மத்திய மலைநாட்டில் இன்று (01) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தொடருந்து மார்க்கத்தில் மண்சரிவு, மரம் முறிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொட்டகலை – தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும், ரொசெல்ல – வட்டவளை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும், வட்டவளை – கலபொட தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும், கலபடை – இங்குரு ஓயா, நானுஓயா – கிரேட்வெஸ்டன் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலும் இவ்வாறு கற்பாறை மற்றும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று காலை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த தொடருந்தும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தும் நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் தொடருந்து நிலையங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,  தொடருந்து மார்க்கம் மற்றும் பேருந்து வீதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் தொடருந்தினுள் இருக்கும் பயணிகளை அருகில் உள்ள தொடருந்து நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த இரண்டு இரவு நேர அஞ்சல் தொடருந்துகளை ரத்து செய்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.