு விமானங்கள் கடந்து சென்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் தைவான் அப்போது அதை மறுத்தது. பின்னர் 20 ராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் வந்ததை ஒப்புக் கொண்டது.

தைவானை பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, ஒரு நாள் அதனுடன் ஒன்றிணையும் என்று நம்புகிறது. தைவான் விவகாரத்தில் தலையிட்டால் ஆயுதப்படைகள் "சும்மா நிற்காது" என்று முன்னர் எச்சரித்தது.

விமானம் வந்த ஒரு மணி நேரத்திற்குள், தனது ராணுவம் இந்த வார இறுதியில் தைவானைச் சுற்றி வான் மற்றும் கடலில் தொடர்ச்சியான ராணுவப் போர் ஒத்திகைகளை நடத்தும் என்று அறிவித்தது. இந்தப் பயிற்சியில் உண்மையான குண்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கும் சீனா, இந்தப் பகுதிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறது.

ஏற்கெனவே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கோட்டை ஒட்டி தனது விமானங்களை சீனா நிறுத்தியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

"தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை" மதிப்பதாகவே தனது பயணம் அமைந்திருப்பதாகவும், அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி கூயிருக்கிறார்.
தைவான்

நான்சி பெலோசியின் வருகைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தைவானில் பேரணிகள் நடந்தன

தைவான் நாடாளுமன்றத்தில் அவர் இன்று உரையாற்ற இருக்கிறார். அதிபர் சாய் இங்-வென்னை சந்தித்துப் பேச இருக்கிறார்.

இதனிடையே, நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமெரிக்கத் தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே ஆழமான பொருளாதாரப் பிணைப்பு இருக்கும் நிலையில், பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவானின் பல்வேறு பொருள்களுக்கு சீனா தடை விதித்திருக்கிறது.

BBC Tamil

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.