அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக புயல் இந்தியாவைக் கடக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அந்த அமைப்பு எதிர்வரும் 9ஆம் திகதி உருவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றையதினம் (07) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.