இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவி அண்மையில் வெளியிடப்பட்ட 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 02 இலட்சத்து 72,682 மாணவர்களின் பெறுபேறுகளைத் திருடி பரீட்சை மற்றும் பெறுபேறுகளை சரிபார்க்கும் வகையில் தனியான இணையத்தள அணுகலை (web access) ஏற்படுத்திய பாடசாலை மாணவர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (08) கைதுசெய்தனர்.
பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை சரிபார்க்கும் வகையில் தனியான இணைய அணுகலை (web access) இவர் தயார் செய்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் விளைவாக இந்த மாணவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளின் பரீட்சை இலக்கம் அல்லது பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் மட்டுமே பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக உயர்தரம் உள்ளிட்ட பரீட்சை பெறுபேறுகளை சரிபார்க்க முடியும். அதுமட்டுமின்றி, பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் தேர்வு முடிவுகளை ஒருபோதும் வழங்காததன் மூலம், இரகசியத்தன்மை அதிகபட்சமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தை ஊடுருவி உயர்தர பரீட்சை பெறுபேறுகளை திருடி இம்மாணவன் உருவாக்கியுள்ள புதிய இணைய அணுகலில் (web access) பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பித்தவர்களின் பெயரை பதிவு செய்து பெறுபேறு ஆவணத்தை சரிபார்க்க முடியும்.
இந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருப்பதாக சிஐடி தெரிவித்துள்ளது. சகோதரிகளில் ஒருவர் பல்கலைக்கழகத்திலும், மற்றொரு சகோதரி உயர்தரத்திலும் கல்வி கற்று வருகிறார்.
தொழில்நுட்பம் கற்கும் பாடசாலை மாணவர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில் இம்மாணவன் ஈடுபட்டு இணையத்தளங்களுக்குள் ஊடுருவுதல் மற்றும் தரவுகளை திருடுவது பற்றிய அறிவைப் பகிர்வதுடன் சுமார் 5,000 மாணவர்கள் மத்தியில் தங்களது அறிவைப் பகிர்ந்துகொள்வதையும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை ஊடுருவி தரவுகளைத் திருடி உருவாக்கப்பட்ட புதிய இணைய அணுகல் (web access) மீது சீ.ஐ.டியினர் சைபர் தாக்குதல் நடத்தி நேற்று முன்தினம் (07) இவரை அடையாளம் காண முற்பட்டனர்.
அவரது web access க்கு நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுடன், சந்தேக நபரான மாணவர் டெலிகிராம் குழுவுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார், சைபர் தாக்குதல் நடத்தியவர்களை எப்படியேனும் அடையாளம் கண்டு தனது வலைஅணுகலை மீட்டெடுப்பார்களென்ற எண்ணத்தில் இவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார்.
சுமார் 5,000 பயனர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவிலிருந்து பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதன்மூலம் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டது.
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய இணைய அணுகலை இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக வலையமைப்பு குழுக்களில் பகிர்ந்துகொண்டு இந்த மாணவர் தனது web access ஐ விளம்பரப்படுத்தியுள்ளார். அதன் மூலம் ஏராளமானோர் தேர்வு முடிவுகளைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்னரும் ஒரு தடவை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவல் செய்து தனது இணைய அணுகல் (web access) மூலம் இவ்வாறு பரீட்சை பெறுபேறு ஆவணம் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த மாணவன் உட்பட சுமார் 5,000 மாணவர்கள் அடங்கிய குழுவைக் கொண்ட டெலிகிராம் குழு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனிய ஆகியோரின் மேற்பார்வையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயநேத்தி, சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர். பி.வி.ஐ. கயாஸ்ரீ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் கலுகல்ல, பொலிஸ் கான்ஸ்டபிள்கள் விரங்கா (68813), மகேஷ் (71191), ஜெயவர்தன (97642) ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய மாணவனை கைது செய்துள்ளனர்.