ஜனாஸா அறிவித்தல் : வைத்தியர் மாஹிர் நெளபர் காலமானார்.
 காலியை பிறப்பிடமாகவும், அனுராதபுர  போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஆகவும் கடமை புரிந்து வந்த வைத்தியர் மாஹிர் நெளபர் காலமானார்.
 சில காலம் சுகயினம் அடைந்திருந்த நிலையில் இன்று வஃபாத் ஆனார்.
 இவரின்  பிரிவு தொடர்பில் நண்பர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்...

😥மரணம் ஏன் ஜெயித்தது ?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
உன் மரணச் செய்தி கேட்டதும் 
என் பேணா எழுந்து கொண்டது. 
அது என்னிடம் கேள்வி கேட்கிறது 
அட மரணம் ஏன்டா ஜெயித்தது?
மாஹிர் !!! உன் மரணம் 
அது ஒரு வரலாற்றின் சோகக்கதை 
நோய்க்கு சவாலாக குழல் தூக்கிய உன்னை 
புற்றுநோய் வந்து பதம் பார்த்தது. 
வைத்தியர் எனும் ஏணியின் இறுதிப் 
படியில் நீ இருந்த போது 
கொடிய நோய் வந்ததால் மரணம் ஜெயித்தது .
இனி எமது ஊருக்கு ஒரு வைத்தியன் 
குறைந்து விட்டான் என்று நான் அழவில்லை 
நீ அதற்காக பட்ட கஷ்டத்தை எண்ணி அழுகிறேன். 
வறுமையில் வாடிய உன் குடும்பச் சூழல்...
தமிழ் மொழியில் படித்தால் 
வைத்தியர் ஆக முடியுமா? என்று
 நக்கலாகக் கேள்வி கேட்கும் 
காலி மக்களின் கிண்டலான கேள்வி 
அனைத்துக்கும் சரியான பதில் கொடுத்தாய் 
சகோதரனே சபாஷ் உனக்கு 
ஆனால் !!! ஆனால்!! ஏன் சகோதரனே  
எம்மையெல்லாம் அழவைத்து விட்டு 
நீ மட்டும் சென்று விட்டாய்???
மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டில் 
உன் இறுதியையும் எழுதி விட்டான் இறைவன் 
கண்ணீரோடு ஏங்கும் உன் குடும்பத்தினருக்கு 
இறையோனின் ஆறுதல் கிடைத்து 
சுவனப் பூங்காவில் 
உனக்கென தனியிடம் கிடைக்க 
இறைவனை வேண்டுகிறேன். 
சோகத்தில் துவண்டு தவிக்கும் உடன் பிறவாச் சகோதரன்.......
கலைமணாளன் ஹிஷாம்
இன்றைய நாளை எப்படிக் கடத்தப் போகிறேன் எனத் தெரியவில்லை;
இறைவனைத் தவிர வேறு யாரிடம் என் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவது எனவும் புரியவில்லை!
இறைவன் எதிர்பாராவிதமாக எனக்குத் தந்த ஒரு அன்புச் சகோதரனை, என்னிடமிருந்து எதிர்பாராவிதமாகவே பறித்துக் கொண்டான்!
2019 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு அறிமுகமான அவனை, நேரில் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கவில்லை;
அவனதோ, எனதோ உயிர் பிரிவதற்கிடையில் அவனை ஒரு முறை சந்தித்துவிட வேண்டும் என எண்ணிக் கொண்டு, இன்றிரவே காலிக்குச் சென்றுவிட வேண்டுமென எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்!
ஆனால் இறைவனின் ஏற்பாடோ வேறுபட்டது;
நான் ஒருவன் இருக்கிறேன் மறந்துவிடாதே, என்பதை அவன் அடிக்கடி நமக்கு ஞாபகமூட்டுகிறான்!
அவனை இந்தக் கொடிய புற்றுநோய் ஆக்கிரமித்திருந்திருக்காவிட்டால், இன்று அவன் ஒரு மருத்துவனாக நம் மத்தியில் நடைபயின்றிருப்பான்;
ஆயிரம் கனவுகளோடு அவன் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டில் நுழையவிருந்த தறுவாயில், இந்தக் கொடிய நோய் அவனைப் பிடித்துக் கொண்டது.
அன்றிலிருந்து அவன் அனுபவித்த ஒவ்வொரு சிரமத்தையும், அவ்வப்போது என்னோடு பகிர்ந்து கொள்வான்;
அவன் அருகில் நான் இல்லாவிடினும், அவனது கஷ்டங்கள் ஒவ்வொன்றின் போதும் அவனது ஆறுதலாய் நானிருந்திருக்கிறேன்!
பலமுறை அவனும், நானும் ஒரு தாய் வயிற்றில் பிறந்திருக்கக் கூடாதா? அல்லது அவனும், நானும் ஒரு ஊரிலேனும் பிறந்திருக்கக் கூடாதா என நான் எண்ணி வருந்தியதுண்டு!
சிலமுறை நாம் சந்திப்பதற்கான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்திய போதும், அவை சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டன!
எனினும் கடந்த றமழானில் நாம் இருவரும் கலந்துரையாடிய பிரதான விடயம் இது தான், "றமழான் முடிந்த கையோடு உன்னை நான் பார்க்க வருவேன் இறைவன் நாடினால், அதற்கான வாய்ப்புக் கிடைக்காவிட்டால் நிச்சயம் உன்னை நான் சுவனத்தில் சந்திப்பேன்"
நான் அவனை உயிரோடிருக்கும் போது சந்திக்க மாட்டேன் என்பதை அறிந்து தானோ என்னவோ, சென்ற வெள்ளிக்கிழமை அவனது தற்போதைய புகைப்படத்தையும், நேற்று முன்தினம் அவனது குரல்பதிவையும் எனக்கு அனுப்பியிருந்தான்!
அவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்தும், கேட்டும் எனது இன்றைய நாள் கழிந்து கொண்டிருக்கிறது!
தம்பி!
நீ பட்ட கஷ்டங்கள் போதும்!
இறைவன் உன்னோடு அதிகமான அன்பு வைத்திருக்கிறான்;
அதனால் தான் உன்னை அவன் விரைவாக அழைத்துக் கொண்டான்!
தம்பி!
நீ முந்திவிட்டாய்;
நானும் உன் பின்னால் வரக் காத்திருக்கிறேன்!
உனக்கு நிச்சயம் இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸௌப் பரிசளிப்பான்!
தம்பி!
உன்னை நான் நேரில் சந்தித்துப் பேசுவதாய் நீ கனவு கண்டதாய்ச் சொன்னாயே!
நிச்சயம் நான் அந்தக் கனவை நனவாக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்;
அதற்காக நான் இனி இருக்கும் காலமெல்லாம் ஜன்னத்துல் பிர்தௌஸிற்கு வரப் பாடுபட வேண்டும்!
தம்பி!
நீ உயிரோடிருக்கும் போது, உன்னைச் சந்திக்கத் தவறிய இந்தப் பாவியை நீ மன்னித்துவிடு!
உனக்காகப் பிரார்த்திக்காமல் என் நாட்கள் விடிந்ததில்லை;
இனியும் விடியாது! இன்ஷா அல்லாஹ்!
உனக்காய்ப் பலநூறு அன்பர்களைப் பிரார்த்திக்கச் செய்து,
உன் மீதிருக்கும் அன்பிற்கு அவற்றைக் காணிக்கையாக்க வேண்டும் எனும் ஒரே நோக்கில் தான் இப்பதிவை இடுகிறேன்!
என் தம்பி மாஹிருக்காய் ( Mahir Nawfer ) மனமிரங்கிப் பிரார்த்தியுங்கள்!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்!

தில்ஷான் நிஷாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.