இதுவரை வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.  நேற்று (22) இதே வேலைத்திட்டத்தை நாடாளுமன்றத்தின் அடுத்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முன்வைக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது, அதிகாரசபையிடமிருந்து குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற்ற சிலர் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தவில்லை என அமைச்சர் தெரிவித்தார். பல வீட்டுக்கடன்களில் முதல் தவணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி அவர்கள் 2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிகள் வழங்கப்பட்ட 92,386 வீடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டார். அதற்குத் தேவையான தொகை 24,380 மில்லியன் ரூபா ஆகும். வீடுகளுக்கான உதவித் தொகை முழுமையாக வழங்கப்படாததால் அவர்களிடம் தவணை வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட கடன் தொகையில் மேலும் சுமார் 10 பில்லியன் ரூபா மீளப் பெறப்பட உள்ளதாகவும்  தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட உதவிகள் மற்றும் கடன் திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கடன் உதவித் தொகை மற்றும் கடன் வசூலிக்கும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்கப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் நகரத் திட்டங்கள் தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 ஆனால், நகர திட்டங்களை தயாரித்தல், வர்த்தமானி மூலம் வெளியிடுதல் போன்ற சட்ட நடவடிக்கைகள் இந்த நாட்களில் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி பிரதேசங்களைச் சேர்ந்த 272 நகரங்களில் இதுவரை 70 நகரங்களின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து நகர அபிவிருத்தித் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திரு.பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள நகர அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, அருந்திக பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.