ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை இனியும் ஒத்திவைக்க முடியாது. இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவளித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஸ்திரமான அரசாங்கத்தை ஜனாதிபதி அமைத்து அதன் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் அவர் தான் என நாமல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அவருக்கு ஆதரவு வழங்க முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் அனுபவம் அதிகம் எனவும் சர்வதேச சமூகத்தை கையாள்வதில் அவருக்கு இருந்த முதிர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்