⏩ இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் 101 கிராமங்கள் நிர்மாணிக்கப்படும்...
⏩ இதில் 07 கிராமங்கள் ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன...
⏩ நிர்மாணிக்கப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 2400...
⏩661 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன...
⏩ மீதியுள்ள 338 வீடுகளை உடனடியாக கட்டுவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தல்...
நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாத்தளை, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய கிராமங்களில் வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2400 ஆகும். எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்திய உதவி வீட்டுத் திட்டம்
கட்டங்களில் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வீடமைப்புத் திட்டம் முதலாவது திட்டமாகும். அங்கு, ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகள் கொண்ட மாதிரி கிராமம் கட்டப்படும். இதன் கீழ் நாடளாவிய ரீதியில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இரண்டாவது திட்டம் வட மாகாணத்தில் இந்திய உதவி வீட்டுத்திட்டம் ஆகும். வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி 24 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும். இதன் கீழ் கட்டப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 600 ஆகும்.
மூன்றாவது திட்டம் தென் மாகாணத்தில் இந்திய உதவி வீட்டுத் திட்டம். கிராமசக்தி வீட்டுத் திட்டம் என்று பெயரிடப்பட்ட இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 52 மாதிரி கிராமங்கள் கட்டப்பட உள்ளன. இதன் கீழ் கட்டப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1,200 ஆகும்.
இந்த திட்டம் இந்திய அரசு வழங்கும் நிதியில் செயற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1200 மில்லியன் ரூபாவாகும். அதில் 780 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் 419 மில்லியன் ரூபா வீடுகளுக்காக பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா மற்றும் திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 100,000/= உதவித் தொகையாக மொத்தம் 6 இலட்சம் ரூபா மீளப்பெற முடியாத அடிப்படையில் வழங்கப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
முனீரா அபூபக்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக