(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னாள் நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை மீதான அதிருப்தியிணை சமூகமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருப்பதால் காலம் தாழ்த்தாமல் இயலுமான ஜனநாயக வழிகளில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு ஸ்ட்ரென்த் எம்.எம்.டி.ஏ (Strengthen MMDA)அமைப்பு முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கடந்த  (3) ஸ்ட்ரென்த் எம்.எம்.டி.ஏ அமைப்பானது நீதி அமைச்சரைச் சந்தித்தபோதே மேற்படி விடயத்தை எத்தி வைத்து, முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில்,
முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்துக்குத் திருத்தங்களை கொண்டு வருவதற்காக முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட குழுவினுடைய பரிந்துரைகளில் சமூகத்துக்கு இருக்கின்ற அதிருப்தி தொடர்பில் நீதி அமைச்சருக்குத் தெரியப்படுத்தியதோடு, அந்த அறிக்கை தொடர்பாக இருக்கின்ற விமர்சனங்களையும் முஸ்லிம் விவாக - விவகாரத்து சட்டத்தினைத் திருத்தம் செய்கின்ற போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதற்காகவும் இந்த சந்திப்பானது ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரில் 5 உறுப்பினர்களும் இணைய வழியாக 5 உறுப்பினர்களும் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், முன்னாள் நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினுடைய பரிந்துரைகளில், 

1.எமது மார்க்கத்தினுடைய வழிகாட்டல்களுக்குப் புறம்பான திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

2. அதுபோல இந்த நாட்டிலே நீண்ட காலமாக நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற எமது சமூகத்தினுடைய உரிமைகளையும் அடையாளங்களையும் இல்லாமல் ஆக்கக் கூடிய வகையில் செய்யப்பட்டிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

3. மேலும் செய்யப்படுகின்ற திருத்தங்களாவன ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவது மாத்திரமில்லாமல், வேறு புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காதவையாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது முன்மொழிக்கப்பட்டிருக்கின்ற திருத்தங்களினால் தோன்றக்கூடிய புதிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேற்சொன்ன மூன்று அடிப்படையிலும் எமது சமூகத்துக்குப் பாதகமான விடயங்களை உள்ளடக்கி இருக்கின்ற, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் சட்ட திருத்தமானது செய்யப்படக்கூடாது என்றும், அந்த அறிக்கையானது நிராகரிக்கப்பட வேண்டும் எனவும், குறித்த ஆலோசனைக் குழுவானது கலைக்கப்பட வேண்டும் எனவும் நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்தோடு, இந்தக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அறிக்கையானது பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தினுடைய அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு, இந்த அறிக்கையானது பெரும்பான்மையான முஸ்லிம்களது அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது என்ற விடயமும் நீதி அமைச்சருக்கு எத்தி வைக்கப்பட்டது.

மேற்சொன்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றும் நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை மீதான அதிருப்தியிணை சமூகமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருப்பதால் காலம் தாழ்த்தாமல் இயலுமான ஜனநாயக வழிகளில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு ஸ்ட்ரென்த் மீடியா Strengthen MMDA அமைப்பு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.