⏩ கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தல்கள்...

⏩ தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களில் 09 திட்டப்பணிகள் நிறுவன சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளன...

⏩ நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் தற்போதுள்ள சுற்றறிக்கைகள் காரணமாக மேலும் 15 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன...

⏩  24 வேலைத்திட்டங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது...

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை துரிதமாக  மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்தத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த 24 திட்டங்களில் 09 திட்டங்கள் பல்வேறு தொடர்புடைய நிறுவன சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் 56,529 மில்லியன் ரூபாவாகும். அந்த 09 திட்டங்களுக்கு சுமார் 1,180 மில்லியன் ரூபாய்கள் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது. இன்னும் 14 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மொத்த நிதித் தேவை 55,335 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய நகர அபிவிருத்தி அதிகார சபை, ஹொரணை பிரதேசத்தில் பொரளை வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு 55,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் எண்ணக்கருவாக  உள்ளதாலும், சிறை வளாகத்துக்கான இடம் மற்றும் தேவைகள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாததாலும், நிதி ஒதுக்கீடு இல்லாததாலும் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
 எவ்வாறாயினும், இத்திட்டத்தை தனியார் துறையுடன் இணைந்து கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

நிறுவனப் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ள 09 திட்டங்களில் எஞ்சிய 08 திட்டங்களுக்கு 335 மில்லியன் ரூபா மட்டுமே தேவைப்படுகிறது. மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, புகையிரத திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களுடனான இந்தத் திட்டங்களுக்கான வசதிகளை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப வேலைத்திட்டங்கள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியால் ஒப்பந்ததாரர்கள் எதிர்கொண்டுள்ள மூலப்பொருட்களின் விலை உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடுகள், எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி போன்ற காரணங்களால் எஞ்சிய 15 திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் பெறுமதி 10,451 மில்லியன் ரூபாவாகும். யாழ்ப்பாண நகர மண்டப நிர்மாணத் திட்டமே மிகவும் பெறுமதியான திட்டமாகும். இத்திட்டத்தின் பெறுமதி 3,769 மில்லியன் ரூபாவாகும். இதற்காக ஏற்கனவே 1,033 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய கட்டுமானத்திற்கு தேவையான தொகை 2,536 மில்லியன் ரூபாவாகும். நிறுத்தப்பட்டுள்ள ஏனைய 14 திட்டங்களில் 02 திட்டங்கள் கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களாகும். இந்த 02 திட்டங்களுக்காக 2,438 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 02 திட்டங்களின் அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகள் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபை மேலும் தெரிவிக்கின்றது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எஞ்சியுள்ள 12 திட்டங்கள் திறைசேரி நிதியின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்கான நிதியை மீள ஒதுக்குவது தொடர்பில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நிதி அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளார். இதற்கு மேலதிகமாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலும் இந்த நிதித் தேவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேவையான ஒதுக்கீடுகள் கிடைத்தவுடன் இத்திட்டங்களை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.